Header Ads



அவுஸ்ரேலியா அருகே படகு மூழ்கியது - 70 க்கும் மேற்பட்டோரை காணவில்லை


அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு அருகே கடந்த புதன்கிழமை அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று மூழ்கியதில் 60 தொடக்கம் 70 வரையிலான அகதிகள் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. 

கடந்த புதன்கிழமை கிறிஸ்மஸ் தீவுகட்கு வடமேற்கே 65 கி.மீ தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றதை அறிந்து, அவ்விடத்துக்கு கண்காணிப்பு விமானங்கள், கடற்படைப் படகுகள் அனுப்பப்பட்டன. 

இரண்டு நாட்கள் தேடுதல் நடத்தியும் படகு மூழ்கிய இடம் கண்டுபிடிக்கப்படவில்லை. 

இந்தநிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் உயிர்காப்பு அங்கி ஒன்றையும், மூழ்கிய படகின் அடிப்பகுதியையும் கண்காணிப்பு விமானம் ஒன்று கண்டுபிடித்தது. 

இதையடுத்து இரு சரக்குக் கப்பல்கள், ஒரு கடற்படைப் படகு, 3 விமானங்கள் உடனடியாக அந்த இடத்துக்கு அனுப்பப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. 

இதன்போதே 9 அகதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

எனினும் உயிர் தப்பியிருக்கலாம் என்று கருதப்படுவோரை கண்டுபிடிக்க இன்று சனிக்கிழமை இரவும் தேடுதல்கள் தொடர்ந்தன. 

இந்தப் படகில் 70 பேர் வரை பயணம் செய்திருக்கலாம் என்றும் அதில் பெரும்பாலானவர்கள் இறந்திருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. 

இந்தப் படகு எங்கிருந்து புறப்பட்டது, எந்த நாட்டவர்கள் அதில் பயணம் செய்தனர் என்ற விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை. 

No comments

Powered by Blogger.