Header Ads



கப்பல் கட்டுதல், திருத்துதல் தொடர்பான இலங்கையின் 2வது நிலையம் - சவுதி அரேபியா முதலீடு

கப்பல் கட்டுதல் மற்றும் திருத்துதல் தொடர்பான இலங்கையின் இரண்டாவது நிலையம் சவுதி அரெபிய முதலீட்டுடன் காலி துறைமுகத்தில் நிர்மானிக்கப்படவிருக்கிறது. இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று இன்று கொழும்பிலுள்ள துறைமுக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண, விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி, மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் முன்னிலையில் இடம்பெற்றது. 
        
இந்த வேலைத்திட்டத்திற்கு முதற்கட்டமாக நாற்பத்து நான்கு அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1500க்கு மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் வாய்ப்புகள் உருவாகும். இலங்கையின் கப்பல் கட்டுதல், மற்றும் திருத்துதல் தொடர்பான இரண்டாவது நிலையத்தில் முதலீடு செய்வதற்கு சவுதி அரேபியாவில் தலைமையகத்தை கொண்டுள்ள ஹாதி ஹமட் அல் ஹம்மாம் நிறுவனத்தின் தலைவர்  ஹாதி ஹமட் அல் ஹம்மாம் அவர்களும், துறைமுக மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் ரோஹித அபேவர்தன, துறைமுக அதிகார சபையின் தலைவர் டொக்டர் பியத் பி விக்கிரம அவர்களும் இத்திட்டத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் நிஹால் கெப்பட்டிப்பொல ஆகியோரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

         மேலும் இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்குமிடையே நட்புறவு உள்ளது. இலங்கை சவுதி அரேபியாவின் சிநேக நாடு என்றாலும் இவ்வாறான பாரிய முதலீடு இலங்கைக்கே வருவது இதுவே முதல் தடவையாகும். இரண்டாம் கட்டத்தின் போது 110 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலிட இந்நிறுவனம்  எதிர்பார்த்துள்ளது. இதன் மூலம் 5000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை மற்றும் மாலை தீவின் கப்பல் கட்டுதல் மற்றும் திருத்தும் நடவடிக்கைகளை இலக்காக கொண்டே இம்முதலீடு மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வைபவத்தில் நிறுவனத்தின் சர்வதேச செயற்பாடுகளின் பொறுப்பாளர் பி.கே.ராஜ்கோபால், வர்த்தக மேம்பாட்டு முகாமையாளர் டி.புருஷோத்தமன், சி கல்ப் சியாட் தனியார் நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் நடவடிக்கைப் பொறுப்பாளர் கலாநிதி சரத் ஒபய சேகர உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.

No comments

Powered by Blogger.