கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சினால் விவசாய அணைக்கட்டு
(ரீ.கே.றஹ்மத்துல்லா)
கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சினால் ஒரு கோடி 15 இலட்சம் ரூபா செலவில் கஞ்சிகுடியாறு இப்பிரதேசத்தில் விவசாய அணைக்கட்டு அமைப்பதற்கான ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று(11)கிழக்குமாகாண நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது. இதன் மூலம் 450 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
பயங்கரவாதம் மற்றும் யுத்த சூழ்நிலைகள் காரணமாக முப்பது வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாமல் பயங்கரவாதிகளின் கோட்டையாக இருந்து வந்த திருக்கோவில் பிரதேசசெயலகத்திற்குட்பட்ட கஞ்சிகுடியாறு நீர்ப்பாசனக் குளங்கள், அணைக்கட்டுக்கள், விவசாயப்பாதைகள், கால்வாய்கள் என்பன கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சினால் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
கஞ்சிகுடியாறு பிரதேசத்தில் பயிர்சசெய்கை மற்றும் மீன்பிடித் தொழில்களை மேற்கொண்டு தமது ஜீவனோபாயத்தை கழித்து வந்த அப்பிரதேச மக்கள் கடந்த கால யுத்த சூழ்நிலைகாரணமாக இடம்பெயர்ந்து தமது வாழ்வாதாரங்களையும் இழந்து சொல்லென்னா துயரங்களுக்கும் ஆளாகி இருந்தனர். தற்போது அங்கு மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் இன்னும் அடிப்படை வசதிகளின்றி பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பிரதேச மக்கள் விடுத்துவந்த கோரிக்கைக்கமைய கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சு நீhப்பாசன அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இப்பிரதேசத்தின் முக்கிய நீர்ப்பாசன குளமாக விளங்கிய கஞ்சிகுடியாறு குளம் கடந்த 30வருடங்களுக்கு மேலாக எதுவித புனரமைப்பு வேலைகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்து தூர்ந்து போன நிலையில் காணப்படுகின்றன. தற்போது இதனை அபிவிருத்தி செய்வதற்காக கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சு முதற்கட்டமாக பத்து மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 1250 ஏக்கரில் நெற்செய்கையினை மேற்கொள்ள முடியும்.
தம்பிலுவில் நீர்ப்பாசனப் பிரிவுக்குப் பொறுப்பான பொறியியலாளர் சுஜிதரன் தலைமையில் நடைபெற்ற இவ்வாரம்ப அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று முன்தினம் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரீ. நவரெத்தினராஜா, முன்னாள் உறுப்பினர் செல்வராஜா, மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ்.திலகராஜா மற்றும் பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் யூ.எல். நஸார், ஜெய்கா திட்டப் பணிப்பாளர் ஏ.அகீல் மற்றும் நீர்ப்பாசன பொறியியலாளர்கள், விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment