Header Ads



மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லவும், ஆட்களை அனுப்பவும் புதிய நடைமுறைகள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு திறன் அபிவிருத்திப் பயிற்சி பெற்ற இலங்கைப் பணிப் பெண்களை விசேட கோட்டா அடிப்படையில் அனுப்பும் செயன்முறையினை வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இதனடிப்படையில், சவூதி அரேபியாவுக்குச் செல்லும் ஒவ்வொரு பணிப்பெண்ணும் 25 வயது பூர்த்தியாகியிருப்பதுடன் திறன் அபிவிருத்திப் பயிற்சியான என். வி. க்யு- 03இல் சித்தியடைய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ள தென வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச் சர் டிலான் பெரேரா கூறினார்.

இதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் சவுதி அரசாங்கத்துடன் கைச்சாத்திடவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கையிலுள்ள வெளிநாட்டு முகவர் நிலையங்களின் தரப்படுத்தலுக்கு அமைவாக அவற்றுக்கென பிரத்தியேகமாக வழங்கப்படும் கோட்டா முறைக்கமையவே எதிர்வரும் காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணியாட்களை அனுப்ப முடியும். அதன் படி இதுவரைக் காலமும் சுமார் மூவாயிரம் பேர் வரையில் அனுப்பி வந்த ஒரு முகவர் நிலையத்தினால் ஆகக்கூடியது 1500 பேர் மாத்திரமே மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக அனுப்ப முடியும். இச்செயற் திட்டத்திற்கு எதிராக பல சவால்கள் எழுந்துள்ள போதிலும் இதனை தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வோமெனவும் அமைச்சர் டிலான் நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.

இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு பணிப்பெண்கள் செல்வதை தடை செய்வது அல்ல எமது நோக்கம். அதற்கு பதிலாக சிறந்த தகைமையுடன் கூடிய மட்டுப்படுத்தப்பட்ட வீட்டு உதவியாளர்களை அங்கு அனுப்புவதே எமது இலக்காகும். மேலும் மத்திய கிழக்கை தவிர்ந்த ஹொங்கொங், சிங்கப்பூர், இத்தாலி, இஸ்ரேல், மொங்கோலியா ஆகிய நாடுகளிலும் திறன் அபிவிருத்திப் பயிற்சி பெற்ற இலங்கைப் பணிப் பெண்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டிருப்பதனால் இவற்றை நோக்கி பெண்களை ஊக்குவிக்கும் வகையிலேயே இத்திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கவர் நிலையங்களுக்கான கோட்டா முறைமை கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டது. இதன்படி முகவர் நிலையங்கள் தற்போது தரப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. கடந்த 05 வருடங்களுக்குள் அவற்றால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பான சேவை, குற்றச் செயல்கள் அனைத்தையும் கருத்திற்கொண்டு முகவர் நிலையங்களு க்கான தரங்கள் நிர்ணயிக்கப்படும். பின்னர் தரம் அடிப்படையில் ஆகக்கூடியது 1500 இலிருந்து வெவ்வேறு கோட்டாக்களில் ஆட்களை அனுப்புவதற்கு அனுமதிக்கப்படும்.

இருப்பினும் மத்திய கிழக்கின் ஏனைய நாடுகளுக்கு 23 வயது நிரம்பிய நிலையில் என். வி. க்யூ-03 கற்கையினை தொடருவது மாத்திரம் போதுமானதென தெரிவித்த அமைச்சர் சவூதி அரேபியாவுக்கு மாத்திரம் மேற்படி திறன் அபிவிருத்திப் பரீட்சையில் சித்தியடைவது கட்டாயமாக்கப் பட்டிருப்பதாகவும் கூறினார்.

மேலும் எதிர்காலத்தில் வெளிநாட்டில் தொழில் புரிய விரும்புவோர் தமது பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளைக்காரியாலயத்துக்கூடாக தம்மை பதிவு செய்துகொண்டால் அக்காரியாலயம் குறித்த நபர் நாட வேண்டிய முகவர் நிலையத்தை தரமடிப்படையில் தெரிவு செய்து வழங்கும். மேலும் பணியகத்தின் பிரதேச காரியாலயம் 18 முதல் 25 வயதான பெண்களும் ஆடைத் தொழிற்சாலை மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகள் தொடர்பிலும் பயிற்சிகள் வழங்கப்படவிருப்பதாக பணியகத்தின் தலைவர் அமல் சேனாதிலங்கார கூறினார்.

மேலும் என். வி. க்யூ-03 இனை அடிப்படை தகைமையாக கொண்ட எந்த வயதைச் சேர்ந்த பெண்களுக்கும் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சிறந்த வேலை வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சின் செயலாளர் எதிர்காலத்தில் இஸ்ரேல், மொங்கோலியா ஆகிய நாடுகளுக்கும் தொழில் நிமித்தம் இலங்கையர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். அத்துடன் பராமரிப்பு பணிகளில் விசேட பயிற்சி பெறும் இலங்கைப் பெண்களுக்கு இத்தாலியில் பெரும் கிராக்கி இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். thnaharan


No comments

Powered by Blogger.