பரபரப்பான போட்டியில் இந்தியா வென்றது - 36 கோடி ரூபா பரிசு
சாம்பியன்ஸ் டிராபியை "சூப்பராக' கைப்பற்றியது இந்திய அணி. கடைசி பந்து வரை பரபரப்பாக இருந்த பைனலில் இங்கிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கனமழை மற்றும் மைதானத்தில் தேங்கி இருந்த தண்ணீர் காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன. அஷ்வின் அருமையாக பந்துவீசினார். முதல் பந்தில் ஸ்டூவர்ட் பிராட் கண்டம் தப்ப, ரன் இல்லை. இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்தார். மூன்றாவது பந்தில் ஒரு ரன். 4வது பந்தில் 2 ரன். 5வது பந்தில் 2 ரன். 6வது பந்தில் ரன் இல்லை. இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்து, இரண்டாம் இடம் பெற்றது.
இந்தியா சார்பில் அஷ்வின், ஜடேஜா, இஷாந்த் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். "ஆல்-ரவுண்டராக' அசத்திய ரவிந்திர ஜடேஜா, ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில், இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பை வென்றது. முன்னதாக 2002ல் இலங்கையுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது.
தவான் "கோல்டன் பேட்'
இம்முறை அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்தியாவின் ஷிகர் தவான் முதலிடம் பிடித்தார். இவர், 5 போட்டியில் 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 363 ரன்கள் எடுத்தார். இதற்காக இவருக்கு "கோல்டன் பேட்' வழங்கப்பட்டது.
இப்பட்டியலில் "டாப்-5' பேட்ஸ்மேன்கள்:
வீரர் போட்டி ரன்கள் 100/50
தவான் (இந்தியா) 5 363 2/1
டிராட் (இங்கிலாந்து) 5 229 0/2
சங்ககரா (இலங்கை) 4 222 1/1
ரோகித் (இந்தியா) 5 177 0/2
கோஹ்லி (இந்தியா) 5 176 0/1
ஜடேஜா "கோல்டன் பால்'
"சுழலில்' அசத்திய இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, இம்முறை அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இவர், ஐந்து போட்டியில் 12 விக்கெட் வீழ்த்தினார். இதற்காக இவருக்கு "கோல்டன் பால்' வழங்கப்பட்டது.
இவ்வரிசையில் "டாப்-5' பவுலர்கள்:
வீரர் போட்டி விக்கெட்
ஜடேஜா (இந்தியா) 5 12
மெக்லினகன் (நியூசிலாந்து) 3 11
ஆண்டர்சன் (இங்கிலாந்து) 5 11
இஷாந்த் (இந்தியா) 5 10
மெக்லாரன் (தென் ஆப்ரிக்கா) 4 8
அஷ்வின் (இந்தியா) 5 8
ரூ. 36 கோடி பரிசு
நேற்று பட்டம் வென்ற இந்திய அணிக்கு "ஸ்டெர்லிங் சில்வர்' கொண்டு தயாரிக்கப்பட்ட, 3.1 கி.கி., எடையுள்ள, சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 36 லட்சம். தவிர, இந்திய அணிக்கு ரூ. 36 கோடி பரிசாக அளிக்கப்பட்டது.
தொடர்ச்சியான அட்டவணை
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய இந்திய அணி வீரர்கள், வெஸ்ட் இண்டீசில் நடக்கவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரில் (ஜூன் 28 - ஜூலை 11) பங்கேற்க உள்ளனர். மூன்றாவது அணியாக இலங்கை அணி விளையாடுகிறது. அதன்பின், ஜிம்பாப்வே செல்லு<ம் இந்திய அணி, ஐந்து போட்டிகள் (ஜூலை 24 - ஆக., 3) கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதனையடுத்து, இந்திய அணி வீரர்கள், வரும் ஆகஸ்ட் மாதம் தாயகம் திரும்ப உள்ளனர். அதேவேளையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு சில சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இத்தொடருக்கான இந்திய அணி, விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
கங்குலியை முந்திய தவான்
இம்முறை 363 ரன்கள் எடுத்த ஷிகர் தவான், ஒரு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் முன்னாள் கேப்டன் கங்குலியை பின்தள்ளி முதலிடம் பிடித்தார். கென்யாவில், 2000ல் நடந்த தொடரில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 348 ரன்கள் எடுத்தார்.
தோனி சாதனை
கடந்த 2007ல் இந்திய அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். முதன்முதலில் இவர், 2007ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை வென்று தந்தார். அதன்பின் 2011ல் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) தொடரில், இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக உலக கோப்பை (50 ஓவர்) வென்று தந்தார். தற்போது, சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) தொடரில் 100 சதவீத வெற்றியுடன் கோப்பை வென்று சாதித்தார். இதன்மூலம் "டுவென்டி-20' உலக கோப்பை, உலக கோப்பை (50 ஓவர்) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி வென்ற முதல் கேப்டன் என்ற சாதனை படைத்தார்.
தவிர இவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான ஐ.சி.சி., ரேங்கிங்கில் (தரவரிசை) இந்திய அணியை "நம்பர்-1' இடத்துக்கு அழைத்து சென்றார்.
பெல் "அவுட்' சர்ச்சை
நேற்று போட்டியின் 9வது ஓவரை வீசிய ரவிந்திர ஜடேஜாவின் 4வது பந்தில் இங்கிலாந்தின் இயான் பெல்லை(13), தோனி "ஸ்டம்பிங்' செய்தார். இது தொடர்பாக சந்தேகம் எழ, மூன்றாவது அம்பயரிடம் கேட்கப்பட்டது. "ரீப்ளே'வில் பெல், காலை "கிரீசுக்குள்' வைத்திருந்தது தெளிவாக தெரிந்தது. ஆனால், மூன்றாவது அம்பயர் ஆக்சன்போர்டு(ஆஸ்திரேலியா) தவறாக "அவுட்' கொடுத்து அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து பெல்(13) விரக்தியுடன் வெளியேறினார்.
விருது அர்ப்பணம்
தொடர் நாயகன் விருதை வென்ற மகிழ்ச்சியில் மீசையை முறுக்கி விட்ட தவான் கூறுகையில்,""பந்துகள் எகிறும் இங்கிலாந்து ஆடுகளங்கள் எனது பேட்டிங்கிற்கு ஒத்துழைத்தது. இந்த விருதை உத்தரகாண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்,''என்றார்.
Post a Comment