Header Ads



சீன நீர்மூழ்கிகளை எதிர்கொள்ள இந்தியா வகுத்துள்ள தந்திரோபாயம்



இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன நீர்மூழ்கிகளின் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்முறை ஆற்றலைக் கொண்ட நெடுந்தொலைவுக் கடல்சார் கண்காணிப்பு போர் விமானத்தை தமிழ்நாட்டின் அரக்கோணம் கடற்படைத் தளத்தில் இந்தியா நிறுத்தியுள்ளது. 

அமெரிக்காவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள எட்டு பொசிடோன் - 8 ஐ விமானங்களில் முதலாவது விமானம் நேற்று அரக்கோணத்தில் வந்திறங்கியது. 

சென்னையில் இருந்து 70 கி.மீ தொலைவில், வேலூர் மாவட்டத்தில் அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ்-ராஜாளி கடற்படை வான் தளமே, ஆசியாவில் மிக நீளமான இராணுவ ஓடுதளத்தைக் கொண்டுள்ளது. 

இந்த கடற்படை வான்தளத்துக்கு புதிதாக கொண்டு வரப்பட்ட பி-8ஐ விமானம், 907 கி.மீ வேகத்தில், 1200 கடல் மைல் வரை கண்காணிப்பை மேற்கொள்ளத்தக்கது. 

இந்த விமானத்தில் ஹார்பூன் புளொக்-2 ஏவுகணைகள், எம்.கே-54 இலகு ரக டோபிடோக்கள், றொக்கட்டுகள், ரேடர்கள், சோனார்கள் போன்ற அதிநவீன கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

அமெரிக்காவின போயிங் நிறுவனத்திடம் 2.1 பில்லியன் டொலர் செலவில் வாங்கப்பட்டுள்ள எட்டு பி-8 ஐ ரக விமானங்களில், இரண்டாவது விமானம் வரும் ஓகஸ்ட் மாதமும், மூன்றாவது விமானம் நொவம்பரிலும் ஐஎன்எஸ்-ராஜாளி தளத்துக்கு கொண்டு வரப்படும். 

ஏனைய ஐந்து விமானங்களும் 2015ம் ஆண்டு விநியோகிக்கப்படும். 

கிழக்காபிரிக்கா, செசெல்ல்ஸ், மாலைதீவு, சிறிலங்கா, பங்களாதேஸ், மியான்மார், பாகிஸ்தான் மற்றும் ஏனைய கடல்சார் துறைமுகங்களை இணைத்து, இந்தியப் பெருங்கடலில் சீனா தனது நீர்மூழ்கிச் செயற்பாடுகளை அதிகரித்துள்ளது. 

சீனாவின் இந்த நீர்மூழ்கி ஊடுருவல்களை முறியடிக்கும் வகையில், இந்தியா கொள்வனவு செய்துள்ள பி-8ஐ விமானம் அமெரிக்க கடற்படை பயன்படுத்தும் வகையை சார்ந்ததாகும். 

இந்த விமானம் நீண்டதூர கடல்சார் கண்காணிப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகள், இலத்திரனியல் புலனாய்வு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்ளத்தக்கது. 

புதிதாக இணைக்கப்படும் பி-8ஐ விமானம் நடுத்தர வீச்சு கடல்சார் கண்காணிப்பு விமானம் மற்றும் இஸ்ரேலிய சேச்சர்-2 மற்றும் ஹெரோன் ஆளில்லா வேவு விமானம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தியப் பெருங்கடலில் மூன்றடுக்கு கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளது. 

தற்போது இந்தியக் கடற்படையில் உள்ள பழையதாகி விட்ட எட்டு ருபோலேவ் -142 எம் விமானங்களுக்கு பதிலீடாக இவை செயற்படும். 

இந்தியப் பெருங்கடலில் சீனாவின மூலோபாய நகர்வுகளை முறியடிக்கும் நோக்கில், கிழக்கு கடற்பிராந்தியம் மற்றும் அந்தமான்- நிகோபார் தீவுப் பகுதிகளில் இந்தியா தொடர்ச்சியாக தனது இராணுவப் பலத்தை அதிகரித்து வருகிறது. 

இந்திய விமானப்படை, தஞ்சாவூரில் சுகோய் போர் விமானங்களின் அணியை திறுத்த திட்டமிட்டுள்ளது. 

இந்தியக் கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைப்பீடம் 50 இற்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களுடன் புதிய முன்னிலை நடவடிக்கைக் தளங்களை அமைத்து பலப்படுத்தவுள்ளது. 

இந்தியக் கடற்படை நிகோபார் தீவில் ஐஎன்எஸ் பாஸ் என்ற வான் தளத்தை கம்பல் குடாவில் அண்மையில் திறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

பேர்சியன் வளைகுடா தொடக்கம், மலாக்கா நீரிணை வரையான பகுதியை கண்காணிக்க வேண்டிய நிலையில உள்ள இந்தியா, 5422 கி.மீ கடலோரப் பகுதியையும், 1197 தீவுகளையும், 12.01 மில்லியன் சதுர கி.மீ பொருளாதார கடல் எல்லையையும் கொண்டுள்ளது.

No comments

Powered by Blogger.