ஈரானில் இன்று ஜனாதிபதி தேர்தல் - ஒரு பதவிக்காக 8 பேர் போட்டி
ஈரான் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. பழைமைவாதிகள், சீர்திருத்தவாதிகள் என இரு முகாம்களில் நின்று போட்டியிடும் வேட்பாளர்களில் இருந்து ஈரான் மக்கள் தனது அடுத்த ஜனாதிபதியை வாக்குப் பதிவு மூலம் தேர்வு செய்யவுள்ளனர்.
ஈரான் தேர்தலில் போட்டியிட 600 க்கும் அதிகமானவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்தபோதும் கடைசியில் 8 பேருக்கே தேர்தலில் போட்டியிட, வேட்பாளரை தேர்வு செய்யும் பாதுகாவலர் சபை கடந்த மாதம் அனுமதி அளித்திருந்தது. இந்த பாதுகாவலர் சபை ஈரான் உயர்மட்ட தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமைனியின் கீழ் செயற்படுகிறது.
ஈரான் தேர்தல் சட்டத்தின்படி ஒருவர் இரு தவணைக்கு மேல் ஜனாதிபதி தேர்தலில் தொடர்ந்து போட்டியிட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து இருமுறை ஜனாதிபதி பதிவியை வகித்த அஹமதி நஜாத்தினால் இம்முறை தேர்தலில் போட்டியிட முடியாதுள்ளது.
கட்சி அடிப்படையில் ஈரான் ஜனாதிபதி தேர்தல் நடைபெறாத போதும் கொள்கையளவில் வேட்பாளர்கள் பிரிந்து தனது பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். சீர்திருத்தவாதிகளின் முகாமில் 64 வயதான மதத் தலைவர் ஹஸன் ரவ்ஹானியின் கை ஓங்கியுள்ளது. இம்முறை தேர்தலில் போட்டியிடும் ஒரே மதத் தலைவரும் இவராவார். அத்துடன் சீர்திருத்தவாதிகளின் முகாமில் எஞ்சியிருக்கும் ஒரே வேட்பாளரும் இவராவார்.
இன்றைய தேர்தலில் வாக்களிக்க 50.5 மில்லியன் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில் எவரும் 50.1 வீத வாக்குகளை வெல்லாதபட்சத்தில் முதலிரு இடங்களை பெறும் வேட்பாளர்கள் எதிர்வரும் ஜூன் 21ம் திகதி இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடைபெறும். பின்னர் உயர் மட்ட தலைவர் ஆகஸ்ட் 3ம் திகதி புதிய ஜனாதிபதி பதவி ஏற்கும் முன் தேர்தல் முடிவை உறுதி செய்வார். தேர்வாகும் புதிய ஜனாதிபதி அனைத்து விடயங்களிலும் உயர்மட்ட தலைவருக்கு விசுவாசமானவராகவே இருக்க வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.
Post a Comment