Header Ads



13 ஆவது சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம் - பைசர் முஸ்தபா

(Tn)வடமாகாண சபைக்குத் தேர்தலொன்றை நடத்த முன்னர் 13வது திருத்தச்சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என முதலீட்டு ஊக்குவிப்புப் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். 13வது திருத்தச்சட்டமூலத்தில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் குறித்த சரத்துக்கள் திருத்தியமைக்கப்பட வேண்டும்.

உரிய மாற்றங்களைச் செய்யாமல் வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதானது நாட்டின் இறைமைக்குப் பாதிப்பாக அமையும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு உலக வர்த்தக மையக் கட்டடத்தொகுதியில் உள்ள அமைச்சில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த அமைச்சர்,

சிறுபான்மை, பெரும்பான்மை இனங்கள் என்ற வேறுபாடு இன்றி நாட்டிலுள்ள அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் இணைந்து செயற்பட வேண்டிய காலம் தற்பொழுது தோன்றியுள்ளது. இந்த நிலையில் 13வது திருத்தச்சட்டமூலத்தில் திருத்தங்களைக் கொண்டு வரவேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு திருத்தங்களைக் கொண்டு வருவதானது சிறுபான்மை இன மக்களுக்கும் நன்மை பகிர்ப்பதாக அமையும்.

தேசிய ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அனைத்துக் கட்சிகளும் முன்வரவேண்டும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவைத் தவிர வேறெந்த மேடையும் சிறப்பான தளமாக அமைய முடியாது. இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் ஈழப் பிரகடனம் செய்தார். தமிழ்த் தேசிய இராணுவம் உருவாக்கப்பட்டது. கடந்த காலத்தில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு நாம் செயற்பட வேண்டியுள்ளது.

13வது திருத்தச்சட்டமூலத்தின் கீழ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதாயின் முதலமைச்சரே நியமிக்க வேண்டும் அல்லது பொலிஸ் ஆணைக்குழுவின் மூலம் அந்த நியமனம் இடம்பெற வேண்டும். அதேபோல காணி விடயமொன்றில் நடவடிக்கை எடுப்பதாயின் ஜனாதிபதி கூட முதலமைச்சரின் ஆலோசனையுடனேயே தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் 13வது திருத்தச்சட்டமூலமானது திருத்தியமைக்கப்பட வேண்டும்.

ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் வடமாகாணசபைத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எமக்குப் பாதிப்பு இல்லை. எனினும், அங்கு தேர்தல் நடத்தப்பட முன்னர் 13வது திருத்தச்சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது.

வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் குறித்துக் குரல் கொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்துக் குரல் கொடுப்பதில்லை. இவ்வாறான நிலையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்று காண்பதில் அக்கறையுடைய கட்சிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வந்து பேச்சு நடத்தித் தீர்வொன்றைகாண முடியும். இதனையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் வலியுறுத்தி வருகின்றார் என்றும் கூறினார். 

5 comments:

  1. தாங்கள் வடக்கு,கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்தவரா?

    ReplyDelete
  2. 13வது திருத்தம் நாட்டில் கொண்டு வரப்பட்டு எத்தனையோ ஆண்டுகள் கழிந்து விட்டன.

    இதுவரை காலமும் அதுபற்றி பேசா மடந்தையாக இருந்த ஆளுந்தரப்பினர் வட மாகாண சபைத் தேர்தல் நடக்கவிருக்கும் நேரம் பார்த்து இதை தூக்கிப் பிடித்துக்கொண்டு அலைவது ஏன்..?

    சிறுபான்மை மக்கள் இந்நாட்டில் தலை நிமிர்ந்து வாழக்கூடாது என்பதில் நீங்களும் உடன்பாடானவரா?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. இந்த நாட்டின் அரசியல் வரலாறும் சிறுபான்மை மக்களின் அடிப்படை பிரச்சினை புரியாதவர் போல் பேசுகிறார்.

    சார் ( சைபர் முஸ்தபா ) உங்களுக்கு இறைவன் அருளால் நல்ல குடும்ப பின்னணியும் பொருளாதார வசதியும் உள்ளது. பதவிகளுக்காக சிறு பான்மை மக்களின் உரிமைகளை குழி தோன்றி புதைக்காதீர்கள், கொச்சை படுத்தாதீர்கள். தயவு செய்து விடயங்கள் புரியா விட்டால் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  4. திருவாளர் பைசர் முஸ்தபா அவர்களே!
    அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதையே அதிகாரப்பகிர்வு எனப்படுகிறது. மாறாக உங்களது கருத்தும் இதற்கு மாறாக உள்ளது. அத்தோடு மட்டுமன்றி அதிகாரங்கள் தற்போதைய யாப்பின்படி ஜனாதிபதி என்பவரிடம் சட்டம், நிர்வாகம், நீதி, பாதுகாப்பு என்பவற்றோடு மேலதிகமாக நிறைவேற்று அதிகாரமும் கொண்டவராக காணப்படுகிறார். இது பாசிச அரசியல் போக்குக்கே வழிவகுக்கும் என்பது அரசியல் அறிஞர்களின் கருத்தாகும்

