'தவறான சிகிச்சை' - செஸ் ஆடும் வீரரை இடுப்பில் தூக்கி வரும் தாய் (படம்)
படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத நிலையில் கடந்த 26 ஆண்டுகளாக இருக்கும் வாலிபர் மனம் தளராமல் செஸ் விளையாடி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் சைலேஷ் நெர்லிகர் (32). செஸ் வீரர். ஆனால், மற்ற வீரர்களை போல இவரால் நாற்காலியில் உட்கார முடியாது. தலையை தூக்கக்கூட முடியாது. படுத்தபடியே செஸ் விளையாடுவார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தற்போது நடந்து வரும் சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டிக்கும் சைலேஷ் வந்திருந்தார். அம்மா சரளா அவரை தன் இடுப்பில் குழந்தை போல வைத்து தூக்கி வந்து படுக்க வைத்தார். பின்னர், சைலேஷ் விளையாட தொடங்கினார்.
அவரது உடல்நல பாதிப்பு குறித்து சரளா கூறியதாவது,
சைலேஷ் 6 வயது வரை ஆரோக்கியமாக இருந்தான். நன்கு ஓடியாடி விளையாடுவான். சைக்கிள் ஓட்டுவான், கிரிக்கெட், புட்பால் ஆடுவான். அவனுக்கு திடீரென மஞ்சள் காமாலை வந்தது. உடல் எடை படிப்படியாக குறைந்தது. கால்சியம் பற்றாக்குறை என்று கூறி டாக்டர்கள் மருந்து, மாத்திரை கொடுத்தனர். அதன் பிறகு கடந்த 26 ஆண்டுகளாக படுத்த படுக்கையாகத்தான் இருக்கிறான். அவனது உடலில் வெறும் எலும்பு மட்டும்தான் இருக்கிறது. சதை கொஞ்சம்தான் உள்ளது. கால்சியம் அதிகப்படியாக சேர்ந்து இப்படி ஆகிவிட்டதாக கூறுகிறார்கள். உடம்பே உருக்குலைந்து விட்டாலும் மூளையை மட்டுமே நம்பி செஸ் விளையாடி சாதித்து வருகிறான்.
இவ்வாறு சரளா கூறினார்.உடலில் அதிகப்படியாக புளோரைடு உப்பு சேர்வதால் ஏற்படும் ‘ஸ்கெலிடல் ப்ளூரோசிஸ்’ என்ற பாதிப்பு இது என டாக்டர்கள் கூறுகின்றனர். புளோரைடு உப்பு அதிகம் உள்ள தண்ணீரை தொடர்ந்து குடித்தால் இத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
Post a Comment