Header Ads



சிங்கள குடியேற்றத்தை தடுக்க முஸ்லிம்களின் உதவியை நாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

மன்னார் மாவட்டத்தில் அரசாங்கம் புதிய சிங்கள மீள் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் இடம் பெற்ற யுத்த காலத்தைத் தொடர்ந்து வடக்கில் இடம் பெயர்ந்துள்ள தமிழ்,முஸ்லிம் மக்கள் இது வரை உரிய முறையில் அரசாங்கத்தினால் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் உரிய முறையில் மீள் குடியேற்றம் செய்யப்படாத நிலையில் உள்ளனர். இடம்பெயர்ந்து சென்ற நிலையில் அவர்களுடைய காணிகள் பல படைத்தரப்பினால் அபரிக்கப்பட்டுள்ளதோடு, அதியுயர் பாதுகாப்பு வலயமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

இதனால் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் இன்று வரை மாவட்டத்திலேயே அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் உரிய முறையில் மீள் குடியேற்றம் செய்யப்படாத நிலையில் அரசாங்கம் சிங்களக் குடியேற்றத்தை மேற்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு அமைச்சர் ஒருவரும் துணை போவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் சிங்களக் குடும்பங்களை அரசாங்கம் குடியேற்றத் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதன் அடிப்படையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1,500 சிங்களக் குடும்பங்களையும் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 1,000 சிங்களக் குடும்பங்களையும் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 1,500 சிங்களக் குடும்பங்களையும் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது அரசாங்கம் வகித்துள்ள புதிய திட்டங்களுக்கு அமைவாக 2 முஸ்லிம் கிராமங்களுக்கு இடையில் ஒரு சிங்களக் கிராமத்தையும் 2 தமிழ் கிராமங்களுக்கு இடையில் ஒரு சிங்களக் கிராமத்தையும் உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றமையாக செயற்பட்டு குறித்த சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த குடியேற்றத்திற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சம்மதம் உள்ளதாக கூறப்படுகின்றது.

அப்படி அவருடைய சம்மதம் அல்லது தலையீடுகள் எவையும் இல்லாது இருந்தால் குறித்த சிங்களக் குடியேற்றத்தை தடுத்து நிறுத்த அவரால் முடியுமா என செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.