Header Ads



முஸ்லிம்களும், பாடசாலைக் கல்வியின் இலட்சியமும்..!

திருமதி M நாஸிர்

புகழனைத்தும் அல்லாஹ்விற்கே

இன்றைய முஸ்லிம் சமூகத்தில் பேசப்படும் முக்கிய பிரச்சினையாக முஸ்லிம்களின் கல்வி நிலையுள்ளது. முஸ்லிம்கள் கல்வியில் பின் தங்கியுள்ளார்கள் அவர்களை கல்வியில் முன்னேற்றினால்த் தான் சமூகம் வெற்றியடையும் என்ற சிந்தனை பரவலாக ஏற்பட்டு அதற்கான முயற்சிகள் பல முடுக்கி விடப்பட்டுள்ளன. 

ஆனால் அதற்கான முயற்சிகள் சரியான இலக்கை நோக்கி நகர்த்தப்படுகிறதா? சரியான வழியில் நகர்த்தப்படுகிறதா? என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாக இருக்கிறது. ஏனெனில் முஸ்லிம்களாகிய நாம் ஏனைய சமூகத்தைப் போலல்லாது இம்மை மறுமை இரண்டையும் வெற்றி கொள்ளவே எமது இலக்கை நிர்ணயிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். 

உண்மையான வெற்றி என்பது மரணத்தின் பின் அல்லாஹுத்தஆலாவின் திருப்தியுடன் அவனது அன்பளிப்பான சொர்க்கத்தை அடைந்து கொள்வதாகும். இதை அடைந்து கொள்ள தனி நபர், குடும்பம், பாடசாலை, கிராமம், சமூகம் அனைத்தையும் இஸ்லாமிய மயமாக்குதல் அத்தியவசியமானதாகும். அல்லாஹுத்தஆலா மனிதனுடைய வெற்றியை ஈமான் ஸாலிஹான அமல்கள் மூலம் மட்டுமே அடைய முடியும் என்பதாக வரையறை செய்தும் வைத்திருக்கிறான்.

அதே நேரம் தற்போதைய முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுடன் தங்களை ஒப்பிட்டு அவர்கள் அடைகின்ற உலக சாதனைகளை முஸ்லிம் பெயர்களைத் தாங்கியவர்களும் அடைவதுதான் வெற்றி என்ற இலக்கை வைத்துக் கொண்டு அதனை நோக்கியே தமது பயணத்தைத் தொடர்வதை காண்கிறோம். அத்துடன் சமூகமும் இந்த இலக்கை அடையவே வழி நடாத்தப்படுவதையும் கண்டு கொண்டிருக்கிறோம்.

உலகத்தை வெற்றி கொள்ளப் படிக்க வேண்டும். என்னும் கருத்து வலியுறுத்தப்படுகிறது. உலகக் கல்வியையும் மார்க்கக் கல்வியையும் பிரிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் எமது சமூகத்தில் மார்க்கக் கல்வி வேறு உலகக் கல்வி வேறு என்னும் நிலையே காணப்படுகிறது.

இதற்குக் காரணம் நாம் கல்வி கற்கும் சூழல் இஸ்லாத்தை விட்டும் முற்றிலும் மாறுபட்ட சூழலாக இருப்பதோடு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் இஸ்லாமிய அறிவோ இஸ்லாமியப் பண்புகளோ அற்றவர்களாக இருப்பதும் இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்ட பல விடயங்களையும் அந்நியக் கலாச்சாரங்களையும் எமது கல்விச் சூழலில் ஏற்றுக் கொண்டதுமாகும். இதனாலேயே பாடசாலைகளிலிருந்து வெளியாகும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியக் கடமைகளையும் வாழ்க்கை முறைகளையும் புறந்தள்ளுபவர்களாக உருவாக்கப்படுகிறார்கள். 

இஸ்லாமிய வாழ்க்கை முறைகள் பாடசாலைக்கு வெளியே நடைபெறும் தஃவத்துடைய முயற்சிகளின் காரணமாகவே முஸ்லிம் சமூகத்தில் ஓரளவு உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  நிச்சயமாக முஸ்லிம்கள் கல்வி கற்க வேண்டும் ஆனால் அக் கல்வி இஸ்லாத்தைப் பாதுகாக்க உதவ வேண்டுமே தவிர படிப்புக்காக இஸ்லாத்தைத் தியாகம் செய்வதாக அமையக் கூடாது.

