Header Ads



இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தெளிவாக இருக்கின்ற நிலையில்..!!

(சஹாப்தீன்)

பல்லின மக்கள் வாழும் நாட்டில் இனவாதமும், மதவாதமும் தொடருமாக இருந்தால் அந்த நாடு ஒரு நாகரிகமான மனிதக் கூட்டத்தை கொண்டிருப்பதற்கு பதிலாக அநாகரிகமான மனிதக் கூட்டங்களைக் கொண்டதொரு நாடாகவே காட்சியளிக்கும். அந்தவொரு சூழ்நிலையை நோக்கி இலங்கையும் சென்று கொண்டிருக்கின்றதா என்று இந்த நாட்டை நேசிக்கும் உள்ளங்கள் கவலை கொள்ளும் வகையிலான நிகழ்வுகளே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இன்று முஸ்லிம்களுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும் பொது பல சேன மற்றும் சிங்கள ராவய போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்களின் கலை, கலாசாரம், மதவிழுமியங்கள் போன்றவற்றை அழித்து விட வேண்டுமென்ற திட்டத்தில் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவே இருக்கின்றன. 

கடந்த வாரம் பதுளை வீல்ஸ்பாக் மைதானத்தில் இடம்பெற்ற பொது பல சேனவின் பொதுக் கூட்டத்தில் அதன் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் பேசும் போது பௌத்தர்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிகள், முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு பாதை செப்பணிடவே வருகை தந்தவர்கள். சிறுதொகை முஸ்லிம்கள் வியாபார நோக்கில் இங்கு வந்தவர்கள். அவ்வாறு இந் நாட்டுக்கு வருகை தந்தவர்கள் இந் நாட்டின் சொந்தக் காரர்கள் இல்லை. பௌத்தர்கள் இந்த நாட்டில் நிரந்தரக்குடிகள். அதனை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கமைய முஸ்லிம்கள் தமது கலாச்சாரங்களை சிங்கள பௌத்தர்களுக்கு ஏற்றவாறு பாதிப்பில்லாத வகையில் மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தார்.

இந்த நாடு தனியே பௌத்த சிங்களவர்களுக்கு மாத்திரம் என்ற கருத்து பொது பல சேனவினால் மட்டுமல்ல வேறு சில அமைப்புக்களும் காலத்திற்கு காலம் முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு உரிமையுடையவர்கள் அல்லர் என்ற கருத்துக்களை சொல்லிக் கொண்டு வந்துள்ளன. அந்த வரிசையில் பொது பல சேனவும் முஸ்லிம்களுக்கு எதிராக படம் எடுத்து ஆடிக் கொண்டிருக்கின்றது.

இந்த நாட்டில் வாழும் பௌத்தர்களுக்கு எந்த உரிமை இலங்கையின் மீது இருக்கின்றதோ அதனை விட சற்றும் குறையாத உரிமையுடையவர்களாக முஸ்லிம்களும், தமிழர்களும் இருக்கின்றார்கள். இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் வந்தேறு குடிகளல்லர். இந்த நாடு முஸ்லிம்களுக்கும் உரித்தானது என்பதற்கு நிறையவே வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

முதலில் முஸ்லிம்கள் என்றால் யார் என்று பார்த்தல் வேண்டும். அல்லாஹ்வினால் அனுப்பட்ட தூதர்களை பின்பற்றி வாழ்ந்த மக்கள் அனைவரும் முஸ்லிம்களாவர். சிலர் நினைப்பது போன்று முஹம்மது நபி (ஸல்) அவர்களை பின்பற்றி வாழுகின்றவர்கள்தான் முஸ்லிம்கள் என்ற கருத்து தவறானதாகும் என்பதனை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கையின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் முஸ்லிம்களும் பூர்வீகக் குடிகளாவார்கள். இலங்கையில் கோல்புறூக் ஆணைக் குழு சட்ட நிருபண சபைக்கு பிரதிநிதிகளை நியமித்த போது முஸ்லிம்களின் சார்பில் யாரையும் நியமிக்கவில்லை. தங்களுக்கும் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டுமென்று முஸ்லிம்கள் காலணித்துவ ஆட்சியாளர்களைக் கோரிய போது, முஸ்லிம்கள் தமிழைப் பேசுவதனால் அவர்கள் இஸ்லாமியத் தமிழர்கள் என்று சேர் பொன். இராமநாதன் கருத்துக்களை முன் வைத்தார். இதனை வன்மையாக அப்துல் அஸீஸ் போன்ற முஸ்லிம் தலைவர்கள் எதிர்த்தார்கள். இதன் காரணமாக 1889ஆம் ஆண்டு சட்ட நிருபண சபைக்கு எம்.சீ.அப்துல் ரஹ்மான் நியமிக்கப்பட்டார். இதன் மூலமாக முஸ்லிம்கள் இலங்கை நாட்டின் தேசிய இனம் என்பதனை காலணித்துவ ஆட்சியாளர்கள் எற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதனை காட்டுகின்றது.

முஸ்லிம்களை ஒரு தேசிய இனம் என்று ஏற்றுக் கொள்ளாதவர்கள் தமிழர்களிலும், சிங்களவர்களிலும் இன்று இருப்பதனைப் போன்று அன்றும் இருந்துள்ளார்கள். அப்போதெல்லாம் முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் போராடி வெற்றி பெற்றுள்ளார்கள்.

முஸ்லிம்கள் இஸ்லாமியத் தமிழர்கள் என்று சேர் பொன்.இராமநாதன் தெரிவித்த போது சேர் றாசிக் பரீட் நாங்கள் இஸ்லாமியத் தமிழர்களில்லை. எங்களது பூர்வீகம் அரேபியா என்றும், அவர்களின் சந்ததியினரே நாங்கள் என்ற கருத்தையும் அவர் முன் வைத்து முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான இனம் என்று வாதிட்டார். 

ஆனால், சேர் றாசிக் பரீட் அன்று முன் வைத்த கருத்துக்களில் ஒன்றாகிய எங்களது பூர்வீகம் அரேபியா என்பதனை ஏற்றுக் கொள்ள முழுமையாக முடியாது. ஏனெனில், வர்த்தக நோக்கத்திற்காக அரேபியர்கள் இலங்கைக்கு வந்தார்கள். அவர்களில் சிலர் இங்கேயே நிரந்தரமாக குடியமர்ந்து விட்டார்கள் என்பது உண்மை. ஆனால், அரேபியர்கள் இங்கு வருகை தருவதற்கு முன்னரே முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு. இந்த வரலாற்றைக் கருத்திற் கொள்ளாது கருத்துக்களை முன் வைக்க முடியாது. ஆதலால் இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் முழுக்க முழுக்க அரேபியர்களின் பரம்பரையினர் என்ற கருத்து ஏற்றுக் கொள்ள முடியாததாகும். பண்டைக் காலம் முதல் இன்றைய முஸ்லிம்களின் சந்ததியினர் இலங்கையில் வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள் என்றுதான் வரலாறுகள் கூறுகின்றன.

இலங்கையில் வாழுகின்ற சிங்களவர்கள் ஆரியர்களின் பரம்பரையினர். இலங்கைக்கு ஆரியர்கள் வருகை தருவதற்கு முன்னரே அரேபியர்கள் வந்து விட்டதாக 'வில்லியம் கைகர்' என்பர் குறிப்பிடுகிள்றார். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக அவர்கள் வாழ்ந்து வருகின்றமையால் வேடர்கள் ஏனைய பழங்குடிகள் போன்று அவர்களும் இந்நாட்டு குடிகளே என்று ஆராய்ச்சியாளர் கலாநிதி பாலேந்திரா குறிப்பிட்டுள்ளார்.

ஆதலால், விஜயன் தனது 700 தோழர்களுடன் இலங்கைக்கு வருகை தந்தமையானது அரேபியாகளின் வருகைக்குப் பின்னரே இடம் பெற்றுள்ளன. இந்தக் கருத்தின் படி பார்க்கின்ற போது இயக்கர். நாகர்கள் போன்று அரேபியர்களும் பூர்வீகக் குடிகளாவர்கள். அரேபிய முஸ்லிம்களின் பரம்பரையினர்தான் இலங்கை முஸ்லிம்கள். ஆகவே அவர்கள் இலங்கையை தமது தாயகமாகக் கொள்ளக் கூடாது. அவர்கள் தங்களது தாயகமான சவூதி அரேபியாவுக்குச் செல்ல வேண்டுமென்று குரல் கொடுக்கும் பௌத்த சிங்கள இனவாதிகள் மேற்படி வரலாற்றை திரிபுபடுத்தி கருத்துக்களை முன் வைப்பதனை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். இத்தகைய கருத்துக்கள் இனங்களுக்கு இடையே ஒற்றுமையின்மை வளர்ப்பதோடு, பிரிவினை வாதத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.

இலங்கை முஸ்லிம்களின் தாயகம் சவூதி அரேபியா என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், இந்த நாட்டின் மீது பௌத்த சிங்களவர்களை விடவும் குறையாத உரிமை முஸ்லிம்களுக்கு இருக்கின்றது என்பதனை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில், அரேபியர்களின் வருகைக்குப் பின்னர் இந்தியாவில் இருந்து வந்த வியஜனதும், 700 தோழர்களினதும் பரம்பரையினர் இலங்கையை தனது தாயகம் என்று கூறும் போது, விஜயனின் வருகைக்கு முதல் இலங்கைக்கு வருகை தந்த அரேபியர்களின் பரம்பரையினர் என்று கூறப்படும் முஸ்லிம்கள் இலங்கைதான் எங்களின் தாயகம் என்று ஏன் உரிமை பாராட்ட முடியாது.

மேலும், உலகில் உள்ள பெருவாரியான வரலாற்று ஆசிரியர்களினால் குறிப்பிடப்படுகின்ற மலையில்தான் உலகின் முதல் மனிதனான ஆதம் (அலை) சுவர்க்கத்தில் இருந்து இறங்கியதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. இந்தக் கருத்தின் படி பார்க்கின்ற போது, ஆதிமனிதன் ஆதம் (அலை) ஒரு முஸ்லிமாகும். ஆதலால், முஸ்லிம்கள்தான் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்று வாதிடவும் முடியும்.

மற்றொரு வகையில் பார்க்கின்ற போது, முக்குவத் தலைவனான வேதியரசனுக்கும், கரையோரத் தலைவனான மாணிக்கத்திற்கும் இடையே போர் மூண்டது. இந்தப் போரில் கரையோரத் தலைவனின் படையை எதிர் கொள்வதற்கு வேதியரசன் அச்சம் கொண்டான். இதன் காரணமாக குதிரை மலையடிவாரத்தில் வசித்து வந்த அரேபிய முஸ்லிம்களின் உதவியை முக்குவத் தலைவன் வேண்டி நின்றான். அரேபிய முஸ்லிம்களும் அவனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு போருக்கு உதவியதாகவும், அப்போரில் முக்குவர்கள் வெற்றி பெற்றதாகவும். அந்த வெற்றியை தொடர்ந்து முக்குவர்கள் இஸ்லாத்தை தழுவியதாகவும் வரலாறுகள் உள்ளன. இதன்படி பார்க்கின்ற போது இலங்கை முஸ்லிம்கள் எல்லோரும் அரேபிய பரம்பரையில் வந்தவர்களல்லர். தமிழர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் காரணமாகத்தான் சேர். பொன்.இராமநாதன் இஸ்லாமியத் தமிழர்கள் என்று அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வரலாற்றை எடுத்துப் பார்க்கின்ற போது இலங்கை முஸ்லிம்களை இரு வகைப்படுத்தலாம். ஓன்று பண்டுதொட்டு வாழ்ந்த முஸ்லிம்கள். இரண்டாவது அரேபியாவில் இருந்து வர்த்தகத்திற்காக வருகை தந்த அரேபியர்களின் பரம்பரையினர். அரேபியர்கள் வர்த்தகத்திற்காக வருகை தந்து இங்கு தங்கிக் கொண்டாலும், அவர்கள் இங்குள்ள பெண்களைத்தான் திருமணம் செய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களின் பூர்வீகம் இவ்வாறு இருக்கின்ற நிலையில் பொது பல சேனவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் முஸ்லிம்கள் இலங்கைக்கு வீதி அமைப்பு வேலைக்காக வருகை தந்தாக தனது புதிய கண்டு பிடிப்பை வெளியிட்டுள்ளார். முஸ்லிம்கள் வீதி அமைப்பு வேலைக்குத்தான் வருகை தந்திருந்தால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அமைப்பு வேலைகளில் கூடுதலான முஸ்லிம்கள் ஈடுபடல் வேண்டும். ஆனால், ஏனைய இனங்களை விடவும் குறைவான அளவிலேயே வீதி அமைப்பு வேலைகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளார்கள். தென்இந்தியாவில் இருந்து தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக காலணித்து ஆட்சியாளர்களினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் அத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள். 

வெளிநாடுகளில் தொழில்களுக்காக சில வருடங்கள் வாழ்ந்தவர்களும், அகதிகளாக தஞ்சமடைந்தவர்களும் அந்த நாட்டில் பிரஜாவுரிமை பெற்று வாழ்கின்றார்கள். அவர்களை அந்நாட்டு அரசாங்கம் தமது பிரஜையாக ஏற்று எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. இவ்வாறு பல நாடுகள் செயற்படுகின்ற போது, பண்டு தொட்டும், பல நூற்றாண்டு காலமாகவும் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களையும், தமிழர்களையும் இலங்கையின் தேசிய இனமாக ஏற்றுக் கொள்வதற்கு பௌத்த பேரினவாதிகள் மறுதலித்துக் கொண்டு வருவது அவர்களின் இனவாத சிந்தனையின் தொழிற்பாடாகவே இருக்கின்றன.

இலங்கை மன்னர்களின் ஆட்சிக் காலங்களை எடுத்து நோக்கினாலும் முஸ்லிம்களின் தாயகம் இலங்கை என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். மன்னர்களின் ஆட்சியில் முஸ்லிம்கள் மிகவும் கண்ணியப்படுத்தப்பட்டுள்ளார்கள். மன்னர்களின் ஆலோசகர்களாகவும், வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பாளர்களாகவும் வேறு பதவிகளையும் அக்கால இலங்கை மன்னர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளார்கள். 

பண்டுகாபய மன்னன் அநுராதுரத்தில் முஸ்லிம்களுக்கு காணிகளை அன்பளிப்பாக வழங்கி அவர்களை அங்கு குடியேற்றியதாக சிங்களவர்களினால் மிகவும் மதிக்கப்படுகின்ற மகாவம்சம் குறிப்பிடுகின்றது. கண்டி இராஜ்ஜிய மன்னன் முஸ்லிம்களுக்கு பல பொறுப்புக்களை வழங்கியுள்ளான். அத்தோடு, பள்ளிவாசல்கள் கட்டுவதற்கும் காணிகளை வழங்கியுள்ளான். 

சதாதிஸ்ஸ மன்னன் பாதுகாப்புக் கருதி கி.மு 137இல் தீகவாபி என்ற பிரதேசத்திற்கு வருகை தந்தான். இந்த தீகவாபியை சுற்றி முஸ்லிம் கிராமங்களே இருந்தன. இக்காலத்தில் தீகவாபி ஒரு காட்டுப் ; பிரதேசமாகவே இருந்தது. இங்கு சதாதிஸ்ஸ மன்னன் தீகவாபிக்கு வந்த போது இதன் தென்கோடியில் 07 மைல் தூரத்தில் மலூக்கான்பிட்டி (மல்கம்பிட்டி) மற்றொரு கோடியில் விசாகமலை (விசாரவட்டை) மற்றுமொரு கோடியில் ஏறுகமம் (இறக்காமம்) என்ற கிராமங்கள் இருந்துள்ளன. இக்கிராமங்களில் நூறு வீதமாக முஸ்லிம்களே வாழ்ந்துள்ளார்கள்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு இவ்வாறு தெளிவாக இருக்கின்ற நிலையில் பௌத்தர்கள் மட்டும் இந்த நாட்டின் பூர்வீக குடிகள் என்றும், முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு பாதை செப்பணிடவே வருகை தந்தவர்கள். சிறுதொகை முஸ்லிம்கள் வியாபார நோக்கில் இங்கு வந்தவர்கள் என்றும் இதனை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கமைய முஸ்லிம்கள் தமது கலாச்சாரங்களை சிங்கள பௌத்தர்களுக்கு ஏற்றவாறு பாதிப்பில்லாதவகையில் மேற்கொள்ள வேண்டுமென்றும் கருத்துக்களை முன் வைப்பது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை திரிபுபடுத்துவதற்கு எடுக்கப்படுகின்ற ஒரு முயற்சியாகும்.

ஒரு இனம் தமக்கான தனித்துவத்திற்கும், கலைகளுக்கும், கலாசாரத்திற்கும், விழுமியங்களுக்கும் ஆபத்து ஏற்படுகின்ற போது அவற்றைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த இனக் குழுமம் போராடும். இதனை உலக வரலாற்றில் காணக் கூடியதாக இருக்கின்றது. ஒரு இனக் குழுமம் தங்களின் கலை கலாசாரத்தை உறுதியாக பேணிப் பின்பற்றாவிட்டால் அவைகளை அந்த இனம் இழப்பதனை தவிர்க்க முடியாது. அந்த இனம் வேறு இனத்தின் கலை கலாசாரத்தைப் பின்பற்றிக் கொண்டிருக்கும். முஸ்லிம்கள் தங்களது கலை கலாசாரத்தை பேணிக் கொள்வதில் இறுக்கமான கொள்கைகளைக் கொண்டவர்கள். ஒரு முஸ்லிம் தம்மை மொழியால் அடையாளப்படுத்துவதில்லை. மதத்தால்தான அடையாளப்படுத்துவர். முஸ்லிம்கள் தங்களின் கலை கலாசாரத்தை மற்றொரு இனத்திற்கு ஏற்ப பின்பற்ற முடியாது. அவ்வாறு பின்பற்றினால் முஸ்லிம்கள் தங்களின் தனித்துவத்தை இழக்க வேண்டியேற்படும்.

இன்றைய நிலையில் நாட்டில் வாழ்கின்ற எல்லா இனங்களும் இந்த நாட்டின் சொந்தக் காரர்களாவார்கள். இந்த நாடு தனியே ஒரு இனத்திற்கு மட்டும் சொந்தமான நாடல்ல. நாம் எல்லோரும் இலங்கை நாட்டு மக்கள் இதனையே ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார். ஆதலால், இலங்கையின் ஐக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் எல்லோரும் உழைக்க வேண்டும். பேதங்கள் இல்லா இலங்கையைக் கட்டி எழுப்புவதற்கு நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம். இனவாத்தை ஒழிப்போம்.


4 comments:

Powered by Blogger.