Header Ads



“முள்ளிவாய்க்காலில் இருதலைக்கொள்ளி எறும்பாகிய வன்னித்தமிழர்கள்”

(கலாநிதி எம். எஸ். அனீஸ், சிரேஷ்ட விரிவுரையாளர், அரசியல் விஞ்ஞானத்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்) 

இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற தமிழீழத்தை முன்னிறுத்திய ஆயுதப் போராட்ட வரலாறானது முள்ளிவாய்க்காலின் சோகம் மற்றும் பேரவலங்களுடன் கூடிய முடிவுகளுடன் முற்றுப்பெற்று நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில், ஒருபுறம் வழமைபோலவே தென்னிலங்கையில் யுத்த வெற்றியைக் கொண்டாடி இராணுவ வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வையும் சிங்கள பெரும்பான்மை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பணியையும் அரசாங்கம் செவ்வனே நிறைவேற்றி முடித்துள்ள அதேநேரம், மறுபுறமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள உறவுகள் மற்றும் இனபந்துக்கள் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த தமிழ் மக்களுக்காக தமது அஞ்சலியைச் செலுத்தி தமது துயரங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்கள். அதேகணம் சிலர் தமது தமிழீழ உணர்வுகளைப் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு நிகழ்வாகவும் இதனை பயன்படுத்தியுள்ள அதேவேளை, வேறு சிலரோ இந்த சந்தர்ப்பத்தை தமது சுய அரசியல் இலாபங்களை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஈட்டிக்கொள்வதற்கான எத்தனமாகவும் பிரயோகித்தனர்.  

எனினும் இந்த இறுதி யுத்தத்தின்போது நடந்த சில மறைமுக நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை யாருமே பேசாமலும் ஆராயாமலும் இருப்பது பல சந்தேகங்களை பலர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறானதொரு விடயத்தை முன்னிறுத்திய ஓர் வரைவே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். அதாவது இறுதி யுத்தத்தின்போது யுத்த பணயக்கைதிகளாக விடுதலைப் புலிகளினால் பிடித்துவைக்கப்பட்ட மூன்று இலட்சத்திற்கும் அதிகமான “வன்னித் தமிழர்களின்” அவலத்தின் பின்னணிகளே இங்கு உட்படுத்தப்படவிருக்கும் ஆய்வின் கருவாகும். 

வன்னித் தமிழர்களின் வரலாறு பற்றி கூறுகையில் இலங்கையின் புகழ்பெற்ற வரலாற்றுத்துறை பேராசிரியரான எஸ். பத்மநாதன் அவர்கள் தனது  “வன்னியர்” எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “பொலநறுவைக் காலத்திலும் (993-1215) அதன் பின்பும் தென்னகத்திலிருந்து வன்னியர் ஈழநாட்டிற்கு வந்தனர். ஈழத்தில் வன்னியர்வசமிருந்த படைப்பற்றுக்கள் பல வன்னிமைகள் தோன்றுவதற்கு ஏதுவாயிருந்தன. பொலநறுவை அரசு அழிவுற்றதும் வன்னியநாடுகள் என வழங்கிய பல குறுநில அரசுகள் எழுச்சிபெற்றுப் பல நு}ற்றாண்டுகளாக ஈழ வரலாற்றிலே சிறப்பிடம் பெற்றிருந்தன. இவை வடஇலங்கையிலும் மேற்கிலே சிலாபம், புத்தளம் முதலிய இடங்களிலும் கிழக்கிலே திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் வளர்ச்சியடைந்திருந்தன”. வட இலங்கையை பொறுத்த வரையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியின் வட பிரதேசம் தவிர்ந்த ஏனைய நிர்வாக மாவட்டங்களான வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் என்பன பொதுவாக இந்த “வன்னிப்பெருநிலம்” எனும் பகுதிக்குள் உள்ளடக்கப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் தெற்கில் காணப்படும் பெரும் பிரிவும் இன்றைய வன்னி எல்லைக்குள் தான் வருகின்றது.