அல்லாஹுத்தஆலா முஸ்லிம்களின் கைகளில்தான் உலக சுபீட்சத்திற்கான உழைப்பை  ஒப்படைத்துள்ளான் அதுதான் இஸ்லாம் என்னும் வாழ்க்கை முறை. நபியவர்களும் ஸஹாபாக்களும் இஸ்லாத்தைப் பாதுகாக்கத்தான் உயிரையும் தியாகம் செய்தார்கள். அதன் மூலம்தான் வெற்றி பெற்றார்கள். ஆனால் பாடசாலைகளுக்காக நாங்கள் இஸ்லாத்தையே இழந்து கொண்டிருக்கிறோம். நிச்சயமாக இதன் மூலம் வெற்றி அடைய முடியாது.

பாடசாலைக் கல்வியின் நோக்கம் தொழில் வாய்ப்பு மாத்திரமேயாகும்.  சமூகத்திற்கு அங்கத்தவர்களாக வழங்கப்படும் ஒவ்வொருவரும் பாடசாலை சென்றவர்களே. அவர்களில் இருந்துதான் கொலை கொள்ளைகளில் ஈடுபடுபவர்கள், மதுப் பிரியர்கள், துஷ்பிரயோகக் குற்றவாளிகள், ஊழல் பேர்வழிகள், இன்னும் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சிறைச் சாலைகளை நிரப்பியிருக்கும் அனைவரும் பாடசாலை சென்றவர்களே. அவர்களைச் சிறைச்சாலைக்கு உரியவர்களாக மாற்றியது பாடசாலைச் சூழலே. பாடசாலையிலிருந்து வெளியாகும் முஸ்லிம் மாணவர்களிடமும் பாவங்கள் சர்வசாதாரண விசயமாகவே ஆகியிருப்பதைப் பார்க்கலாம்.

பாடசாலைக் கல்வி முறை மிகப் பெரிய வேலையற்றவர்களின் படையை உருவாக்கியுள்ளது. பாரம்பரியத் தொழில்கள் பல கை விடப்படும் நிலை இதன் மூலமே உருவாக்கப்படுகிறது. பாடசாலையிலிருந்து வெளியாகும் அதிகமான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கே வேலை தேடி படையெடுக்கிறார்கள் 

நாம் கல்வி கற்பதற்காக பாடசாலைகளையே தெரிவு செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் பாடசாலைகள் முஸ்லிம்களாகிய எமக்கு வேண்டிய  ஈமானியச் சூழலையோ இஸ்லாமிய வாழ்க்கை முறையையோ கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பளிப்பதே இல்லை.  ஏனைய சமூகங்கள் போலல்லாது அனைத்து முஸ்லிம் பிள்ளைகளும் பாடசாலைக்குள் நுழைவிக்கப்படுகிறார்கள்.

அதே நேரம் 12, 13 வருடங்கள் பாடசாலைகளில் மாணவர்களின் காலங்கள் செலவழிக்கப்படுகின்றன. இறுதியில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் வெறும் பதர்கள் போன்று மார்க்க அறிவோ உலக அறிவோ இல்லாமல், பாவங்களுக்குப் பயப்படாதவர்களாக ஒழுக்கம் குறைந்தவர்களாக சினிமா அல்லது விளையாட்டு மோகமுடையவர்களாக மேற்கத்தேய சிந்தனைகளை சுமந்தவர்களாக இறையச்சம் இல்லாதவர்களாக கீழ்ப்படிவற்றவர்களாக சமூகத்திற்கு வழங்கப்படுகிறார்கள். 

பாடசாலைகள் கல்வியையும் இறையச்சத்தையும் ஒழுக்கத்தையும் ஒரே நேரத்தில் வழங்குவதற்குப் பொருத்தமான இடங்களாக இல்லை. 

