அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறும் என்று சொல்கிறார்கள் - மனோ கணேசன்
(TM)அரசுக்குள் இருக்கும் தீவிரவாதிகள் கூப்பாடு போடுவதை காட்டி, வட மாகாணசபை தேர்தலை நடத்தும் முன்னர் 19 ஆம் திருத்தத்தை கொண்டு வந்து காணி, போலிஸ் அதிகாரங்களை பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்கிறது. காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் நடத்தப்படும் வட மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடும் என நான் நம்பவில்லை என்று என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இந்நிலையில் கூட்டமைப்பு இல்லாமல், வடக்கில் அரசாங்கம் மாகாணசபை தேர்தல் நடத்துமானால், அது மணமக்கள் இல்லாமல் திருமணம் நடத்துவது போன்றதாகும். இந்த நெருக்கடி நிலைமையை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். கூட்டமைப்பு போட்டியிடாத ஒரு நிலைமையை நாம் வரவேற்கப்போவதும் இல்லை. என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற, அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பொலிஸ், காணி அதிகாரங்களை உள்ளடக்கிய இன்றைய 13 ஆம் திருத்தத்தின் அடிப்படையிலான மாகாணசபையை ஏற்றுக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிட கூடாது என சொல்லும் பிரிவினர் தமிழ் தேசிய தரப்பில் இருக்கின்றார்கள் என்பதை சிங்கள மக்களும், அரசாங்கமும் அறிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள சிங்கள ஊடகங்கள் இந்த செய்தியை சிங்கள மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த மாகாணசபையை ஏதோ, காணக்கிடைக்காத பெரும் தீர்வாக கருதி தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக தென்னிலங்கையில் எவரும் நினைத்து விடக்கூடாது. எனக்கு தெரிந்த வகையில் வடக்கில் அப்படி ஒரு நிலைமை இல்லை. இந்த மாகாணசபை முறைமையை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று சொல்லுபவர்களும் வடக்கில் இருக்கிறார்கள் என்றும் அவர் சொன்னார்.
இந்நிலையில் சிங்கள தீவிரவாதிகள் சொல்லுகின்றார்கள் என்று சொல்லி, இன்று சட்டப்படி மாகாணசபைக்கு இருக்கும் அதிகாரங்களை வெட்டி குறைக்கும் விஷப்பரீட்சையில் இறங்க வேண்டாம் என அரசாங்கத்துக்கு நான் கூறுகின்றேன்.
நவம்பரில் பொதுநலவாய மாநாடு, செப்டம்பரில் வட மாகாணசபை தேர்தல் என்று ஒரு இரகசிய ஒப்பந்தம் இருப்பது விமல் வீரவன்சவுக்கு தெரியாதா? சம்பிக்க ரணவகவுக்கு தெரியாதா? அரசாங்கம் இத்தகைய ஒரு சிக்கலில் இன்று சிக்கி இருப்பது இவர்களுக்கு தெரியாதா?
ஆகவே அரசாங்கம் வடக்கில் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும். ஆனால், தீவிரவாதிகள் எதிர்க்கிறார்கள் என்று சொல்லி 19 ஆம் திருத்தம் கொண்டு வந்து, அதிகாரங்களை வெட்டி குறைத்து, சர்வதேசத்தையும் மீண்டும் ஏமாற்றி, குறுக்கு வழியில் வடக்கில் மாகாணசபை தேர்தலை நடத்த அரசு முயற்சி செய்தால் அது பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்க விரும்புகின்றேன்.
அதிகாரங்களை வெட்டி குறைத்தால், அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறும் என்று சொல்கிறார்கள். அப்படியே நடத்தினால் விமல் வீரவன்ச வெளியேறுவார் என சொல்கிறார். திடீரென வீரம் வந்து இன்னும் சில தமிழ், முஸ்லிம் அமைச்சர்களும், இடதுசாரிகளும்கூட வெளியேறலாம். எப்படியும் செப்டெம்பர் மாதத்திற்கு பிறகு, இன்றைய அரசுக்குள் இருக்கும் சில சில அமைச்சர்களை, முன்னாள் அமைச்சர்களாக இந்த நாட்டில் பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.
நாட்டு மக்களுக்கு உள்ள உரிமைகள் போதாது என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இருக்கும் உரிமைகளை பறிப்பதற்கு இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. இதைவிட இங்கு தேர்தல் வைக்காமலே விடலாம். மக்கள் நசுக்கப்படும்போதும் ஒடுக்கப்படும்போதும்தான் பொறுமையைதாண்டி போராடவேண்டியுள்ளது, இன்னிலைமையை அரசாங்கமே மக்கள்மீது திணிக்கின்றது, இது அரசியல் இலாபகரமான செயலன்றி வேறில்லை....
ReplyDelete