Header Ads



ஹதீஸ் துறைக்கு கலாநிதி முஹம்மது முஸ்தஃபா அஸமி செய்த பங்களிப்பு


இப்திஹார் (இஸ்லாஹி)  

டாக்டர் முஹம்மத் முஸ்தபா அஸமி இந்தியாவின் தாருல்-உலூம் மத்ரஸாவிலும், எகிப்தின் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்திலும் பயின்று தொடக்ககால ஹதீஸ் கலை பற்றிய தனது ஆய்வுகளுக்காக 1967 ஆம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். 1973 ஆம் ஆண்டு முதல் மன்னர் ஸவூத் பல்கலைக்கழகத்து ஹதீஸ் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். தொடக்க கால ஹதீஸ் துறை குறித்து ஏராளமான நூல்களையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ள பேராசிரியர் அஸமி, ‘ஸுன்னா’ குறித்த தமது ஆய்வுகளுக்காக 1980 ஆம் ஆண்டின் மன்னர் பைஸல் விருது அளித்துக் கௌரவிக்கப்பட்டார்.

அவருடைய Studies in Early Hadith Literature, on Schacht's Origins of Muhammadan Jurisprudence எனும் இரு ஆய்வு நூல்களும் அறிஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பேராசிரியர் அஸமி ஆக்கித் தந்துள்ள எலக்ட்ரானிக் ஹதீஸ் களஞ்சியம் மிகவும் புகழ் பெற்றதாகும். ஸஹீஹ் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஸுனன் அன் நஸயீ, ஸுனன் அபூதாவூத், ஸுனன் அத் திர்மிதி, ஸுனன் இப்னு மாஜா, முஸ்னத் இப்னு ஹன்பல் ஆகிய ஹதீஸ் தொகுப்புகள் அனைத்தையும் அரபு மூல வாசகங்களுடன், உர்தூ, ஹிந்தி, வங்காளி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், மலே, புஷ்டூ, துருக்கி மொழிபெயர்ப்புகளுடன் கணினி மயப்படுத்தித் தந்துள்ளார். இமாம் அந்நவவி(அபூ ஸகரிய்யா யஹ்யா இப்னு ஷரப்) அவர்களின் ரியாளுஸ் ஸாலிஹீன் நபிமொழி தொகுப்பை இருபது மொழிகளில் வெளியாக்கும் மாபெரும் பணியில் தன்னைத் தற்போது முற்றாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் பேராசிரியர் அஸமி.

ஹதீஸ்கள், ஒரு நம்பத்தகுந்த முறையில் மரபுவழி அறிவிக்கப்பெறவில்லை என்பதான கீழைத்தேயவாதிகளின் வாதங்களை, அவற்றின் அனைத்துக் கோணங்களிலும் பகுப்பாய்வு செய்து, அவற்றைத் தவறானவை என்று நிரூபித்த முதல் முஸ்லிம் ஆராய்ச்சியாளர் இவரே என்று நம்மால் கூறமுடியும்.

No comments

Powered by Blogger.