'அலிஸாஹிர் மௌலானாவிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உள்ளன'
(அப்துல்லாஹ்)
'கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம்போல இளைஞர்களின் சக்தி இருக்கக் கூடாது. அது அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் கங்கையைப் போல இருக்க வேண்டும். தடுப்பின்றிச் செல்லும் அழகிய வாகனத்தின் சாரதி தன்னையும் அந்த வாகனத்தையும் அந்த வீதியால் செல்லும் மற்றவர்களையும் தனது சொத்துக்களையும் ஏனையவர்களின் உடமைகளையும் அழிப்பதற்கே பயன்படுத்துவான்.
இவ்வாறு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே. தவராஜா குறிப்பிட்டார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்டப் புனரமைப்புக் கூட்டம் சனிக்கிழமை மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட சம்மேளன உப தலைவர் எம்.எச்.எம். நிப்ராஸ் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதம மந்திரியின் ஆலோசகருமான அலிஸாஹிர் மௌலானா இளைஞர் பாராளுமன்ற முன்னுதாரண அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார். ம
உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என். நைறூஸ், இளைஞர் சேவை அதிகாரிகளான எச். அமீர், ஜே. கலாராணி, ஆகியோருட்பட இளைஞர் சம்மேளன அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே. தவராஜா 'இளைஞர் பாராளுமன்ற முன்னுதாரண அதிதியாக சமூக சகவாழ்விற்கும் இன சௌஜன்யத்திற்கும் முன்னுதாரணமாகத் திகழும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஏறாவூரின் நகர பிதாவுமான அலிஸாஹிர் மௌலானா இங்கு பிரதம அதிதியாக பங்கு பற்றியிருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.
இனங்களுக்கிடையிலான சகவாழ்விற்கும் சௌஜன்யத்திற்கும் உயிர் வாழும் முன்னுதாரணமாகத் திகழும் அலிஸாஹிர் மௌலானாவிடம் இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பல பாடங்கள் உள்ளன. இளைஞர்களிடம் இருக்க வேண்டிய வேகம், விவேகம், சமூகத்தொண்டு, சமூக சகவாழ்வு என்பனவற்றின் முன்னுதாரணமாக அவர் திகழ்வதாலேயே இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அவரை பங்குபற்றச் செய்திருக்கின்றோம்.
'இளைஞர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள இளைஞர்களாகிய நீங்கள்தான் இந்த ஒட்டு மொத்த மனித சமூகத்தின் மாபெரும் சொத்து. எமது இளைஞர்கள் நல்ல அரசியல் தலைவர்களிடமிருந்த சிறந்த பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். மட்டக்களப்பு இளைஞர்களிடம் சிறந்த பலங்களுமுண்டு அதேவேளை வெட்கித் தலைகுனிய வேண்டிய பலவீனங்களும் உண்டு.
இந்த இரண்டுக்குமிடையே எங்களை நாங்கள் சரியாக நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் நன்கு வழிநடத்தப்படவேண்டும் என்பதற்காக அதற்கென்றே ஒரு அமைச்சை உருவாக்கி அவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திடம் ஜனாதிபதியவர்கள் ஒப்படைத்துள்ளார்கள்.
இளைஞர் சக்தி கட்டுமீறி காட்டாற்று வெள்ளம்போல கரைபுரண்டோடியதால் நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பாரதூரமான சம்பவங்களும் இழப்புக்களும் அநியாயங்களும் நடந்தேறிவிட்டன அதன் விளைவாக சமூக சகவாழ்வும் சீர்குலைந்திருந்தது' என்றார்.
Post a Comment