Header Ads



குவைத்தில் 2 தமிழர்க்கு மரண தண்டனை - விடுவிக்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத் முயற்சி

குவைத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இரண்டு தமிழர்களை விடுவிக்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத் முயற்சி மேற்கொண்டு ருகிறது. இதுகுறித்து நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய  அக்கட்சியின் தலைவர் எஸ்.எம். பாக்கர்:

“குவைத் நாட்டில், 2008ம் ஆண்டு நடந்த கொலைச் சம்பவத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த தமிழகத்தை சோர்ந்த முத்துப்பேட்டை சுரேஷ் மற்றும் மன்னார்குடியைச் சேர்ந்த காளிதாஸ் ஆகியோருக்கு கடந்த 17.06.2013 அன்று தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்திருந்தது குவைத் அரசு. 

குவைத்தில் பணியாற்றி வந்த இலங்கை அனுராதபுரத்தைச் சேர்ந்த சித்திக் மசூதா என்ற பெண்ணை கொலை செய்துவிட்டார்கள் என்பது தான் மேற்கண்ட இருவர் மீதான குற்றச்சாட்டு.

இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கும் தகவல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்திற்கு அதன் குவைத் கிளை அமைப்பினர் மூலமாக தெரியவந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட சித்திக் மசூதாவின் குடும்பத்தினர் கடந்த 2010ம் ஆண்டிலேயே இழப்பீட்டுத் தொகை (Blood Money) இலங்கை ரூபாய் தலா 6 லட்சம் என சுரேஷ் மற்றும் காளிதாஸ் தரப்பில் இருந்து மொத்தம் 12 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு இருவரையும் மனப்பூர்வமாக மன்னித்துவிட்டனர். 

இதற்கான அதிகாரபூர்வமான ஆவணங்களை இலங்கையிலுள்ள குவைத் தூதரகம் மற்றும் இந்திய தூதரகத்தில் அவர்கள் சமர்ப்பித்துவிட்டனர். இந்த விஷயத்தில் இந்திய வெளியுறவு அமைச்சம் காட்டிய அசாத்திய மெத்தனப் போக்கால், மன்னிப்பு அளிக்கப்பட்டும் தொடர்ந்து மூன்று ஆண்டுகாலமாக சுரேஷ் மற்றும் காளிதாஸ் சிறைப்படுத்தப்பட்டு, இறுதியில் மரணதண்டனையையும் எதிர்கொள்ளும் சூழலுக்கு ஆளானார்கள் என்ற தகவலும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் கவனத்திற்கு எடுத்துவரப்பட்டது. 

இந்நிலையில், பிரச்சனையின் தீவிரத்தன்மையை உணர்ந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத், இந்த மரணதண்டனையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டது.

மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் குவைத்திலுள்ள இந்தியத் தூதராக அதிகாரிகளுக்கு கடிதம் மற்றும் தொலைப்பேசி மூலமாகவும் ‘இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட தரப்பினர் மன்னிப்பு அளித்த பின்னர் மரணத்தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது’ என்பதை விளக்கி, மன்னிப்பு அளிக்கப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்களின் நகல்கள் ஜமாஅத் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. தொடர்ந்து, மத்திய வெளியுறவு இணையமைச்சர் இ.அஹமது மற்றும் நாகை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரைத் தொடர்பு கொண்டு, மரணதண்டனையை தடுக்கும் முயற்சியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட வேண்டும் என அழுத்தம் கொடுத்தது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

ஏ.கே.எஸ்.விஜயன் இந்த விஷயத்தில் சிரத்தையுடன் முயற்சிகளை மேற்கொண்டது பாராட்டுக்குரியது. பல்வேறு முயற்சிகளின் பலனாக, குவைத்திலுள்ள இந்திய தூதராக அதிகாரிகள் குவைத் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்திய பின் கடைசி தருணத்தில் மரணதண்டனை தவிர்க்கப்பட்டு, தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

இருவருக்குமான மரணதண்டனை தற்காலிமாக நிறுத்தப்பட்டிருந்தாலும் அது நிரந்தரமாக கைவிடப்பட வேண்டும்; இருவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர் முயற்சிகளை மேற்கொள்ளத் தீர்மானித்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத், கடந்த 18ம் தேதி இருவரது தற்போதைய நிலை குறித்து குவைத்திலுள்ள இந்திய தூதரகத்திடம் கேட்டறிந்தது. இது தொடர்பாக, ‘இருவரது மரணதண்டனையும் இடை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது’ மன்னிப்பு குறித்த வேண்டுகோள் பரிசீலனையில் உள்ளது. இவை முடிவுக்கு வர சற்று தாமதமாகலாம்’ என இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திற்கு பதில் அனுப்பியது தூதரகம்.

மேற்படி இருவருது விவகாரம் விரைந்து முடிக்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட தேவையான வழிமுறைகளை மேற்கொள்ளத் தீர்மானித்த ஜமாஅத், அதன் மாநிலச் சொலாளர்களில் ஒருவரான ஃபிர்தவ்ஸை கடந்த 18ம் தேதி இலங்கைக்கு அனுப்பிவைத்தது.

இலங்கைக்கு சென்ற ஃபிர்தவ்ஸ், அனுரதபுரத்திலுள்ள சித்திக் மசூதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்கள் சுரேஷ் மற்றும் காளிதாஸ் தரப்பிலிருந்து இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொண்டு மனப்பூர்வமாக இருவருக்கும் மன்னிப்பு அளித்ததை வாக்குமுலமாக வீடியோ பதிவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பெற்றுக் கொண்டு அன்றையதினமே, இலங்கையிலுள்ள குவைத் தூதரகத்தை அணுகி வாக்குமூலங்களை சமர்பித்தார். அப்போது, சித்தீக் மசூதா தரப்பின் அதிகாரப்பூர்வ வாரிசுதாரராக இலங்கை உச்சநீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட மசூதாவின் சகோதரர் ரிள்வானையும் குவைத் தூதரகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குமூலம் தர வைத்தார் ஃபிர்தவ்ஸ்.

இந்த வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட தூதரக அதிகாரிகள் அதனை அப்படியே எழுத்துப்பூர்வமாக்கி, இலங்கை வெளியுறவு அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்தின் அங்கீகாரத்தையும் பெற்று வருமாறு கேட்டுக் கொண்டதையடுத்து, இலங்கையில் இரண்டு தினங்கள் தங்கியிருந்து - இலங்கை வெளியுறவு அமைச்சம் மற்றும் நிதி அமைச்சத்திடமிருந்து உரிய அங்கீகாரத்தைப் பெற்று முறையான ஆவணங்களை குவைத் தூதரகத்தில் சமர்பித்தார் ஃபிர்தவ்ஸ்.

(ஏற்கெனவே சித்திக் மசுதா குடும்பத்தினரிடமிருந்து 2010 இல் சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் இந்திய அரசின் மத்திய வெளிவிவகார அமைச்சகத்திற்கு கிடைத்தும் அதை 3 வருடங்களாக அமைச்சகம் கிடப்பில் போட்டு விட்டதும்,குவைத்திலுள்ள இந்திய தூதரகம் கூட இந்த விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொண்டதாலும் மீண்டும் இந்த ஆவணங்களை முறைப்படுத்தி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.)

முன்னதாக, இது தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்களை (Official Documents ) சமர்ப்பிப்பதற்கு முன், இந்திய தவ்ஹீத் ஜமாஆத் சார்பாக கொடுக்கப்பட்ட கடிதத்தையும், ரில்வானின் நேரடி வாக்குமூலத்தையும் (வீடியோ பதிவு) ‘நிலைமையின் தீவிரம் கருதி எங்கள் அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துவிடுகிறோம்’ என்று ஏற்கெனவே, உறுதியளித்தப்படி அவற்றை குவைத் அரசுக்கு அனுப்பிவைத்துவிட்டு ஃபிர்தவ்ஸிடம் தகவலை சொல்லியுள்ளனர் தூதரக அதிகாரிகள்.

இந்த முயற்சிகளின் பலனாக, கடந்த 21ம் தேதி சுரேஷ் மற்றும் காளிதாஸ் அவர்களின் மரண தண்டனை முழுமையாக ரத்து செய்யப்பட்டுவிட்டது என குவைத் அரசு அறிவித்திருப்பதாக நம்பிக்கையூட்டும் செய்தி வெளியாகியுள்ளது. 

இனி, நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக இருவரும் விடுதலை செய்யப்படுவதில் சற்று தாமதமாகும் என குவைத் தகவல்கள் கூறுகின்றன. விரைவில் இருவரும் விடுதலையாக தொடர் முயற்சிகளை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மேற்கொள்ளும்” என விரிவாக விளக்கிப் பேசினார் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர்.

இலங்கையில் இருந்தபடி சுரேஷ் மற்றும் காளிதாஸின் விடுதலைக்காக தான் மேற்கொண்ட முயற்சிகளை விளக்கிப் பேசினார் மாநில செயலாளர் ஃபிர்தவ்ஸ். இச்சந்திப்பின் போது மாநிலத் துணைத்தலைவர் முஹம்மது முனீர், பொதுச் செயலாளர் செய்யது இக்பால், மாநிலச் செயலாளர்களான அபுஃபைஸல், முஹம்மது ஷிப்லி, மதுக்கூர் முஹைதின் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

இந்நிகழ்சியில் கலந்துகொண்ட காளிதாசின் மனைவியான அனுசுயா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தன் கணவரின் விடுதலைக்காக மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். inneram

No comments

Powered by Blogger.