Header Ads



கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு பாரிய அநீதி - இம்ரான் மஹ்ரூப்


(அப்துல்சலாம் யாசீம்)

கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியத்தில் 80 வீதமானோர் முஸ்லிம்களாக இருந்தும் நியமனங்களின் போது முஸ்லிம்களுக்கு பாரிய அநீதி இடம்பெற்று வருவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். 

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மாஞ்சோலையில் இடம்பெற்ற எம்.ஈ.எச்.மஹ்ரூப் மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

நியமனங்களின் போது எந்த இனத்தாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் 1990 ஆம் ஆண்டு இனவிகிதாசார நியமனத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக பொதுநிர்வாகச் சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. 

இந்தச் சுற்றறிக்கை இன்னமும் நடைமுறையிலுள்ளது. எனினும் கிழக்கு மாகாணத்தைத் தவிர வேறெங்கும் இது நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. இதனால் சிறுபான்மையினருக்கு பல்வேறு பாதிப்புகள் உள்ளன.

கிழக்கு மகாணத்தில் மட்டும் இந்தச் சுற்றறிக்கையை அமுல்படுத்துவதற்கான காரணத்தை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டுமென்றில்லை. இதன் யதார்த்த நிலையை அனைவரும் அறிவர். இது ஒரு புறமிருக்க இந்தச்சுற்றறிக்கை சரியாக அமுல் படுத்தப்படாததால் முஸ்லிம்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது இந்தச்சுற்றறிக்கை வெளியிடப்படும் போது 1981 ஆம் ஆண்டு சனத்தொகை அறிக்கையே உத்தியோகபூர்வமானதாக இருந்ததால் அது பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது புதிய சனத்தொகை அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி முஸ்லிம்களின் விகிதாசாரம் கிழக்கு மாகாணத்தில் சுமார் 5 வீதம் அதிகரித்துள்ளது.

எனவே, இதற்கேற்பவே நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். எனினும் இன்னும் பழைய தரவுகளே பின்பற்றப்படுவதால் அண்மையில் கிழக்கு மாகாணத்தில் வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர், பட்டதாரி ஆசிரியர், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்ற நியமனங்களில் முஸ்லிம்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு 3 மாதங்களுக்கு முன் எழுத்து மூலம் நான் வேண்டுகோள் விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கிழக்கு மாகாண அமைச்சரவையில் 80 வீதமானோர் முஸ்லிம்களாக இருந்த போதிலும் முஸ்லிம்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அவர்களால் நிவர்த்திக்க முடியவில்லை. இதுதான் இன்றைய கிழக்கு மாகாணசபையின் நிலையாகும். இதனை நினைக்கும் போது மிகவும் வேதனையாகவுள்ளது.

No comments

Powered by Blogger.