ரஷ்யாவில் தொழுது கொண்டிருந்த 300 முஸ்லிம்கள் கைது
(TN) ரஷ்ய தலைநகரில் உள்ள தொழுகை அறையில் தொழுது கொண்டிருந்த 300க்கும் அதிகமான முஸ்லிம்களை அந்நாட்டு பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். இவர்களில் 170 வெளிநாட்டினரும் உள்ளடங்குகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சுற்றி வளைப்புக்கான காரணம் குறித்து பொலிஸார் விளக்கமளிக்கவில்லை. எனினும் மொஸ்கோவிலுள்ள தொழுகை அறைகள் மீது பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்வது இது மூன்றாவது தடவையாகும்.
எனினும் எதிர்வரும் ஆண்டு ரஷ்யாவின் சொசியில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்போட்டியை ஒட்டி கடும் போக்கு இஸ்லாமியவாதிகளை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படை பிரதானிகளை சந்தித்த ஜனாதிபதி புடின், “ஊழல், குற்றச்செயல் மற்றும் ஆயுததாரிகளுக்கு எதிரான கடுமையான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
ரஷ்ய கூட்டரசில் சுமார் 23 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்களில் வடக்கு கவ்காஸ், செச்சினியா, இன்குஷ்ரியா மற்றும் டஜஸ்தானில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இதில் பெரும்பகுதிகளில் இஸ்லாமிய பிரிவினைவாதிகளுடன் ரஷ்ய அரசு போராடி வருகிறது.
Post a Comment