முசலிப் பிரதேசத்தில் தென்னை மீள்நடுகை ஆரம்பிக்கப்படுமா..?
(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)
முசலிப் பிரதேசசெயலாளர் பிரிவில் உள்ள கரையோரப்பிரதேசத்தில் 1990 வரை பல ஏக்கர்கள் கொண்ட தென்னந்தோட்டங்கள் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை முஸ்லிம் மக்களுக்குச்சொந்தமானவை இத்தென்னந்தோட்டஙகள் முஸ்லிம்களின் பலவந்த இடப்பெயர்வின் பின்பு யுத்த நோக்கங்களுக்காக மானிடர்களாலும்,உணவுக்காக மிருகங்களாலும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.இன்று இத்தோட்டங்கள் புதர்களாகக்காட்சி தருகின்றன.
இதேபோன்று இப்பிரதேசத்தில் வசித்த குடும்பங்களின் வளவுகளில் குறைந்தது 8 -10 தென்னை மரங்களாவது இருந்தது.இதன்மூலம் இக்குடும்பங்கள் சுயதேவையைப் பூர்த்தி செய்யும் நிலையில் இருந்தது.அவர்களின் தென்னை மரங்களும் மேற்சொல்லப்பட்ட காரணிகளால் காவுகொள்ளப்பட்டுள்ளன.
இவர்களுக்கான தேங்காய்கள் புத்தளத்தில் இருந்து தருவிக்கப்படுகின்றன.இம்மக்கள் மீளக்குடியேறி ஒரு தசாப்தம் கழிந்த பின்பும் இப்பிரதேசத்தில் தென்னை மீள் நடுகை தொடர்பான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் பாடசாலைகளில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நான்கு வருடங்களில் பலன் தரக்கூடிய தென்னங்கன்றுகள் வழங்கும் செயற்றிட்டங்களும் செயற்படுத்தப்படுகின்றன.அம்மாணவன் தரம் 10 ஜ அடையும்போது அவனால் தேங்காய் பறிக்கமுடியும்.இச்செயற்றிட்டம் இங்கும் விஸ்தரிக்கப்படவேண்டும்.
தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அமைச்சால் அமுல்ப்படுத்தப்படும் கப்றுக்க செயற்றிட்டம் எப்போது எமது பகுதிகளில் அமுல்ப்படுத்தப்படும் என்று இப்பிரதேச மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

Post a Comment