13வது திருத்தச் சட்டம் நீக்கப்படுமா - இந்தியா கவலை
13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது, இந்தியாவுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு முக்கியமான இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும் முயற்சிகள், வடக்கு மாகாணசபைத் தேர்தல் மீதான நம்பகத்தன்மையின் மீது நிழலைப் படியச் செய்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாணசபைகளின் அதிகாரங்கள் எந்த வகையிலேனும் குறைக்கப்பட்டால், தாம் தேர்தலைப் புறக்கணிக்க நேரிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஏற்கனவே பகிரங்கமாக எச்சரித்துள்ளனர்.
அது ராஜபக்ச அரசாங்கம் 13வது திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்ய நடவடிக்கை எடுத்தால், பதிலடியான நடவடிக்கையாக அமையும் என்றும் இந்திய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வடக்கில் தேர்தலை நடத்தப் போவதாக அனைத்துலக சமூகத்திடம் கூறிக்கொண்டே, இன்னொரு பக்கத்தில் கொழும்பு மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பறிக்கின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
மூன்று வாரங்களுக்கு முன்னர், மாகாணசபைகளின் காணி, காவல்துறை அதிகாரங்களைப் பறிக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியான போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை தொலைபேசியில் அழைத்து பேசியிருந்தார்.
இதன்போது, 13வது திருத்தத்தின் கீழ் உள்ள அதிகாரங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்று சல்மான் குர்ஷித் வலியுறுத்தியிருந்தார்.
இதனால், சிறிலங்கா அரசாங்கம் தனது உத்தியை மாற்றிக் கொண்டு, 13வது திருத்தத்தில் உள்ள குறைந்த உணர்வு சார்ந்த விவகாரங்களை நீர்த்துப் போகச்செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment