பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்டி அடிப்பதை தவிர்க்க புதிய அரசியலமைப்பு
(Vi) ஜனாதிபதி பதவியை சுயாதீனமாக்கும் வகையிலும் அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு பகிரப்படும் வகையிலுமான புதிய அரசியலமைப்பிற்கான யோசனையை பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
ராஜகிரியவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டுள்ள புதிய அரசியலமைப்பின் பிரகாரம் வட்டார அடிப்படையில் 125 பாராளுமன்ற உறுப்பினர்களும் விகிதாசார முறைப்படி 100 உறுப்பினர்களுமாக 225 பேர் நியமிக்கப்படுவர் எனவும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சு சபைக்கு 25 பேரும் பிரதி அமைச்சர்கள் 30 பேரும் நியமிக்கப்படுவர்.
தற்போதைய யாப்பின் படி பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்திற்காகவும் பதவிக்காகவும் கட்சிவிட்டு கட்சி தாவுகின்றனர். இந்த யாப்பில் அவ்வாறு கட்சி தாவினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்படும் வண்ணம் திருத்தம் செய்யப்படவுள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த காலத்திற்குள் தமது சொத்துக்கள் பொறுப்புக்களை வெளியிட வேண்டும். அவ்வாறு அவர்கள் அதனை வெளியிடத் தவறும் பட்சத்தில் அவர்களது பதவி இரத்துச் செய்யப்படும்.
இதன் பிரகாரம் பாராளுமன்றத்திற்கே முழு அதிகாரமும் வழங்கப்படவுள்ளது. எந்த ஒரு நாட்டிலும் காணப்படாத அதிகாரமே நம் நாட்டு அரசியல் யாப்பின் படிஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இதனை நாம் நிறைவேற்ற நாட்டு மக்களிடம் இதற்கான ஆதரவைப் பெற வேண்டும். குறிப்பாக காணி, சுகாதாரம் மற்றும் கல்விக் கொள்கைகள் மாற்றியமைக்கப்படும்.
இதேவேளை, தற்போதுள்ள அரசியலமைப்பில் அரசாங்கமும் அதனைச் சுற்றியுள்ளவர்களுமே அதனை அனுபவிக்க முடியும். ஆனால் நாம் முன்வைத்துள்ள அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அதனை அனுபவிக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment