அரசியலமைப்பின் 13வது திருத்தம் - அரசாங்கம் சமர்ப்பித்துள்ள யோசனைகள்
(எம்.எஸ். பாஹிம்)
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக அரசாங்கம் இரு யோசனைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளது. இதன் நகல் பிரதிகள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு 13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் யோசனைகளை முன்வைக்க ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஒரு வருடகாலம் கடந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராததாலே அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டதாக கூறிய அவர், வடமாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து இந்த திருத்தம் செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
* இரு மாகாண சபைகளை இணைக்கும் ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் நீக்கம்
* தேசிய கொள்கைகள் தொடர்பான சட்டமூலங்களில் மாகாண சபைகளின் அனுமதி பெறும் 'ரத்தில் திருத்தம்
* யோசனைகளை சமர்ப்பிக்க கூட்டுக் கட்சிகளுக்கு ஒருவார கால அவகாசம்
* தமிழ்க் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராததாலேயே திருத்தம் கொண்டுவர அரசுக்கு நிர்ப்பந்தம்
* வட மாகாண சபை தேர்தலை இலக்கு வைத்த திருத்தமல்ல
* காணி, பொலிஸ் அதிகாரங்களை அகற்றுவது தொடர்பில் ஆராயப்படவில்லை
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. இதன் போது 13 ஆவது திருத்தத்தில் அரசாங்கம் முன்னெடுக்க உள்ள திருத்தம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அரசாங்கம் அமைச்சரவைக்கு முன்வைத்த இரு திருத்தங்களின் படி இரு மாகாண சபைகளை ஒன்றிணைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் நீக்கப்படுவதோடு தேசிய கொள்கைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்பிக்க முன்னர் சகல மாகாண சபைகளினதும் அனுமதி பெறப்பட வேண்டுமென்ற பிரிவை திருத்தி பெரும்பான்மை மாகாண சபைகளின் அனுமதி பெறப்பட்டால் சட்டமூலத்தை நிறைவேற்றலாமென மாற்றம் செய்யப்படுகிறது.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அகற்றுவது குறித்து அமைச்சரவையில் ஆராயப்படவில்லை என்று கூறிய அமைச்சர் அவற்றை அகற்றுவது தொடர்பில் கூட்டுக்கட்சிகளிடையே பல்வேறு கருத்துகள் காணப்படுவதாகவும் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் கட்சிகளின் யோசனைகள் குறித்து ஆராயப்படும் எனவும் தெரிவித்தார்.
வடமாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்காக இவ்வாறு 13 ஆவது அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்ட அமைச்சர், வடமாகாண தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தில் திருத்தம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். திட்டமிட்டபடி செப்டெம்பரில் வடக்குத் தேர்தல் நடத்தப்படும். சில வேளை வடக்கு தேர்தலுடன் வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, சகல கட்சிகளதும் கருத்துக்களை ஆராய்ந்த பின்னரே 13 ஆவது அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்படும். இந்த திருத்தங்கள் குறித்து மாகாண சபைகளினதும் அபிப்பிராயம் பெறப்படும்.
ஐக்கிய இலங்கையிலுள்ள 8 மாகாண சபைகள் இணைந்தால் அது தனி நாடாகி விடும். ஐக்கிய நாடொன்றினுள் மாகாண சபைகள் இணைய வேண்டிய தேவை கிடையாது. அதனாலே குறித்த பிரிவை நீக்க பிரேரிக்கப்பட்டுள்ளது.
இது தவிர தேசிய கொள்கையொன்று தொடர்பான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன்னர் மாகாண சபைகளின் பெரும்பான்மை அனுமதி இருந்தால் போதும் என யாப்பில் திருத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் சட்ட மூலத்தை நிறைவேற்றலாம். மாகாண சபைகளின் பெரும்பான்மை அனுமதி கிடைக்காவிட்டால் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த இரு திருத்தங்கள் குறித்த கூட்டுக் கட்சிகளின் யோசனைகளை முன்வைக்க ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சிகளிடையே மாறுபட்ட அபிப்பிராயங்கள் உள்ளன. அவை குறித்து ஆராய்ந்து பின்னர் 13 ஆவது திருத்தம் தொடர்பில் அமைச்சரவை இறுதி முடிவு எடுக்கும். 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கம் தெரிவுக்குழு ஒன்றை நியமித்தது. இதில் பங்கேற்குமாறு இந்தியா உட்பட பல தரப்பினர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தன. ஆனால், ஒரு வருடத்திற்கு மேல் சென்று தெரிவுக்குழுவினால் செயற்பட முடியவில்லை.
த.தே.கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராத நிலையிலே அரசாங்கம் இந்த திருத்தங்களை முன்வைத்துள்ளது. த.தே.கூ. வரவில்லையென அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை நிறுத்த முடியாது. தெரிவுக்குழுவில் எட்டப்படும் எத்தகைய முடிவையும் ஏற்கத் தயார் என ஜனாதிபதி ஏற்கெனவே உறுதியளித்திருந்தார். தேவை ஏற்படும் பட்சத்தில் மேற்படி இரு திருத்தங்களுக்கு மேலதிகமாக மேலும் திருத்தங்கள் செய்யப்படும். 13 ஆவது திருத்தத்திலுள்ள குறைபாடுகள் தொடர்பில் திருத்தம் முன்வைக்கப் பட்டுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலை நோக்கமாகக் கொண்டு 13 ஆவது திருத்தத்தில் திருத்தம் செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. ஒரு வருட காலத்துக்கு மேல் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்துகள் கூறப்பட்டு வந்தன.
Post a Comment