அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளே..! இக் கோரிக்கையை நிறைவேற்றுவீர்களா..?
(ஏ. எல். ஜுனைதீன்)
அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேச ஆழ் கடல் மீனவர்களின் நீண்ட காலப் பிரதான கோரிக்கைகளில் ஒன்றான சாய்ந்தமருதில் படகு தரிப்புத் துறை இது வரையும் நிறைவேற்றப்படாத ஒரு கோரிக்கையாகவே இருந்து வருவதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இது மட்டுமல்லாது இப்பிரதேச மீனவர்களின் வாக்குகளைப் பெறும் நோக்காக காலத்திற்கு காலம் இங்குள்ள அரசியல்வாதிகளால் சாய்ந்தமருது படகு தரிப்புத் துறைத் திட்டத்தை தேர்தல் கால வாக்குறுதி வியாபாரமாகவும் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது எனவும் இப்பிரதேச மீனவர்களால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது
முன்னாள் வர்த்தக அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் மற்றும் மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் தொடக்கம் இன்றைய முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை இப் படகு தரிப்புத் துறைத் திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து அடிக்கல் நாட்டு வைபவங்கள் அடிகடி நடந்தேறியுள்ளனவே தவிர மீனவர்களின் எதிர்பார்ப்பு இது வரை காலமும் நிறைவேற்றப் படாமல் வேலைகள் ஆரம்பிப்பதும் இடையில் கைவிடுவதும் என்ற நிலையில் இத் திட்டம் இருந்து கொண்டிருப்பதாக. மீனவர்கள் பெரு மூச்சுக்களுடன் தெரிவிக்கின்றனர்.
இம்மாவட்டத்தில் கல்முனைக்குடி,சாய்ந்தமருது,மாளிகைக்காடு ஆகிய முஸ்லிம் பிரதேசங்களிலேயே பல நூற்றுக் கணக்கான இயந்திரப் படகுகள் மூலம் ஆழ் கடல் மீன் பிடித்தொழில் நடைபெற்று வருகின்றது.தொழில் செய்யும் காலத்தில் பெறுமதிமிக்க தமது இயந்திரப் படகுகளை எந்நேரமும் கடலிலேயே நங்கூரமிட்டு வைக்கும் பரிதாப நிலை இம்மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.கடல் கொந்தளிப்பு, இயற்கை அனர்த்தம் மற்றும் காலநிலை சீர்கேடு என்பன போன்றவற்றினால் தமது இயந்திரப் படகுகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலையில் இப்பிரதேச மீனவர்கள் தமது தொழிலைச் செய்து கொண்டிருக்கிறார்கள். மீன் பிடித் தொழில் செய்ய முடியாத காலங்களில் படகு தரிப்புத் துறை வசதியுள்ள வாழைச்சேனை போன்ற இடங்களுக்கு கூடுதலான பணத்தைச் செலவழித்து தமது படகுகளைக் கொண்டு செல்ல வேண்டிய அவல நிலையும் இவர்களுக்கு ஏற்படுகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் காலத்தில் வேலைகள் ஆரம்பிக்கப்படுவதும் தேர்தல் முடிந்தவுடன் அப்படியே வேலைகள் கைவிடப்படுவதுமாக சாய்ந்தமருதில் அமைத்துத் தருவதாக அரசியல்வாதிகளினால் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட படகுத் தரிப்புத் துறை அமைக்கும் வேலைகள் தற்போது இங்குள்ள மணல் மலை போல் குவிக்கப்பட்டும் மண் மூடைகள் அடுக்கப்பட்டும் படகுகளைக் கட்டும் குழாய்கள் பதிக்கப்பட்டும் அப்படியே இடை நிறுத்தப்பட்டிருக்கின்றன.
சாய்ந்தமருது படகு தரிப்புத் துறை வேலைத் திட்டம் நிறைவேறுவது எப்போது என்பதே இப்பிரதேச மீனவர்களின் கேள்விகளாக இருந்து கொண்டிருக்கிறது. திகாமடுல்ல மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள்தான் இவர்களின் கேள்விக்கும்,பெருமூச்சுக்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டும்.
Post a Comment