இலங்கையர்கள் சவூதி அரேயாவிலிருந்து வெளியேற பொது மன்னிப்பு
(Nf) சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு பொது மன்னிப்புக்காலம் வழங்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபிய தொழில் அமைச்சின் வெளிநாட்டு அதிகாரியொருவரை வரவழைத்து நேற்றிரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெயர்ந்து அல்லது சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டவர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்திற்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் இலங்கையர்களுக்கும் தாம் பணிபுரியும் வீட்டு உரிமையாளர்களின் தலையீடுகள் இன்றி சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தூதரகத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
விமானப் பயணச் சீட்டுக்களை தூதரகத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அருகிலுள்ள தூதரகம் அல்லது கொன்சூலர் அலுவலகத்தின் ஊடாக தற்காலிக அனுமதி அட்டையைப் பெற்றுக்கொண்ட பின்னர் தாய்நாட்டிற்கு திரும்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் இலங்கைக்கு திரும்பவுள்ளவர்களுக்கான அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக விசேட நடமாடும் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த கால அவகாசம் ஜூலை மாதம் முதல் வாரம் வரை மட்டுமே காணப்படுவதாகவும், அதன் பின்னர் சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டவர்களும் தண்டனை விதிக்க சவுதி அரேபிய அரசு தீர்மானித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment