Header Ads



ரபெல் நடால் சாதனை - 33 கோடி பரிசுத் தொகை

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தார் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால். நேற்று நடந்த பைனலில், சகவீரர் டேவிட் பெரரை வீழ்த்தினார். 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு பைனலில், "நடப்பு சாம்பியன்' ரபெல் நடால் (நம்பர்-4), 27, உலகின் "நம்பர்-5' வீரரான டேவிட் பெரரை, 31, எதிர்கொண்டார்.

துவக்கத்தில் இருந்து நடால் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுமார் இரண்டு மணி நேரம், 16 நிமிடங்கள் வரை நீடித்த பைனலின் முடிவில் நடால் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 8வது முறையாக (2005-08, 2010-13) சாம்பியன் பட்டம் வென்றார்.

புதிய சாதனை:

இதன்மூலம் ஒரே கிராண்ட்ஸ்லாம் தொடரில், 8 முறை பட்டம் வென்ற முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார். முன்னதாக விம்பிள்டன் தொடரில் அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இங்கிலாந்தின் வில்லியம் ரென்ஷா ஆகியோர் தலா 7 முறை கோப்பை வென்றனர். யு.எஸ்., ஓபனில் அமெரிக்காவின் ரிச்சர்டு சியர்ஸ், வில்லியம் லார்னட், பில் டில்டன் ஆகியோர் தலா 7 முறை கோப்பை வென்றனர்.

* பிரெஞ்ச் ஓபன் தொடர் முன்னதாக 1891-1967ம் ஆண்டுகளில் "பிரெஞ்ச் சாம்பியன்ஷிப்' என்ற பெயரில் நடந்தது. இக்கால கட்டத்தில் பிரான்ஸ் வீரர் மேக்ஸ் டிகுகிஸ் எட்டு முறை (1903-04, 07-09, 12-14) கோப்பை வென்றார். கடந்த 1969ம் ஆண்டு முதன்முதலில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து வழங்கப்பட்டு, "பிரெஞ்ச் ஓபன்' என்ற பெயரில் நடந்தது.

12வது பட்டம்:

இது, நடால் வென்ற 12வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். முன்னதாக இவர், ஆஸ்திரேலிய ஓபன் (2009), விம்பிள்டன் (2008, 10), யு.எஸ்., ஓபன் (2010) உள்ளிட்ட மற்ற கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் சுவீடனின் பிஜோர்ன் போர்க்கை (11 பட்டம்) பின்தள்ளி, மூன்றாவது இடம் பிடித்தார். முதலிரண்டு இடங்களில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (17 பட்டம்), அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் (14 பட்டம்) ஆகியோர் உள்ளனர்.

11 கோடி பரிசு:

பைனலில் வெற்றி பெற்ற நடாலுக்கு, ஜமைக்காவின் "மின்னல் வேக மனிதன்' தடகள வீரர் உசைன் போல்ட் கோப்பை வழங்கி கவுரவித்தார். தவிர இவருக்கு சுமார் ரூ. 33 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பெற்ற டேவிட் பெரருக்கு கேடயத்துடன் சுமார் ரூ. 5.7 கோடி பரிசு வழங்கப்பட்டது.

பாதுகாப்பு குறைபாடு: 

பிரெஞ்ச் ஓபன் பைனலின் போது, பிரான்ஸ் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கையில் நெருப்பு சுடருடன் பாய, நடால் அதிர்ந்து போனார். இவரை மடக்கிய பாதுகாப்பு படை வீரர், களத்தை விட்டு அப்புறப்படுத்தினார். 

No comments

Powered by Blogger.