Header Ads



அரசியல் கணிதம்..!

(தம்பி)

மேற்கத்திய நாடுகளில் 13 என்பதை மோசமானதொரு எண்ணாகப் பார்க்கின்றார்கள். அது – பேய் மற்றும் ஆவிகளோடு தொடர்புபட்ட இலக்கம் என்று மேற்கத்தியர்கள் நம்புகின்றனர். 13 ஆம் இலக்கத்தினைக் கொண்ட வீடு, வாகனம், ஹோட்டல் அறை என்று - எதனையும் அவர்கள் விரும்புவதில்லை. 

யேசு கிறிஸ்துவும், அவரின் சீடர்கள் 12 பேருமாக மொத்தம் 13 பேர் கலந்து கொண்ட ராப்போசனத்தின் போது, யூதாஸ் எனும் சீடரால் - யேசு காட்டிக் கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டார் என்று கிறிஸ்தவம் கூறுகிறது. இதிலிருந்துதான் 13 எனும் எண் குறித்த மோசமான மனப்பதிவு மேற்கத்தியர்களிடையே உருவானதாக ஒரு கதையுண்டு.

ஆனால், எண்களில் அதிஷ்டமுமில்லை, கெடுதியுமில்லை. அப்படிப் பார்க்கவும் கூடாது. எண்களை நல்லது கெட்டது எனப் பிரித்துப் பார்ப்பது மூட நம்பிக்கையாகும் என்பதே பொதுவான கருத்தாகும்.  

ஆனாலும், நமது நாட்டில் நடக்கும் சில கூத்துக்களைப் பார்க்கையில், 13 எனும் இலக்கமானது பேய்களோடு தொடர்புபட்ட எண் போலவே தெரிகிறது. இலங்கையின் அரசியல் களத்தில் 13ஐ வைத்துக் கொண்டு சிலர் பேயாடுகின்றனர், வேறு சிலர் பேயாட்டுகின்றனர். 

13 என்று நாம் இங்கு குறிப்பிடுவது – அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டமாகும். இந்தத் திருத்தச் சட்டத்தின் மூலமே மாகாணசபை முறைமை இலங்கையில் உருவாக்கப்பட்டது.

வலுவிழக்கும் பதின்மூன்று

உண்மையில், சிறுபான்மை இனத்தவர்ளுக்காகவே மாகாணசபை முறைமை தோற்றுவிக்கப்பட்டது. பெரும்பான்மை சமூகத்திடம் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை ஏனைய சமூகங்களுக்கும் பகிர்ந்தளிப்பதே மாகாணசபை முறைமையின் நோக்கமாகும். 

இன்னொருபுறம், 'மாகாணசபை முறைமை என்பது - ஓர் ஏமாற்று வேலையாகும்' என்கிற குற்றச்சாட்டும் அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறித்து நாம் அறிவோம். மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை - ஒரு கையால் கொடுத்து விட்டு, ஆளுநர் ஊடாக, மறு கையால் பறித்தெடுக்கும் ஏற்பாடுகள் மாகாணசபை முறைமையில் உள்ளன என்பது விமர்சகர்களின் வாதமாகும்.

இப்படிப்பட்ட அரைகுறை அதிகாரப் பரவலாக்கல் முறைமையினைக் கூட - அனுமதிக்கும் நிலையில் தற்போதைய அரசு இல்லை என்பதுதான் இங்கு கவலைதரும் விடயமாகும். இந்த நாட்டுக்கு மாகாணசபை முறைமையே தேவையில்லை என்கிற - பேரினவாதக் கும்பலின் தாளத்துக்கு ஆட்சியாளர்கள் ஆடிக் கொண்டிருக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

மாகாணசபை முறைமை என்பது விடுதலைப் புலிகளுக்காக உருவாக்கப்பட்டதொன்றல்ல. புலிகளின் அழிவுடன் நாட்டில் தோன்றியிருந்த இன முரண்பாடு தீர்ந்து போய் விடவுமில்லை. ஆனால், பேரினவாதிகள் - இதற்கு மாறாகத்தான் கற்பனை செய்து வைத்துள்ளார்கள் போல் தெரிகிறது. அவர்களின் பேச்சும் நடத்தையும் அவ்வாறே உள்ளன. 

முதலில் மாகாணசபைகளுக்கான அதிகாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்தெடுப்பது. கடைசியில் மாகாணசபை முறைமையினை இல்லாமல் செய்வது. இதுதான் பேரினவாதக் கும்பலின் திட்டமாகும். அதாவது, 13 ஆவது திருத்தச் சட்டத்தின் - கண், காது, கை, கால்கள் என்று ஒவ்வொரு அங்கமாக வெட்டியெடுத்து நடைப்பிணமாக்குவது. பிறகு – நடைப் பிணத்தை வைத்திருந்து பலனொன்றும் இல்லையெனக் கூறி – கொன்று புதைப்பதே ஆட்சியாளர்களின் இலக்காகும். 

கசப்பான உண்மைகள்

இலங்கையில் மாகாணசபை முறைமை உருவாகுதவற்கு இந்தியாவே காரணமாகும். கிட்டத்தட்ட, இலங்கையின் செவியைப் பிடித்துத் திருகி, மாகாணசபை முறைமையை - இந்தியாதான் ஏற்றுக்கொள்ளச் செய்தது. ஆனால், அதே மாகாணசபை முறைமையினை வலுவிழக்கச் செய்வதற்கு அல்லது இல்லாமலாக்குவதற்கு - இலங்கையின் ஆட்சியாளர்கள் தற்போது மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு எதிராக – இந்தியா தனது எதிர்பினை 'கடுமையான தொனி'யில் இதுவரை வெளியிடாமல் உள்ளமை - இங்கு கவனிப்புக்குரியது.  

உண்மையில், இந்த விவகாரத்தில் தனது 'கடுமையான எதிர்ப்பினை' வெளியிடுவதற்கு இந்தியா விரும்பவில்லையா? அல்லது அவ்வாறானதொரு எதிர்ப்பினை வெளியிடும் நிலையில் இந்தியா இல்லையா? என்பதும் இங்கு ஆராயத்தக்க விடயங்களாகும். 

இலங்கை - இந்திய உறவில் ஏற்படும் விரிசலானது, இலங்கை – சீன உறவில் இன்னுமின்னும் நெருக்கத்தை ஏற்படுத்தி விடும் என்பதால், இலங்கையைக் கடுமையாகக் கோபித்துக் கொள்வதற்கு இந்தியா ஒருபோதும் விரும்பாது என்பது மிக வெளிப்படையான உண்மையாகும். இதேவேளை, இந்தியா - தனது நலனை மீறி, இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உதவியதுமில்லைளூ உதவப்போவதுமில்லை என்பது மற்றுமொரு உண்மையாகும். 

இன்னொருபுறம், சோனியா காந்தி தலைமையிலான இந்திய அரசானது - ஈழத் தமிழர் விவகாரத்தில் எவ்வளவு தூரம் தனது கரிசனையினையும், சிரத்தையினையும் வெளிக்காட்டும் என்பதும் கேள்விதான். தனது கணவரைக் கொன்ற புலிகளையும், அவர்களுக்கு ஆதரவானவர்களையும் அத்தனை எளிதில் சோனியா மன்னித்திருப்பார் என்று - நாம் சிறுபிள்ளைத்தனமாக நம்பவும் முடியாது. ஆக, மேற்சொன்ன விடயங்களை மனதில் வைத்துக் கொண்டுதான், இலங்கையின் 13 ஆவது திருத்தச் சட்ட விவகாரத்தில் இந்திய அரசு தலையீடுகளைச் செய்யும்.

பொய்த்துப் போன கணக்கு

இது இவ்வாறிருக்க, இன்னொருபுறம் - கிழக்கு மாகாணசபையின் ஆளுந்தரப்பினருக்கிடையிலேயே ஆயிரத்தெட்டுக் குத்து வெட்டுக்களும் கூத்துக்களும் இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன. 

கிழக்கு மாகாணசபையின் நிருவாகத்தை மேற்கொள்வதற்கு ஆளுநர் தடையாக இருக்கின்றார். இதனால், கிழக்கு மாகாணசபையினூடாக எதுவித சேவைகளையும் மக்கள் பிரதிநிதிகளால் செய்ய முடியாமலுள்ளது. இதேவேளை, முதலமைச்சரின் செயற்திறனும் போதாது. அவர் எதுவும் செய்வதில்லை என - ஏராளமான குற்றச்சாட்டுக்களை ஆளுந்தரப்பினர் கூறுகின்றனர். மு.கா. உறுப்பினர்களும் ஆளுந்தரப்பில் உள்ளடங்குகின்றார்கள்.

உண்மையில் இவ்வாறான குற்றசாட்டுக்களைக் கூறுவதற்கு மு.கா. உறுப்பினர்கள் வெட்கப்பட வேண்டும். 'மு.காங்கிரசின் ஆதரவோடு அமையும் கிழக்கு மாகாணசபையில் ஆளுநரின் தேவையற்ற அதிகாரம் இருக்க மாட்டாது. பொம்மை முதலமைச்சர் இருக்க மாட்டார். மக்களுக்கு சேவை செய்யும் சபையாக அது இருக்கும்' என்றெல்லாம் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மேடைகளில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் உரத்துப் பேசிய ஒலியின் 'ஈரம்' இன்னும் காயவில்லை. அதற்குள் - 'ஆளுநர் சரியில்லை, முதலமைச்சர் சரியில்லை' என்று வெட்கமின்றி மூக்கால் அழத் தொடங்கி விட்டனர் மு.கா. உறுப்பினர்கள். 

ஆளுநர் என்பவர் ஜனாதிபதியின் பிரதிநியாவார். ஜனாதிபதி சொல்வதைத்தான் ஆளுநர் செய்வார். கிட்டத்தட்ட கிழக்கு மாகாணசபையின் தற்போதைய முதலமைச்சரும் அப்படித்தான். 'அவசரத்துக்கு'ப் போகவும் ஜனாதிபதியைக் கேட்பாரோ என எண்ணும்படியானவர். ஆக – ஆளுநரும், முதலமைச்சரும் ஆளுந்தரப்பு உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்களில்லை என்றால், அதற்கு காரணமானவர் ஜனாதிபதியாகத்தான் இருக்க முடியும். ஜனாதிபதியின் விருப்பத்துக்கு முரணாக ஆளுநரும், முதலமைச்சரும் நடப்பார்களா என்ன? 

இந்த நிலையில், ஆளுநர் மற்றும் முதலமைச்சர் குறித்து புகார் கூறுவதற்கு - கிழக்கு மாகாண சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் - அலரி மாளிகை வரை  சென்று வந்தமைதான் பெருத்த பகிடியாகும். 

அமீரலியின் கனவு

இதேவேளை, இந்த நிலைவரத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துக் கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அமீர் அலி – முதலமைச்சர் பதவியை இலக்கு வைத்து தனது காய்களை நகர்த்திய கதைகளும் ஊடகங்களில் கசியத் தொடங்கியுள்ளன.

கிழக்கு முதலமைச்சர் குறித்து ஆளுந்தரப்பு உறுப்பினர்களிடையே அதிருப்தி ஏற்பட்டபோது, அதை ஊதிப் பெருப்பிக்கும் வகையில் - மாகாணசபை அமர்வில் அமீரலி பேசத் தொடங்கினார். கிழக்கு முதலமைச்சர் செயற்திறன் அற்றவர் என்றார். விரைவில் மாகாண மட்ட அரசியலிலும், மத்திய அரசியலிலும் பாரிய மாற்றங்கள் நிகழும் என்றார். 

முதலமைச்சர் பதவியிருந்து நஜீப் ஏ. மஜீத்தை எப்படியாவது கழற்றி விட்டு, அந்தக் கதிரையில் தான் அமர வேண்டும் என்பதே அமீரலியின் ஆசையாகும். இந்த ஆசை பலிப்பதற்கான சாத்தியங்கள் வெகு குறைவாகும். ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் விரும்பவில்லை என்பதற்காக, தான் முதலமைச்சராகத் தெரிவு செய்த நஜீப் ஏ. மஜீத்தை – பதவியிருந்து ஜனாதிபதி இறக்குவாரா என்பது சந்தேகம்தான். மேலும், மற்றவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து, அதற்காக ஒரு கருமத்தை மேற்கொள்ளும் ஒருவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ - தன்னை வெளிப்படுத்தவும் விரும்ப மாட்டார். 

இன்னொருபுறம், அமீர்அலி முதலைமைச்சராகுவதற்கு மு.காங்கிரசின் ஆதரவு அவசியமாகும். மு.கா. அப்படியானதொரு ஆதரவினை அமீரலிக்கு வழங்குமா? என்று கிழக்கு மாகாணசபையின் உறுப்பினரும், மு.காங்கிரசின் குழுக்களின் தலைவருமான ஏ.எம். ஜெமீலிடம் கேட்டோம். 

'முதலில் கிழக்கு முதலமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்பாடாது என்பதைக் கூறி வைக்க விரும்புகிறேன். முதல் இரண்டரை வருடங்களுக்கு நஜீப் ஏ. மஜீத் முதலமைச்சராக இருப்பார். அடுத்த இரண்டரை வருடங்களுக்கு மு.காங்கிரசைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக இருப்பார்.  அதிலும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மு.கா. உறுப்பினர் ஒருவருக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படுதல் வேண்டும். இதைத்தவிர, இப்போதைக்கு மாற்றங்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை. நீங்கள் கேட்பதுபோல் ஒரு பேச்சுக்கு – முதலமைச்சர் பதவிக்காக அமீரலி சிபாரிசு செய்யப்பட்டாலும், அதை மு.காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாது. எதிர்க்கும் என்றார் ஜெமீல்.

ஆக, அமீரலியின் முதலமைச்சர் கனவு பலிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை. 

No comments

Powered by Blogger.