ஏறத்தாள 7,650 சதுர கிலோமீற்றர் பரப்பளவை இந்த வன்னிப் பிரதேசம் கொண்டுள்ளது. இந்த நிலப்பரப்பானது ஏறத்தாள 4,200 சதுர கிலோமீற்றர் அடர்ந்த காடுகளைக் கொண்டுள்ளது. பல நூற்றுக்கணக்கான சிறிய மற்றும் பெரிய குளங்களையும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர் நிலங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்தப் பிரதேசம் வளம் கொழிக்கும் ஒரு பிரதேசமாகும். இதுவே “வன்னிப்பெருநிலம்” எனவும் இந்த காட்டுப்பிரதேசமே “வன்னிக்காடு” எனவும் அழைக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகள் தமது பிரதான மறைவிடமாகவும் யுத்த களமாகவும் வன்னியை தெரிவு செய்ய இதுவும் ஒரு முக்கிய காரணியாகும்.  மேலும் இந்த வன்னி மண்ணில் வாழும் தென்னிந்தியாவின் வன்னியர் பரம்பரையில் வந்த வன்னித் தமிழர்கள் தமது வீரத்திற்கும், யுத்தோபாயங்களுக்கும், தியாகங்களுக்கும், மற்றும் நம்பிக்கைக்கும் வரலாற்று ரீதியாகவே பேர் பெற்றவர்கள். இத்தகைய பெருமைக்குரிய பின்புலமே விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் இந்த வன்னி இளைஞர்கள் (பல தளபதிகள் உட்பட) பல சாதனைகளை போராட்ட களங்களிலே புரிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுதலைப் போராட்டத்தை ஒரு சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதற்கு வழிவகுத்திருக்கலாம். 

ஆரம்ப காலங்களில் வன்னியர்களை பெருமளவு கொண்டிருந்த இந்தப் பிரதேசங்கள் காலப்போக்கில் இடம்பெற்ற குடித்தொகை பரம்பல் மாற்றங்கள் காரணமாகவும் சுதந்திரத்தின் பின்னரான இலங்கை ஆட்சியாளர்களின் குடியேற்ற கொள்கைகளினாலும் பல ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் இப்பிரதேசங்களில் குடியேறுவதற்கு ஏதுவாக அமைந்தது. மேலும் பல நூற்றாண்டு காலமாக இந்த வன்னி மண்ணிலே தென்னிந்தியாவிலே இருந்து வந்த முஸ்லிம்களும் அரேபியர் வம்சாவழி வந்த முஸ்லிம்களும் குறிப்பிடும் அளவில் வாழ்ந்து வந்தனர். மற்றும் இந்திய தோட்டத் தொழிலாளர்களாக வந்த இந்திய தமிழர்கள் போன்றோரையும் இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர் இந்த வன்னி மண் தனது எல்லைகளுக்குள் சிறிது சிறிதாக உள்வாங்கியிருந்தது.

 எனினும் 1970 களின் பிற்பகுதிகளில் ஆரம்பித்த ஆயுதம் தரித்த விடுதலைப் போராட்டத்தின் காரணமாகவும் விடுதலைப் புலிகளின் தமிழ் இன மேலாதிக்க கொள்கைகளினாலும் இப்பகுதிகளில் இருந்த முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஏற்கனவே தென்னிலங்கையை நோக்கி ஒன்றில் இடம் பெயர்ந்து இருந்தனர் அல்லது பலாத்காரமாக இடம் பெயர்க்கப்பட்டிருந்தனர். இதன் காரணமாக இறுதி யுத்தம் நடந்த வேளை வன்னி பெருநிலப்பரப்பில் வன்னியர் எனப்படும் வன்னித் தமிழர்களும் காலத்திற்கு காலம் தென்னிலங்கையில் இருந்து வந்து வன்னியில் குடியேறியிருந்த இந்திய தமிழர்களுமே வாழ்ந்து வந்தனர்.  இதுதவிர இந்த வன்னிப் பிரதேசத்தில் தமது தொழில் நிமித்தமும் திருமண பந்தத்தின் மூலமும் இணைந்து கொண்ட யாழ்ப்பாணத் தமிழர்களும் ஒரு சிறிய விகிதத்தில் காணப்பட்டனர். மேலும் ஒரு சிறிய பிரிவினர் யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தும் இந்த வன்னி பிரதேசத்தில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத் தக்கது. ஆனால் இந்த விகிதாசாரம் ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த எண்ணிக்கையினதாகவே காணப்பட்டது. 

