வை.எம்.எம்.ஏ பேரவையின் 63வது மாநாடு - பிரதம அதிதி பசில் ராஜபக்க்ஷ
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் 63வது வருடாந்த மாநாடு இம்மாதம் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
இது சம்பந்தமாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று புதன்கிழமை(05) கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்றபோது இதுதொடர்பாக பேரவையின் தேசிய தலைவர் கே.என் டீன் விளக்கமளித்தார்
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய பொதுச் செயலாளர் ராஸ்மரா ஆப்தீன், தேசிய பொது பொருளாளர் எம்.ஆர்.எம்.ஷியாட், நம்பிக்கையாளர் சபை தலைவர் காலித் எம் பாரூக் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைவர் கே.என்.டீன் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் 16ம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கௌரவ அதிதியாக ஜனாதிபதி சட்டத்தரணி அட்டனி ஜெனரல் பாலித பெர்னாண்டோவும் கலந்து கொள்ளவுள்ளனர். அத்துடன் அமைச்சர்கள், கல்விமான்கள், வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறிப்பாக வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் வை.எம்.எம்.ஏ பேரவையின் 102 கிளைகளைச் சேர்ந்த பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது பேரவையின் புதிய உத்தியோகத்தர்கள் தெரிவு இடம்பெறவுள்ளதுடன் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளது.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை ஸ்தாபகர் மர்ஹூம் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் தலைவராகவும் அவரே நியமிக்கப்பட்டார்.
தற்போதைய புதிய தலைவர் கே.என்.டீன். தலைமையில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை சிறப்பாக இயங்கி வரவதடன் குறிப்பாக சமூக பொருளாதார வேலைத்திட்டம், கல்வி புலமைப்பரிசில், தலைமைத்துவ பயிற்சி, விளையாட்டு, அனர்த்தங்கள் ஏற்படும்போது புனர் நிர்மாண உதவிகள், தகவல் தொழிநுட்பம், ஆங்கில வகுப்புக்கள், சுற்றாடல் சுகாதார வேலைத்திட்டம், போதைப் பொருள் தடுப்பு, தேசிய இன ஒற்றுமை சமய கலாச்சார செயற்பாடுகள் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.
Post a Comment