பாடசாலைகளில் பல வகையான சிந்தனைப் போக்கைக் கொண்ட மாணவர்கள் ஒன்று கூட்டப்பட்டு பல மணி நேரங்களின் பின் வெளியாக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களின் சிந்தனைப் போக்குகளில் மாற்றம் ஏற்படுகிறது. அத்துடன் அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பல வகையான சிந்தனைப் போக்குகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு ஆசிரியர் சிறந்த இறையச்சமுடையவராக இருப்பார். அவர் மாணவர்களிடையே ஈமானுக்கான பகீரத முயற்சியை மேற்கொள்வார். 

அடுத்த ஆசிரியர் நாஸ்த்திகராக இருப்பார்.அடுத்தவர் சினிமா ரசிகராகவும் இசைப் பிரியராகவும் இருப்பார் அடுத்தவர் ஊழல், வட்டி, இலஞ்சம் போன்றவற்றை சர்வசாதாரண விடயமாக எடுத்துக் கொள்வார். அடுத்த ஆசிரியர் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட சித்தாந்தங்களில் பற்றுடையவராக இருப்பார்.

ஆண் மாணவர்களுக்கு பெண்கள் கற்பிக்கும் போது அம்மாணவர்களிடம் பெண்களின் பல குணங்கள் கடத்தப்படுவதாக ஆய்வுகளில் சுட்டிக் காட்டப்பட்டுகின்றன. தான் கற்பிக்கும் மாணவிகளைக் காமக் கண் கொண்டு பார்த்து தமது உணர்ச்சிகளை கட்டுபடுத்த முடியாமல் செயல் வடிவமாகவும் எழுத்து வடிவமாகவும் வெளிப்படுத்தும் ஆசிரியர்களும் உள்ளனர். 

ஆசிரியைகள் பலர் தனது ஹிஜாபுடைய வாழ்க்கை பற்றிய தெளிவான அறிவற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களைத் தங்களது முன் மாதிரியாகக் கொள்வதற்கு மாணவிகளுக்கு முடியாமல் போய் விடுகிறது. இவ்வாறாக பல வகைப்பட்ட சிந்தனைகளையுடைய ஆசிரியர்களால் ஒரே மாணவர்கள் கற்பிக்கப்படுவதால் மாணவர்களும் பல வகையான சிந்தனைக் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். 

பாடசாலைகளில் அதிகளவு நேரங்கள் வீண்விரயமாக்கப்படுகிறது. பாடசாலையில் செலவிடப்படும் நேரத்திற்கும் பெற்றுக் கொள்ளும் அறிவிற்கும் உள்ள விகிதம் மிகக் குறைவாகும்.  அத்துடன் பாடசாலைகளில் கொடுக்கப்படும் வீட்டு வேலைகள் காரணமாக தொழுகைக்காகவோ மார்க்கக் கல்வியைக் கற்பதற்காககோ ஏனைய மார்க்கக் கடமைகளுக்காகவோ நேரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. 

பாடசாலைகளில் காணப்படும் ஆண் பெண் தொடர்பு இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமானது.  கலவன் பாடசாலைகளாக இருந்தால் சரியான பருவ வயதில் ஆண்களையும் பெண்களையும் கலந்து வகுப்புகளை அமைத்து விடுகிறார்கள். ஆண், பெண் ஆசிரியர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூட்டப்படுகிறார்கள். ஆசிரியர்களிடமிருந்து சில சலுகைகளுக்காகவும் அதிக புள்ளிகளைப் பெறுவதற்காகவும் ஆசிரியரிடம் தமது கற்பைத் தொலைத்த மாணவிகளும் எமது முஸ்லிம் சமூகத்தில் இல்லாமலில்லை

இவை அனைத்தையும் பார்க்கும் போது ஷைத்தானின் பக்கம் அழைக்கப்படும் அழைப்புக்கு அதிக இடத்தையும் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும் அழைப்புக்கு மிகக் குறைந்த இடத்தையும் பாடசாலைகள் வழங்கிக் கொண்டிருக்கின்றன.  பாடசாலைகளில் பாலும் நஞ்சும் ஒரே இடத்தில் சேர்க்கப்படுகின்றன. பரிசுத்தமான ஆரம்ப நிலையிலிருந்த பிஞ்சு உள்ளங்களில் படிப்படியாக ஷைத்தானியத் தன்மை பாடசாலைகளினூடாக ஊட்டப்படுகிறது.