அடிப்படையில் வன்னியில் வாழும் தமிழ் மக்கள் தமக்கே உரிய பல சிறப்பானதும் தனித்துவமானதுமான சமூக பொருளாதார மற்றும் கலாச்சார  கட்டமைப்புகளையும் பண்பாடுகளையும் தம்மகத்தே கொண்டிருக்கின்றனர். இந்த பண்புகள் மிகவும் தெளிவாகவே இவர்களை இலங்கையின் ஏனைய தமிழர்களிடம் இருந்து பிரித்துக் காட்டுகின்றன. பொதுவாகவே இலங்கைத் தமிழர்கள் என்ற பிரிவுக்குள் இவர்கள் அடக்கப்பட்டாலும் யாழ்ப்பாணத் தமிழர்களிடம் இருந்து மட்டக்களப்பு (கிழக்கு மாகாண) தமிழர்கள் வேறுபடுவது போலவே இவர்களும் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்ட பல தனித்துவங்களை தம்மகத்தே கொண்டுள்ளனர்.

விடுதலைப் போராட்டத்தில் பல சாதனைகளையும் சாகசங்களையும் நிகழ்த்திக் காட்டிய இவர்களின் வாழ்வில் அதே யுத்தமே பாரிய அனர்த்தத்தையும் உருவாக்கியமையானது நினைவுகளினின்றும் என்றுமே அகலா ஒரு “துன்பியல் நிகழ்வே” ஆகும். 2007 ஆம் ஆண்டு வடக்கில் தொடங்கப்பட்ட இறுதி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் தரப்பினால் இழைக்கப்பட்ட பாரியதொரு வரலாற்றுத் தவறாக பலராலும் பேசப்பட்ட ஒரு விடயம்தான் ஏறத்தாள மூன்று இலட்சத்திற்கும் அதிகமான அப்பாவி தமிழ் பொதுமக்களை தமது யுத்த பணயக்கைதிகளாக பிடித்துவைத்தமையாகும். விடுதலைப் புலிகளின் இந்த செயற்பாடானது சர்வதேச யுத்த விதிமுறைகளையும் யுத்த நெறிகளையும் மீறியதொரு நடவடிக்கையாகவும் மனிதாபிமானமற்ற ஓர் விடயமாகவும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பார்க்கப்பட்டதோடு காரசாரமான கண்டனங்களுக்கும் குறித்த இந்த விடயம் உள்ளாகியது. குறிப்பாக சர்வதேச மனித மற்றும் மனிதாபிமான உரிமைகள் ஆர்வலர்களினால் இது விடயம் தொடர்பாக அக்காலப்பகுதியில் பல்வேறு மட்டங்களிலிருந்தும் பேசப்பட்டாலும் விடுதலைப் புலிகள் வழமை போன்றே முன்னெடுக்கப்பட்ட தமது தொடர்ச்சியான செயற்பாடுகளில் எதுவித நேர்நோக்கு நகர்வுகளையும் குறித்த யுத்த குற்றங்கள் தொடர்பில் மேற்கொள்ளவில்லை. மாறாக விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் பொது மக்களின் உயிர்களை பாதுகாப்பதிலும் மேலாக தமது உயிர்களை பாதுகாத்துக்கொள்வதிலும் தமது யுத்த குறிக்கோள்களை அடைந்து கொள்வதிலுமேயே அதிக சிரத்தை கொண்டதாக அமைந்திருந்தது. பொதுமக்களை விடுதலை செய்துவிட்டு யுத்தத்தினை தொடருமாறு பலதரப்பட்ட பிரிவினர்களாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதனையுமே அவர்கள் தமது தொடர்ந்தேர்ச்சியான நடவடிக்கைகளில் உள்வாங்கிக்கொள்ள முன்வரவில்லை.

இவ்வாறு விடுதலைப் புலிகளின் பிடிக்குள் சிக்குண்டிருந்த பணயக் கைதிகள் நாளாந்தம் பல நூற்றுக்கணக்கில் இறுதி யுத்தத்தின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு மரணிக்க நேரிட்டது. அவர்களின் இறப்பிற்கான பொறுப்பினை யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருமே ஏற்கமறுத்த அதேசமயம், தமது தரப்பு நியாயங்களை நிரூபிக்க பல பிரயத்தனங்கள் கற்பிதப்படுத்தப்பட்டன. விடுதலைப் புலிகளின் யுத்த நடவடிக்கைகளே இம்மக்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது எனவும் அவர்களின் பொதுமக்களுடன் மக்களாக தாமும் கலந்துநின்று இராணுவத்தை நோக்கி முன்னெடுத்த தாக்குதலும் அதற்குப் பதிலடியாக இராணுவம் விடுதலைப் புலிகளை இலக்குவைத்து மேற்கொண்ட தாக்குதலே அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களைக் காவுகொண்டது எனவும் அரச தரப்பில் காரணம் கூறப்பட்டது. அதாவது அந்த மக்களின் மரணங்களுக்கு விடுதலைப் புலிகளின் நெறி வழுவிய யுத்த உபாயங்களே காரணம் என அரச தரப்பு குற்றம் சாட்டியது. மறுபுறமாக, அரச படைகளினால் மிக குறுகிய தூர இடைவெளியினின்று இயக்கப்பட்ட பாரிய கனரக ஆயுதத் தாக்குதல்கள் (உதாரணமாக- மோட்டார் ரக ஷெல்கள், பல்குழல் பீரங்கிகள்) மற்றும் பரவலாக பொதுமக்கள் வாழ்விடங்களின் மீது சரமாரியாகப் பொழிந்த அரச வான்படைத் தாக்குதல்களுமே (கொத்தணிக் குண்டுகள் உட்பட) இம்மக்களின் அவலச் சாவிற்குக் காரணம் என விடுதலைப் புலிகள் தரப்பில் முறையிடப்பட்டது. யுத்தத்தின் சிலகட்டங்களில் அரச படைகளினால் இரசாயன படைக்கலங்கள் பாவனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் விடுதலைப் புலிகளினால் குற்றம் சாட்டப்பட்டது. 

இது விடயம் தொடர்பாக யுத்த முடிவினைத் தொடர்ந்து இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்” (எல் எல் ஆர் சி) அறிக்கையில், யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பினருமே பொதுமக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்துள்ளார்கள் எனினும், அரச பாதுகாப்புப் படையினர் பொதுமக்களை திட்டமிட்டவகையில் இலக்குவைக்கவில்லை என்றவாறு குறிப்பிட்டுள்ளமையும் இவ்விடத்தில் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எது எவ்வாறாயினும் இப்பொழுது அவற்றை பேசுவதினால் இழந்த உயிர்களை நாம் மீண்டும் பெறப்போவதில்லை. ஆனாலும் மிகப்பெரிய சோகம் என்னவெனில் குறைந்த பட்சம் எத்தனை உயிர்கள் அநியாயமாக சாகடிக்கப்பட்டன என்ற புள்ளிவிபரங்கள் கூட இல்லாத நிலையில் நாம் எல்லோருமே இதுவரை குறித்த இவ்விடயம் தொடர்பில் பேசிக்கொண்டு இருப்பதுதான். கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது நிச்சயமாக இந்த இழப்பு எண்ணிக்கையானது 3 அல்லது 4 இலக்கங்களுடன் முடிவடையாது 5 இலக்க எண்ணிக்கையைக் (அதாவது 10,000 க்கும் அதிகமாக) கொண்டு காணப்படுவது உறுதியாகும்.

மாவிலாற்றை மீட்கும் பணியுடன் 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட யுத்த நடவடிக்கையானது முதலில் கிழக்கு மாகாணத்தை முழுமையாக இராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. இதன் அடுத்த கட்டமாக வடக்கையும் மீட்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் (அரசாங்கத்தின் சொற்பிரயோகத்தில் “மனிதாபிமான நடவடிக்கை”) மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறையில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி தொடக்கப்பட்ட இந்த யுத்த நகர்வில்  இராணுவத்தின் படிப்படியான யுத்த வெற்றிகளும் அதனைத்தொடர்ந்த முன்னேற்ற நடவடிக்கைகளும் விடுதலைப் புலிகளை தமது நிலைகளில் இருந்து படிப்படியாக பின்வாங்கிச்செல்லும் நிலைக்குத்தள்ளியது. இறுதி யுத்தம் வலுப்பெறுவதற்கு முன்னர் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் சிறிது சிறிதாக இராணுவத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வரத்தொடங்கியிருந்தனர். எனினும் மிக அதிகமான எண்ணிக்கையினர் ஆரம்பத்தில் இராணுவ கெடுபிடிகளில் இருந்து தம்மையும் தமது உறவுகளையும் பாதுகாத்துக் கொள்வதனை நோக்காகக்கொண்டு விடுதலைப் புலிகளின் நகர்வுடன் ஒத்த திசையினதானதும் தமக்கு பாதுகாப்பான பிரதேசம் என உணரப்பட்டதும் கட்புலனுக்கு அகப்பட்டதுமான இடங்களை நோக்கியே நகர்ந்திருந்தனர். அவ்வாறு நகர்ந்த பொதுமக்கள் யுத்தத்தின் ஒரு கட்டத்தில் விடுதலை புலிகளின் இராணுவ மற்றும் யுத்த சூழ்ச்சிகளுக்குள் அகப்பட்டுக்கொண்டு முடக்கப்பட்டனர். 

தனித்து நின்று இலங்கை இராணுவத்தின் பல்முனைத் தொடர் தாக்குதல்களை எதிர்கொள்ள இயலாத ஒரு சூழ்நிலை விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டபோது தமது இறுதி ஆயுதமாக பாதுகாப்புத் தேடி தம்முடன் வந்த அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தத் தொடங்கியபோதுதான் இந்த அவலத்தின் ஆரம்பம் தொடங்கியது எனலாம். அதுவரை தமது ஆள் பலத்திலும், ஆயுத பலத்திலும் மற்றும் மரபு ரீதியான யுத்த தந்திரோபாயங்களிலும் மாத்திரம் நம்பிக்கை கொண்டிருந்த இவர்கள் இறுதியாக அவற்றின்மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்து பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்த முனைந்தமையானது இலங்கையின் ஆயுதப்போராட்ட வரலாற்றில் மிகவும் கறைபடிந்த துரதிஷ்டமான நிகழ்வாகும்.