    மக்காளால் தெரிவுசெய்யப்படும் மக்கள் பிரதிநிதி மக்களுக்காக சேவை செய்யவே நாடாளுமன்றமாகிய சட்டமன்றத்தில் உறுப்பினர் எனும் அந்தஸ்த்தை பெறுகிறார்.மட்டுமன்றி மக்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவும் இவர்களால் மக்களுக்காக உரிமை, சுதந்திரம்,சமத்துவம் என்பவற்றை பாதிக்காத வகையில் சட்டங்களை இயற்றுகின்றனர். தற்கால சூழ்நிலையில் சட்டமன்றத்திலுள்ள அரசியல்வாதிகள் தங்களுக்கு சார்பான முறையிலே சட்டங்களை இயற்றுகின்றனர். அதிலும் நிறைவேற்று அதிகாரத்துரையின் கை பொம்மையாகவும் விளங்குகின்றனர். இங்கு சிறுபான்மையாகவுள்ள மக்களுக்கு அதிகாரங்களை (நிர்வாகம், நிதி, கல்வி,சமயம், கலாச்சாரம், தொழில், அபிவிருத்தி ) பகிர்ந்தளிப்பதில் பெரும்பான்மையாகவுள்ளவர்கள் தடையாகவே உள்ளனர்.அதற்கு உதவியாக சட்டமன்றத்தில் சகல சுகபோகங்களையும் அனுபவிக்கும் நமது சிறுபான்மை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நமது பிரதிநிதிகளும் கையையுயர்த்தி ஆதரவு வழங்குவது மிகவும் வேதனை தரும் விடையமாகும்.

    தற்கால சூழ்நிலையில் உள்ள பெரும்பான்மையான அரசியல்வாதிகள். மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து தங்களது சுயநலங்களுக்காகவும் சுகபோகங்களுக்காகவும் விலைபோகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதை மக்களும் தற்போதைய சூழ்நிலையில் நன்கு உணர்ந்துள்ளனர். இருந்தும் நமது ஏமாற்று அரசியல்வாதிகளின் கையாலாகாத நிலையாலும் நமது விட்டுக்கொடுப்புகளாலும் நமது வருங்கால சமுகத்தின் நிலை கவலைக்கிடமாகவே அமையும் என்பது இங்கு கவனிக்கப்படவேண்டிய விடையமாகும்.

    அரசாங்கத்தின் தீர்வுத்திட்டம் எனும் வெற்றுப்பெட்டியாகிய தெரிவுக்குழு என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சென்றாலும் அங்கு சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளும் நிச்சியம் கிடைக்கப்பட மாட்டாது என்பதையும் நாம் அவதானிக்க முடியும். காரணம் இங்கு பெரும்பான்மை பேரினவாதிகளே இக் குழுவில் அதிக உறுப்பினர்களை கொண்டதாக காணப்படுவர். இங்கு அரசு நிச்சயம் நம்மவர்களை விலைக்கு வாங்கும் அதில் இயற்றப்படும் சட்டங்களுக்கு நம்மவர்களும் கையையுயர்த்துவர் அதன்பின் அதுவும் சட்டமாக அமையும். பின்னர் பாதிக்கப்படுவது யார்?

    சட்டங்களை இயற்றுவதற்கு சட்டமன்றில் 2/3
    பெரும்பான்மையை கோரும் ஆட்சியாளர்கள் ஏன் இந்த தெரிவுக்குழு எனும் அரசின் வெற்றுப்பொதியை ஒரு கருத்துக்கதையாக்கி போலி நாடகமிடுகிறது என்பதை நமது சிறுபான்மை மக்களும் நன்கு உணர்ந்துள்ளனர்.

    இந்த அரசு வந்தபோது யுத்தத்தை முடிவுக்குகொணர்ந்து 13+ஆக வழங்கவுள்ளோம் என சர்வதேசத்திடம் வாக்குறுதி கொடுத்தது. தற்போது 13+ எங்கே ? அதற்குரிய பதில் அரசிடம் உள்ளதா ? முதலில் மக்களாகிய நாம் சிந்திப்போம்.

    தற்கால அரசியல் சூழ்நிலையில் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களாக சட்டத்தரணிகளே அதிகம் உள்ளனர். இவர்கள் சட்டங்களையும் சட்டத்திலுள்ள ஓட்டைகளையும் நன்கு அறிவர். அதனால்தானோ என்னமோ மக்களாகிய எம்மையும் இவர்கள் ஏமாற்றியவன்னமே உள்ளனர் என்பதை விட வேதனை ஒன்றுமில்லை என்பதைத்தான் என்னால் உணர முடிகிறது.

    நாயை கொண்டு நடுக்கடலில் வைத்தாலும் அது நக்கித்தான் நீர் அருந்தும். என்பது பழமொழி.

    ReplyDelete
  5. எடுங்கடா அந்த தேய்ந்த செருப்பை...

    ReplyDelete

Powered by Blogger.