மட்டக்களப்பில் 'மகாசேன்' ஏற்படுத்திய பாதிப்புகள் (படங்கள்)
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
வங்காள விரிகுடாவின் தென்கிழக்காகக் காணப்பட்ட மகாசேன் சூறாவளிப்புயலானது தற்போது கிழக்கிலும் வீசி வருகிறது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு,காத்தான்குடி, பாலமுனை, ஏறாவூர் உள்ளிட்ட பிரதேசங்களில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 03.30மணியிலிருந்து கடுமையான புயல் காற்று வீசியது.
இதனால் தகரங்கள்,கூரைகள்,கடைகளின் பதாதைகள் என்பன சேதப்படுத்தப்பட்டதுடன் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது.மக்கள் அச்சத்துடன் பீதியுடனும் காணப்பட்டனர்.
காத்தான்குடிப் பிரதேசத்தில் குறிப்பாக கரையோரப் பிரதேசங்களான புதிய காத்தான்குடி,தோனா,ஏத்துக்கால் போன்ற பகுதிகளில் கடுமையாக காற்று வீசியது.
இதேவேளை குறித்த கடும் புயல் காற்றினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படுகின்றது.மீனவர்கள் கடலுக்குச் செல்லாமலிருப்பதுடன் கடலில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.
அதனால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தோனிகள்,படகுகள்; மேலும் உயரமான பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுவரப்பட்டன.அலைகள் பலமாக வீசுவதுடன் காற்றின் வேகமும் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன.
வானத்தின் நிலைமை மப்பும் மந்தாரமுமாக காணப்படுகின்றது. மகாசென் எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளிப்புயலின் தாக்கத்தினால் யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு ஊடான அம்பாந்தோட்டை வரையான ஆழ்கடல் பிரதேசங்கள் கடும் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றன.
அத்துடன் மேற்குறிப்பிடப்பட்ட ஆழ்கடல் பிரதேசங்களில் கடும் காற்றுடன் மழையும் காணப்படும் என்பதால் மீனவர் சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் மேற்குறிப்பிடப்பட்ட அழ்கடல் பிரதேசங்களில் தங்களது கடல் நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு வளிமண்டளவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment