Header Ads



கல்முனை மேயர் லண்டன் விஜயம் - இலண்டன் ரெட்பிரிட்ஜ் நகர மேயருடன் சந்திப்பு


(அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரத்தியேக விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை ( 23.06.2013) இலண்டன் பயணமானார். இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இலண்டன் கிளையின் தலைவர் எம்.எஸ்.ஹலீமின் ஏற்பாட்டில் நேற்று இலண்டன் ரெட்பிரிட்ஜ் நகரத்தின் மேயர் பெலிசிட்டி பேங் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின் போது கல்முனை மாநகர அபிவிருத்தி, உட்கட்டுமான வசதிகள், சுனாமியின் பின்னரான கல்முனை, திண்மக்கழிவு அகற்றல் மற்றும் சுற்றுச்சூழல் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு ரெட்பிரிட்ஜ் நகர சபையின் நடவடிக்கைகள், பயன்படுத்துகின்ற தொழில்நுட்ப யுக்திகள், மக்கள் தொடர்பாடல் முறை, நிர்வாக முகாமைத்துவ முறை, முறைப்பாட்டு முகாமைத்துவ முறை மற்றும் மாநகர சபைக்கான நிதியீட்டல் முறைமைகள் தொடர்பாக ரெட்பிரிட்ஜ் நகர முதல்வரினால் விளக்கமளிக்கப்பட்டது. இவை எதிர்கால கல்முனை மாநகர சபை நடவடிக்கைக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்முனை மாநகர முதல்வர் தெரிவித்தார். அத்துடன் ரெட்பிரிட்ஜ் மாநகர முதல்வர் கல்முனை மாநகர சபைக்கு வருகை தருவதற்கான அழைப்பினையும் சிராஸ் மீராசாஹிப் விடுத்தார்.

இதன் போது கல்முனை மாநகரசபையின் தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்று ரெட்பிரிட்ஜ் நகர முதல்வரிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சந்திப்பின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இலண்டன் கிளையின் உறுப்பினர்களான சியாத் ஏ. கபூர், எம்.ஜெசீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.