புலிகளின் 120 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அரசாங்கத்தினால் பறிமுதல்
விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் 1.2 பில்லியன் (120 கோடி) ரூபா பெறுமதியான சொத்துக்கள் இலங்கை அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் இவை விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து கடந்தவாரம் இந்தச் சொத்துக்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளன.
காணிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அச்சகங்கள், வீடுகள், இயந்திரங்கள், ஆடைத்தொழிற்சாலைகள், மீன்பிடி இழுவைப்படகுகள் என்பன சுவீகரிக்கப்பட்டுள்ள இந்த 1.2 மில்லியன் ரூபா சொத்துகளில் அடங்கியுள்ளதாக தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில வாரஇதழுக்குத் தெரிவித்துள்ளார்.
இவை ஏலத்துக்கு விடப்பட்டு, அந்த நிதி திறைசேரிக்கு மாற்றப்படவுள்ளது. பெரும்பாலான இந்தச் சொத்துகள் கொழும்பில் உள்ளதாகவும், ஏனையவை பிற இடங்களில் இருப்பதாகவும், அந்த அதிகாரி கூறியுள்ளார்.
கடந்தவாரம் 55 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை வைப்பிலிடப்பட்டுள்ள வெளிநாட்டு வங்கிக்கணக்கு ஒன்றும், 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் வைப்பிலிடப்பட்டுள்ள பல்வேறு வெளிநாட்டு வங்கிக்கணக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் மேலும் பல நிலையான வங்கிக் கணக்குகளை தீவிரவாத புலனாய்வுப் பிரிவு கண்காணித்து வருவதாகவும், அவற்றின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவை விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
“மேலும் ஒரு பில்லியன் ரூபா வரை பெறுமதியான வங்கிக்கணக்குகளையும் சொத்துக்களையும் நாம் அடையாளம் கண்டுள்ளோம், அவையும் விரைவில் பறிமுதல் செய்யப்படும்” என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் நிதியை வைத்துள்ள மேலும் பல வங்கிக்கணக்குகளை கண்டறிய வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து தீவிரவாத புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது.
சுவீகரிக்கப்பட்டுள்ள சொத்துகளில் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றினால் இறக்குமதி செய்யப்பட்ட தொடர்பாடல் கருவியும் அடங்குகிறது.
சுவீகரிக்கப்பட்டுள்ள சொத்துகளில் கட்டுநாயக்க விமான நிலையம் அருகில் உள்ள நிலம் ஒன்றும் உள்ளது. விமான நிலையம் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்தவே இந்த நிலத்தை புலிகள் வாங்கியுள்ளனர்.
வெள்ளவத்தையில் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பெயரில் வாங்கப்பட்ட மூன்றுமாடி குடியிருப்பு ஒன்றும், கொட்டாஞ்சேனை ஜெம்பெட்டா வீதியில் உள்ள அச்சகம் ஒன்றும், யாழ்ப்பாணத்தில் ஈழநாதம் அச்சகமும் சுவீகரிக்கப்பட்டுள்ள சொத்துகளில் அடங்கியுள்ளன.
Post a Comment