முஸ்லிம்களின் கல்வியில் மகத்தான மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன - ரவூப் ஹக்கீம்
இன்று முஸ்லிம்களின் கல்வியில் மகத்தான மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. நகர் புறங்களில் மட்டுமல்லாது, கிராமப் புறங்களில் இருந்தும் அதிவிஷேட சித்தி பெறும் ஏராளமான மாணவர்களை நாம் காண்கின்றோம் என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், கொழும்பு 4 பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி இஸ்லாமிய தின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது கூறினார்.
செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் ஹாஜரா மண்டபத்தில் அதிபர் கலாநிதி ஜே.எம்.கே. பி. ஹஜர்ஜான் மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வு இடம்பெற்றது. கொழும்பு நகரபிதாவின் துணைவியார் திருமதி முஸம்மிலும் இதில் பங்குபற்றினார். மாணவிகளின் நிகழ்ச்சிகள் பல இடம்பெற்றன. இந் நிகழ்வில் உரையாற்றும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தவையாவன,
கடந்த நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க காலகட்டமாகும். வாப்பிச்சி மரிக்கார், அறிஞர் சித்திலெப்பை, என்.டி.எச். அப்துல் கபூர், ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ், சேர் ராசிக் பரீத் போன்றோரின் மகத்தான பங்களிப்பு அக்கால இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் குறிப்பிட்டு கூறக்கூடியதாகும்;.
சில காலத்துக்கு முன்னர் நான் சிறந்த கல்விமானும், செனட்டருமான அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் பற்றிய நூற்றாண்டுச் சொற்பொழிவை ஆற்றியிருந்தேன். அவ்வாறே முன்னாள் அமைச்சரும், கல்விமானுமான ரீ.பி. ஜாயா நினைவுச் சொற்பொழிவையும் ஆற்றியிருந்தேன்.
அவர்களது முன்னோடி முயற்சிகளின் ஊடாக அக் காலகட்டத்தில் கல்வி கற்பதில் முஸ்லிம் சமூகம் காண்பித்து வந்த தயக்கம் பற்றி நன்கு கண்டறியப்பட்டது. இந் நாட்டில் ஐரோப்பிய காலனித்துவ வாதிகளின் காலத்தில் கல்வித்துறையில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. அவர்களது பாடசாலைகளில் சென்று கல்வி கற்பது மதமாற்றத்திற்கு வழிவகுத்து விடும் என்ற காரணத்தினால் முஸ்லிம் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அவ்வாறான பாடசாலைக்கு அனுப்புவதற்கு பின் வாங்கினர்.
அந்த அச்சத்தின் காரணமாக பெண் பிள்ளைகளின் கல்விக்கு முஸ்லிம் பெற்றோர் முற்றுப்புள்ளி வைக்கவும் துணிந்தனர். இதுதான் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த நிலை. இவ்வாறான சூழ்நிலையில் தான் எகிப்து நாட்டிலிருந்து இராணுவ கேர்ணலாக இருந்து ஆட்சியாளர்களுக்கு தலையிடியாக கருதப்பட்ட ஒராபி பாஷா, பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் அங்கமாக இருந்த அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அவரது வருகை, இலங்கை முஸ்லிம்கள் கல்வியை தாகித்திருந்த காலகட்டத்தில் சம்பவித்தது.
அப்பொழுது இளம் வழக்கறிஞராக இருந்த அறிஞர் சித்திலெப்பையின் தொடர்பு ஒராபி பாஷாவின் ஆர்வத்திற்கு உற்சாகமூட்டியது. இலங்கையில் அஞ்ஞானவாசம் அனுபவித்த காலகட்டத்தில் ஒராபி பாஷா இந் நாட்டின் கல்வி மறுமலர்ச்சியில் காட்டிய கரிசனைப்பற்றி வெகு சிலரே அறிந்திருந்தனர்.
அவரும், அவருடன் நாடு கடத்தப்பட்ட ஏனைய பதினான்கு பேரும் தற்போதைய லேக்ஹவுஸ் அமைந்துள்ள இடத்திலேயே தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவரது நல்வாழ்வில் பிரித்தானிய பாராளுமன்றம் அதிக கரிசணை செலுத்தியதால் ஆளுநர் அவரை நன்கு உபசரித்து வந்தார். அவர் தைரியமானவர், மக்கள் மனம் கவர்ந்தவர். ஏளிமையான வாழ்க்கை வாழ்ந்த அவரை இலங்கை முஸ்லிம்கள் அதிகம் நேசித்தனர்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் டெப் என்பவர் ஒராபி பாஷா பற்றி ஆராய்ந்து ஓர் அருமையான புத்தகத்தை எழுதியிருக்கிறார். இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அந் நூலில் அவர் மிகவும் சிலாகித்துக் கூறியுள்ளார்.
