யாழ்ப்பாணத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் நட்புறவுச் சங்கம்
யாழ்ப்பாணத்தில் வதியும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் நட்புறவுச் சங்கமொன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் வதியும் மற்றும் வருகைதரும் மூவின மக்கள் மத்தியிலும் புரிந்துணர்வையும், நட்புறவையும், கௌரவத்தையும் வளர்க்கும் நோக்கத்துடன் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக வதியும் மூவின சமூகத்தையும் சேர்ந்த நண்பர்களால் இச் சங்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இச்சங்கத்தின் இதர நோக்கங்களுள் சிலவாக யாழ்ப்பாணத்தில் வதியும் மற்றும் வருகை தரும் சகல தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களும் சந்தித்து நட்புறவை வளர்க்க ஏற்பாடு செய்தல், யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சகல சமூக மக்களும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் காலத்தில் யாழ் சமூகத்தின் ஒரு பாகமாக தங்கி இருந்து திரும்ப இயலுமான ஏற்பாடுகளை செய்தல், மற்றும் சகலரும் மும்மொழிகளிலும் பரிச்சயமாக ஊக்குவித்தல் எனக் குறிப்பிடப்படுகிறது.
இச் சங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் சாமிநாதன் விமல் (விரிவுரையாளர்), ஹர்சா தொம்பகல (பொறியியலாளர்), டொக்டர் தினமித்ர (மருத்துவர்), டொக்டர் நிசங்க (மருத்துவர்), அப்துல் ஜமால் மொகிதீன் (தொழிலதிபர்), செல்வி சர்மிலா ஹனீபா (சமூக சேவகி), செல்வி அப்துல் றுசீயா (சமுக சேவகி), சூரியசேகரம் (பொறியியலாளர்), ஜோர்ஜ் (ஆசிரிய ஆலோசகர்), சிவபாலன் (வங்கியாளர்), ரெங்கன் (சட்டத்தரணி) ஆகியோர் சங்கத்தின் நடப்பாண்டிற்கான செயற்பாட்டுக்குழு உறுப்பினர்களாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.சங்கத்தின் முதல் வேலையாக சங்கத்தின் நோக்கங்களை ஏற்றுக்கொண்டு அங்கத்தவர்களாகும் சகலரும் சந்தித்து கலந்துரையாடுவதற்கும் பரஸ்பர நட்புறவை வளர்த்துக் கொள்வதற்கும் யாழ் நகரில் வசதியான கட்டிமொன்றை வாடகைக்குப் பெற்றுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண சரித்திரத்தில் இதுவே முதலாவது மூவின நட்புறவுச் சங்கமென கூறப்படுகிறது
Post a Comment