ஒரு கோப்பைப் பாலுக்குள் சிறிதளவு நஞ்சு கலந்தாலும் அப்பால் நஞ்சாகவே மாறும் அதேபோல் சுத்தத்துடன் சிறிது அசுத்தம் கலந்தாலும் அது அசுத்தம்தான். நேரும் மறையும் கலக்கும் போது விளைவு மறைதான்.

நமது சமூகத்தில் அதிகளவு படித்தவர்கள் உருவாக்கப்பட்டுள்ளார்கள் ஆனால் அவர்களிடம் காணப்படும் இஸ்லாமிய அறிவும் இஸ்லாமியப் பண்புகளும் மிகவும் பரிதாபத்திற்குரியதாகும். முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அச்சமும் கொடுக்கப்படுவதுடனேயே உலகக் கல்விக்காக வழி காட்டப்பட வேண்டும். அதன் மூலமே மிகச் சிறந்த வெற்றியடையக் கூடிய முஸ்லிம் சமுதாயம் உருவாக்கப்படும்.

அத்துடன் கல்வி கற்கும் சூழலினதும் கற்பிக்கும் ஆசிரியர்களினதும் பின்னணி சிறப்பானதாக அமைய வேண்டும்  பாடசாலைகள் வெறும் படித்தவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனவே தவிர அறிவுடையோரையல்ல.

பாடசாலைப் படிப்பில் மிகவும் திறமை காட்டும் மாணவர்கள் பலர் அடிப்படை இஸ்லாமிய அறிவைக் கூடப் பெற்றவர்களாக இல்லை. தொழுகையில் ஓத வேண்டிய முக்கியமான ஓதல்கள் கூடத் தெரியாதவர்களாக அவர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் பல நிறுவனங்களாலும் அமைப்புக்களாலும் பாராட்டுக்களும் விருதுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவதைப் பார்க்கிறோம். இந்நிலை சமூக வெற்றிக்கு சிறிதும் உதவப் போவதில்லை.

பாடசாலைகளும் பாடசாலைக் கல்வியும் பாட விதான அமைப்புக்களும் யாரால் எதற்காக உருவாக்கப்பட்டவை என்பது பற்றிய தெளிவில்லாததன் காரணத்தாலேயே அப்பொறிக்குள் விழுந்து நம்மை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.  யாரோ நம்மிடம் கையளித்த களை நிறைந்த பூமியாகிய பாடசாலைகளை முற்றிலும் உழுது பண்படுத்தி விட்டே மாணவப் பயிர்களை நட்டு சிறந்த அறுவடைகளைப் பெற முயற்சிக்க வேண்டும்.  அல்லது எமது சிந்தனைக்குத் தகுந்த வேறு புதிய பூமியைத் தெரிந்தெடுத்து பயிரிடல் வேண்டும்.

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் கல்வியின் நிலைப்பாட்டில் உள்ள மிகப் பெரிய சிந்தனைப் பிறழ்ச்சி என்னவெனில் கல்வி பற்றி நாம் கொண்டுள்ள இலட்சியத்திற்கும் அது இதுவரை தந்த யதார்த்தத்திற்குமிடையே உள்ள முரண்பாட்டை இன்று வரை உணராதவர்களாக உள்ளோம் என்பதுதான். இதனை உணர பெரிய சிந்தனை மாற்றம் தேவை. இன்றைய கல்வி மான்களின் மத்தியில் அதற்கான காலம் கிட்டிய தூரத்திலும் தென்படுவதாக இல்லை. 

கல்வியால் இதுவரை விளைந்த யதார்த்தம் என்ன? அது இளைஞர் யுவதிகளை எந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்பதையும் ஒரே ஒரு கணம் சிந்தித்து அதற்கேற்றாற்போலும் கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டு வரும் நாளெப்போது வருமோ? அதுவரை உண்மையான வெற்றியை முஸ்லிம் சமூகம் அடைய முடியாது.

1 comment:

Powered by Blogger.