இதற்கு முந்தைய யுத்த காலங்களில் இவ்வாறான இராணுவ முன்னெடுப்புகள் பலமுறை யாழ் குடாநாட்டில் இடம்பெற்றபோதெல்லாம் தமது மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை பலாத்காரமாகவேனும் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்த்திவிட்டு இராணுவத்தினருடன் யுத்தம் தொடுத்த விடுதலைப் புலிகள் இந்த விடயத்தில் மாத்திரம் இவ்வாறு நடந்துகொண்டமை பல கேள்விகளை  மக்களின் மனங்களிலே தோற்றுவிக்கின்றது. அதாவது முன்னைய விடயத்தில் தாம் அழிந்தாலும் தம் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என நினைத்தவர்கள் இந்த இறுதி யுத்தத்தின் போது மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை தமது பாதுகாப்பு மற்றும் வாழ்வு இருப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தார்களா? சிலவேளை கடந்த காலங்களில் இராணுவ முன்னெடுப்புகள் இடம்பெற்ற போதெல்லாம் தாம் பின்வாங்கிச்செல்லும் நிலை ஏற்படின் தமக்கான பாதுகாப்புடன் கூடியதும், பின்வாங்கிய தளங்களை மீளக்கைப்பற்றுவதற்கும் ஏற்புடைய மாற்று இடங்கள் இருந்ததனால் விடுதலைப் புலிகள் அவ்விதம் மக்களை யுத்த கேடயங்களாக பயன்படுத்தாமல் விட்டார்களா எனவும் ஒருவகையில் சிந்திக்கத் தோன்றுகின்றது. எனினும் இறுதி யுத்தத்தில் எந்த மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடினார்களோ அந்த மக்களின் உயிரை பணயம் வைத்து அவர்கள் போராட காரணியாய் அமைந்த விடயம் யாது? தாம் தப்பிப்பதற்கு இனிமேல் வழியே இல்லை என்ற நிலையிலா அந்த முடிவினை அவர்கள் எடுத்தார்கள்? அல்லது பொதுமக்களின் அவலச்சாவுகளை காட்டி சர்வதேச சமூகத்தின் அனுதாபத்தினை பெற முயன்றார்களா? அப்படியானால் அதுதான் அவர்களின் உண்மையான மறை சுயரூபமாக அதுவரை “விடுதலைப் போராட்டம்” என்ற போர்வையில் இருந்து வந்துள்ளதா? இவை விடுதலைப் புலிகளின் இந்த நடவடிக்கை தொடர்பில் வெளிக்கிளம்பும் வினாக்களாகும்.

மறுபுறமாக இந்த இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசிற்கு அழுத்தங்களை கொடுத்து யுத்தத்தை நிறுத்தி அந்த அப்பாவி பொதுமக்களை பாதுகாக்கக் கூடிய ஆற்றலும் வல்லமையும் பெற்றிருந்த ஒரேயொரு வெளிச் சக்தியாக இந்தியாவே காணப்பட்டது. ஆனால் பல்வேறு காரணிகளின் நிமித்தம் இந்தியா அக்காரியத்தில் இறங்கவில்லை. அதன் பின்னணியில் பலவிதமான அரசியல் பொருளாதார இராணுவ மற்றும் இராஜதந்திர காரணிகள் இருந்தமை யாவரும் அறிந்த விடயமே. ஆனால் இதற்கு அடுத்தபடியாக விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுத்து அந்த மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பிவிட்டு யுத்தத்தை தொடர்ந்து முன்னிறுத்தவைக்கும் ஆற்றலைக் கொண்டிருந்த ஒரேயொரு பிரிவினர் புலத்தில் வாழும் தமிழ் மக்களேயாவர். காரணம் ஆரம்பம் தொடக்கம் போராட்டத்திற்கு தமது முழுமையான பங்களிப்பை உடைமை ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் மேற்கொண்டு வந்தவர்கள் இவர்களேயாவர். அத்துடன், இறுதி நேரம் வரை புலத்தில் வாழும் இந்த தாயக சொந்தங்களையே தமது இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வெளிவருவதற்கு விடுதலைப் புலிகளும் நம்பி இருந்தனர் என்பது வெள்ளிடைமலை. 


தொடரும்

No comments

Powered by Blogger.