தலிபான்களின் பகுதியை ஆளப்போகும் இம்ரான்கான்
கைபர்-பக்துன்கவா சட்டசபையில் ஆட்சி அமைக்கும் இம்ரான்கான் தலிபான்களின் நெருக்கடியை சமாளிப்பாரா? என அரசியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி 35 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து கட்சி தொடங்கிய 17 ஆண்டுகளில் இம்ரான்கான் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார்.
அதே நேரத்தில் வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர்-பக்துன்கவா மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தனிப் பெரும் கட்சியாகவும் இவரது கட்சி திகழ்கிறது. இங்கு நடைபெற்ற 99 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் இம்ரான்கான் கட்சி 33 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது.
இதற்கு அடுத்தபடியாக ஜாமியாத் உலமா-இ-இஸ்லாம் கட்சிக்கு 15 இடங்களே கிடைத்துள்ளது. எனவே, கைபர்-பக்துன்கவா மாகாணத்தில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தையும் இம்ரான்கான் கட்சி பெற்றுள்ளது. இப்பகுதி தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். பொதுவாக, தலிபான்களுடன் இம்ரான்கான் இணக்கமான உறவு வைத்துள்ளார்.
இப்பகுதியில் அமெரிக்க உளவுத்துறை ஆளில்லா விமானம் (“டிஜோன்ஸ்”) மூலம் நடத்தும் ஏவுகணை தாக்குதல்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மேலும், தலிபான்களை தீவிரவாதிகளாக சித்தரித்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் தாக்குதலை நிறுத்தவும் வலியுறுத்தி வருகிறார்.
எனவே, இம்ரான்கான் கட்சிக்கு இப்பகுதியில் கடும் செல்வாக்கு உள்ளது. ஆட்சி அதிகாரம் இல்லாத நேரத்தில் இம்ரான்கான் சாதாரணமாக இது போன்ற கோரிக்கைகளை அரசுக்கு விடுத்து வந்தார். தற்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார். அதே நேரத்தில் கைபர்-பக்துன்கவா மாகாண சட்ட சபையில் ஆட்சி அமைக்க உள்ளார்.
இது போன்ற ஆட்சி அதிகாரம் தனது கையில் வரும் வேளையில் ஏற்கனவே விடுத்து வந்த கோரிக்கைகளை அவர் நிறைவேற்றும்படி தலிபான்கள் கட்டாயப்படுத்தும் சூழ்நிலை ஏற்படும். அதை அவர் சமாளிப்பாரா? என அரசியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையே பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து தலிபான்களின் செய்தி தொடர்பாளர் இஷானுல்லா இஷானிடம் டெலிபோனில் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் மத்தியிலும், கைபர்-பக்துன்கவா மாகாணத்திலும் ஆட்சி அமைக்கும் அரசியல் கட்சிகளின் கொள்கைகள் வெளியிடப்பட்டதும் எங்களது கருத்து தெரிவிக்கப்படும். அது வரை காத்திருக்கிறோம் என்றார்.
Post a Comment