அந்த நூலின் ஒரு பிரதியை அவரது மகனான தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசர் டெப் எனக்கு அன்பளிப்பாக வழங்கினார். அதனை வாசித்த போது நான் பல வியப்புக்குரிய சம்பவங்களை பற்றி அறிந்துகொண்டேன்.
மருதானை முதல் டிவிஷன் ஒராபி பாஷாவின் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.
முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபராக இருந்த ஆயிஷா ரவூப் அவர்களும் அளப்பரிய பணியாற்றியிருக்கிறார்.
இந்தப் பாடசாலையில் கூட பல்வேறு பின்னணிகளைக்கொண்ட குடும்பங்களில் இருந்து சிரமங்களுக்கு மத்தியில் வந்து மாணவிகள் கல்வி பயில்வதை நான் அதிபரின் ஊடாக அறிந்து கொண்டேன். மாணவர்களை பாதுகாத்து, திறம்பட கண்காணித்து, அவர்களை புடம்போட்டு, சமூகத்திற்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும் பிரஜைகளாக்குவது இவ்வாறான பாடசாலைகளின் பொறுப்பாகும். இதனை அடையப்பெறுவதற்கு நிறைய அர்ப்பணங்கள் அவசியமாகின்றன.
நான் 1973 ஆம் ஆண்டில் கொழும்பு றோயல் கல்லூரியில் புலமை பரிசில் பெற்ற மாணவன் ஒருவராக முதன் முதலாக பிரவேசித்த போது பெற்றுக்கொண்ட அனுபவங்கள் ஏராளமானவை. எங்கள் கல்லூரியிலும் வௌ;வேறு சமூக பின்னணிகளைக்கொண்ட மாணவர்கள் கல்வி கற்றனர். ஒரு நல்ல பாடசாலை எந்த கடினமான சுபாவம் கொண்ட மாணவனையும் வளைத்தெடுத்து புடம்போட்டு நெறிப்படுத்தும் ஆற்றலைக்கொண்டுள்ளது.
படிப்பு மட்டுமன்றி விளையாட்டு, புறக்கிருத்திய தொழிற்பாடு போன்ற பல் துறை திறமைகளை மாணவரில் வளர்த்தெடுப்பது பாடசாலைகளின் பணியாகும்.
இன்று கல்வித்துறையில் மகத்தான மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. நகர் புறங்களில் மட்டுமல்லாது, கிராமப் புறங்களில் இருந்தும் அதிவிஷேட சித்தி பெறும் மாணவர்களை நாம் காண்கின்றோம்.
இந்த மாற்றம் பாடசாலை ஆசிரியர் குழாத்தினதும், பெற்றோர்களினதும் உன்னதமான பங்களிப்புடன் சம்பவிக்கின்றது. பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் என்பனவும் இதில் அரும்பணியாற்றுகின்றன.
பாடசாலைக்கு வேண்டிய அனைத்தையும் அரசாங்கம் மட்டுமே செய்ய முடியாது. கொழும்பில் உள்ள 20 முஸ்லிம் பாடசாலைகளில் சிலவற்றில் மட்டுமே சிறந்த பெறுபேறுகள் கிடைத்தவண்ணமுள்ளன. அநேகமானவை தங்களது கல்வித் தரத்தில் பின்னடைவையே கண்டுள்ளது கவலைக்குரியதாகும்.
இன்று கல்வி கூடங்களைப் பொறுத்தவரை மாறுபட்ட பரிமாணங்களை நாம் கண்கூடாக காண்கிறோம். இஸ்லாமிய சர்வதேச பாடசாலைகளின் தோற்றம் ஒரு குறிப்பிடத்தக்க பரிமாணமாகும். எனது தேர்தல் மாவட்டமான கண்டியில் பேராதனை வீதியில் மட்டும் ஆறேழு முஸ்லிம் சர்வதேச பாடசாலைகள் காணப்படுகின்றன. இது முஸ்லிம் பெற்றோர் தமது பிள்ளைகளை முன்னணிப் பாடசாலைகளில் சேர்ப்பதற்கு எத்துணை சிரமப்பட வேண்டியிருக்கின்றது என்பதை நன்கு எடுத்துக்காட்டுகின்றது.
சார், அரச்ச மாவையே அரைக்காமல் உங்களால் இந்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் என்ன செய்துள்ளீர்கள்..!!! என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து செயற்படுங்கள்.
ReplyDeleteமுஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் அவர்கட்கு ஒரு வித பெருமை அரசியல் வாதிகளை பாடசாலைக்கு வரவழைப்பதில். இது வரைக்கும் எத்தனையோ அரசியல் வாதிகள் வந்து சென்று விட்டார்கள் ஐந்து சதமேனும் கிடைத்ததா இல்லை. அநியாயமாக ஏழை மாணவிகளின் பணத்தை வீணாகிக்கின்றார் அப்பாடசாலையின் பெற்றோர் என்ற வகையில்தான் இதை எழுதுகிறேன் தயவு செய்து பிரசுரிக்கவும்
ReplyDeleteY didn't. U publish my comments.
ReplyDeleteIn this matter.