பொலிஸ் நிலையத்தில் சாப்பிட்டுவிட்டு, பொலிஸாரை சுட்டுக்கொன்ற தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தாக்குதல் நடத்தி வரும் தலிபான் போராளிகள் ‘அரபு வசந்தம்’ என்ற பெயரில் கடந்த மாதம் அதிரடித் தாக்குதலை ஆரம்பித்தனர். ஆப்கன் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்தப்படும் இந்த தாக்குதல்களால் உயர் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு காந்தகார் மாகாணத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடிக்கு 2 நபர்கள் வந்தனர். அவர்கள் இரவில் அங்கு தங்குவதற்கு அனுமதி அளித்த போலீசார், அவர்களுக்கு உணவும் அளித்தனர். ஆனால், சாப்பிட்டு முடிந்த கையோடு, அந்த நபர்கள் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக போலீசாரை நோக்கி சுட்டனர்.
இதில் 7 போலீசார் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் பலத்த காயம் அடைந்தார். பின்னர் அவர்கள் போலீஸ் ஜீப்பில் தப்பிச் சென்றனர். செல்லும்போது சோதனைச் சாவடியில் இருந்த ஆயுதங்களையும் அள்ளிச் சென்றனர். இதுதொடர்பாக காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தாக்குதல் நடத்திய 2 பேரும் இதற்கு முன்னர் காவல்துறையில் பணியாற்றியவர்கள்.
ஆனால் வேலையை விட்டு சென்றுவிட்டனர். அதன்பின்னர் மீண்டும் போலீசில் சேர விரும்புவதாக கூறியுள்ளனர். ஆனால் விருந்து சாப்பிட்டதும் போலீசாரையே கொன்றுவிட்டனர்” என்றார். இந்த தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
Post a Comment