Header Ads



வானியல் கணிப்பை பயன்படுத்தி ரமழான் மாதம் - முஸ்லிம் கவுன்ஸில் தீர்மானம்


Thinakaran

நவீன வானியல் கணிப்பை பயன்படுத்தி புனித ரமழான் மாதத்தை ஆரம்பிக்க பிரான்ஸ் முஸ்லிம் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர்.  இதன் மூலம் சுமார் 1400 ஆண்டு இஸ்லாமிய சம்பிரதாயத்தை மாற்றி நோன்பு பிடிக்கும் முதல் நாளை தீர்மானிக்க நவீன வானியல் முறை பயன்படுத்தப்பட வுள்ளது.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என பிரான்ஸ் முஸ்லிம் தலைவர்களுள் ஒருவரான அஸ்ஸதின் காசி ராய்ட்டருக்கு குறிப்பிட்டார். ‘தற்போது பிரான்ஸிலிருக்கும் அனைத்து முஸ்லிம்களும் ஒரே நேரத்தில் ரமழானை ஆரம்பிக்க முடியும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் ரமழானை ஆரம்பிப்பதில் ஏற்படும் பிரச்சினையை தீர்க்கும் வகையில் பிரான்ஸ் முஸ்லிம் கவுன்சில் கடந்த வியாழக்கிழமை நடத்திய வாக்கெடுப்பில், பிறை பார்ப்பதற்கு நவீன வானியல் கணிப்பை பயன்படுத்த ஆதரவு கிடைத்தது. கடந்த காலங்களில் வெறுங்கண்ணால் பிறை பார்த்தே புனித ரமழான் ஆரம்பிக்கப்பட்டு வந்தது.

சீரற்ற காலநிலைகள் ஏற்படும் பட்சத்தில் சம்பிரதாய முறையை கையாள்வதால் ரமழான் மாதம் ஒருநாள் அல்லது இரு நாட்கள் பிந்தியே ஆரம்பிக்கப்படுகிறது. பழைய முறையை பயன்படுத்துவதால் பிரான்ஸ் முஸ்லிம்கள் தொழில், கல்வி விடயங்களில் சிக்கலை சந்தித்து வருகின்றனர் என பிரான்ஸ் முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் மொஹமட் முஸ்ஸாய் குறிப்பிட்டார். ‘தற்போது எல்லாம் இலகுபடுத்தப் பட்டுள்ளது என அவர் விபரித்தார்.

புதிய முடிவின்படி, நவீன வானியல் கணிப்புக்கு அமைய எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ரமழான் மாதம் ஆரம்பிக்கும் என பிரான்ஸ் முஸ்லிம் கவுன்ஸில் அறிவித்துள்ளது.

இந்த முடிவின் மூலம் முஸ்லிம்களுக்கு விடுமுறை தினத்தைக் கோர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் நவீன வானியலை பயன்படுத்தும் முதல் நாடு பிரான்ஸ் அல்ல. துருக்கி நவீன வானியல் கணிப்பை பயன்படுத்தி ரமழான் மாதத்தை ஆரம்பிக்கும் முறையை ஒரு தசாப்தத்திற்கு முன்னரே ஆரம்பித்தது. அதேபோன்று ஜெர்மனி, பொஸ்னிய முஸ்லிம்களும் இந்த முறையை பயன்படுத்துகின்றனர். எனினும் ரமழான் மாதத்தை ஆரம்பிப்பதில் உள்ள பிறை பார்த்தல் முறை தொடர்பில் உலகில் பெரும்பாலான முஸ்லிம்களிடம் சிக்கல் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. இலங்கையில் நாங்கள் (கதிரியதுன் நபவிய்யாஹ் தரீக்கா ) ஒரு தலைமையின் கீழ் சுமார் 150 வருடங்களுக்கு மேல் ஹிஸாப் என்னும் சந்திர கணிப்பீட்டு முறையில் நோன்பை ஆரம்பித்து வருகின்றோம் . மாஷா அல்லாஹ் எங்களுக்கு இதில் எந்த ஒரு பிரச்சினையையும் இல்லை. அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete

Powered by Blogger.