13 உம், முஸ்லிம்களின் அவசர குரலும்..!
அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி)
இலங்கை அரசியல் சட்ட 13 வது திருத்தத்தை சில மாற்றங்களுக்கு உட்படுத்தவேண்டும் என்ற வேலைத்திட்டங்கள் தற்போது மிக வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இதுவரை காலமும் வெறும் அறிக்கைகள் மூலமாக காணப்பட்ட இப்போராட்ட முயற்சிகள் அந்த எல்லையைத் தாண்டி தற்போது மாகாணசபைகள் தொடக்கம் பாராளுமன்றம் வரை தனிநபர் பிரேரணை வாதப் பிரதிவாதங்கள் என பல பரிமாணங்கள் பெற்றிருப்பது சிறுபான்மை இனம் என்ற வகையில் முஸ்லிம்களாகிய எம்மைப் பெரும் ஆபத்துக்குள் தள்ளியிருப்பதாகவே காணமுடிகிறது. இன்று இலங்கை அரசியல் செயற்களத்தில் சூடுபிடித்துள்ள இதைப்பற்றி பலரும் பல விதமாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
1987 இல் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜுவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவும் கையொப்பமிட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் சிறுபான்மை மக்களுக்கு சில உரிமைகளை உறுதிப்படுத்தும் ஏற்பாடாகவே இது அமைந்திருந்த்து. குறிப்பாக தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தவகையில் இலங்கை தமிழர்-முஸ்லிம் சிறுபான்மைகளுக்கு ஏதுவான அதிகாரங்களை நீக்குவதற்கான செயற்பாடாகவே 13 ஆம் திருத்தத்தை ஒழிப்பதற்கான பாய்ச்சலை அவதானிக்க முடிகிறது.
13 ஆம் அரசியல் சீர்திருத்தத்தின் கீழான காணி பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் இதுவே பெரும்பான்மை இன மக்களிடத்தில் மேலெலுந்து வரும் கருத்தாகும். சில தினங்களுக்க்கு முன்பு 13 வது சட்டத் திருத்தத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசனை செய்ய பாராளுமன்ற உயர் குழுவொன்றை உருவாக்கி இது குறித்து சீரியசாக செயற்படுவதானது துரதிஷ்டவசமாக அரசாங்கமும் இத்தகைய கோரிக்கைகளுக்கு செவிசாய்த்திருப்பதாகவே தெரியவருகிறது.
கடும்போக்கு பௌத்த கட்சிகளினதும் பிக்குகளினதும் ஆதரவை இந்த அரசாங்கம் பெற்றுக்கொள்ள நாடுமிடத்து 13 வது திருத்தத்தை நீக்க தலைப்படுவதை தவிர வேறு வழியில்லை என்பது நாமறிந்த உண்மையாகும். வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் அங்கு பெரும்பான்மை ஆதரவைப் பெற்று தமிழ் இனக் கட்சிகள் ஆட்சியமைத்தால் அது தமக்கு பெரும் தலையிடியாக மாறும் என்பதே 13 ஐ ஒழிப்பதற்கான இந்த பாரிய வேலைத்திட்டங்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் ஒரு குறுகிய (?) நோக்கமாகும்.
இந்தியாவின் உதவியுடன் பிரசவமான இந்த மாகாண அதிகாரங்களில் மேலும் குறைப்பை ஏற்படுத்துவதற்கு இந்தியா அங்கீகரிக்குமா? என்ற கேள்விகள் பலமாக எழுந்துள்ளன. இதற்கிடையில் அண்மையில் இந்தியா விடுத்த அழைப்பை ஏற்று த.தே.கூ தலைவர் இ.ரா சம்பந்தன் உள்ளிட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து 13 வது சட்ட திருத்தத்தை நீக்கச் செய்யும் நடவடிக்கைகளை தடுக்கவேண்டும் எனக் கோரிய போது பிரதமர் கூறிய பதில் இலங்கை தமிழர்களை கைவிடமாட்டோம் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதாகும்.
இந்தியா இன்னொறு பொதுத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள வேளையில் இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார குறைப்பினை ஏற்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கான சாத்தியங்கள் அரிதாகவே உள்ளன எனலாம். அத்தோடு இலங்கை இந்தியாவின் பகையாளியான சீனாவின் பக்கம் சாய்ந்திருப்பது இந்தியாவை பொருத்தமட்டில் அதிருப்திக்கு ஆளாக்கியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தோடு கூட்டணிக் கட்சிகளாக தொழிற்படும் சில சிங்கள கட்சிகள் 13 ஆம் சட்டத் திருத்தத்தை ஒழிப்பதற்கான பாய்ச்சலை எதிர்த்து தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவதை நாம் மறுப்பதிற்கில்லை. அந்த வகையில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார ராஜித சேனாரத்ன திஸ்ஸ விதாரண போன்றோரை நாம் மறந்துவிடலாகாது. எனினும் சந்தரப்பங்களுக்கு ஏற்றால் போல் சிலர் தமது கருத்துக்களை மாறி மாறி கூறிவருவதும் நமக்கொன்றும் புதிதல்ல!
அதேபோன்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை இனமாகிய முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் தெற்கில் அரசாங்கம் தனது ஆட்சி ஸ்திரத்தன்மையை தக்கவைத்துக்கொள்வதற்கும் தனது வாக்கு வங்கிகளை நிரப்பிக் கொள்வதற்கும் சில சிங்கள கடும்போக்குவாதிகளை திருப்திப்படுத்தவும் 13 ஆம் திருத்தத்தின் மீது கைவைக்கிறது. இதற்கு ஒரு போதும் எமது கட்சி ஆதரவு அளிக்காது இது எந்தவகையில் இருந்தாலும் நாம் எமது முழு எதிர்ப்பைக் காட்டுவோம் என தனது நிலைப்பாட்டை முன்வைத்திருப்பது சிறுபான்மை மக்கள் என்ற வகையில் முஸ்லிம்களாகிய நாம் நன்றி உணர்வோடு அதை இங்கு நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.
இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் போருக்குப் பிந்திய தமது சமய சமூக அரசியல் விவகாரங்களில் இரண்டு பெரும்பான்மை மக்களினாலும் ஒரு இரு தலைக்கொள்ளிப் போரை சந்தித்திருக்கும் இத்துருவாயில் கடந்தகால அரசியல் வரலாற்றைப் போலல்லாது முஸ்லிம் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டில் இறுதிவரை உறுதியாக இருக்கவேண்டுமென்பதே பெரும்பான்மை முஸ்லிம்களின் அவசர குரலாக உள்ளது.
லேட்டா வந்தாலும் லேடேஸ்டா வந்தாரு பாரு எங்கள் ஹக்கீம் காக்கா.இறைவன் எல்லோருடைய வாழ்விலும் பரக்கத் செய்யட்டும்
ReplyDelete