தேசிய ஷூரா கவுன்சில்: சாத்தியமாக்குவோம், சாதிப்போம்..!
(மே மாத அல்மதீனா பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)
இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் அண்மைக் காலமாக பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகிறது. பல்வேறு தளங்களில் நின்று இத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் முஸ்லிம் சமூகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து பிரச்சினைகளைக் கையாள்வதற்கான முயற்சிகள் குறித்து தொடர்ந்தும் பேசப்பட்டு வந்தது. ஆனாலும், அம்முயற்சிகள் கைகூடவில்லை.
அத்தகையதொரு இடைவெளியை நிரப்பும் நோக்கில் தேசிய ஷுரா கவுன்சில் ஒன்றை உருவாக்கும் முயற்சியின் முதற் கட்டமாக அண்மையில் மியாமி ஹோட்டலில் தேசிய ஷுரா கவுன்சில் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது, அல் ஹம் து லில்லாஹ்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், துறைசார்ந்தோர் என பலரும் கலந்து கொண்ட நிகழ்வு தேசிய ஷுரா அமைவதன் முக்கியத்துவத்தையும் அதன் தேவையையும் உணர்த்துவதாக அமைந்திருந்தது, எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
அல்லாஹுத் தஆலா மனிதனைப் படைப்பதற்கு நாடியபோது அவன் தன்னிச்சையாக ஒரு முடிவை எடுக்காமல் மலக்குகளுடன் ஓர் ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தி மனிதனைப் படைக்க இருப்பது பற்றிய விளக்கத்தைச் சொன்னான். மலக்குகள் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. சதாவும் உன்னை வணங்க நாமிருக்கும்போது இரத்தமோட்டும் மனிதனைப் படைப்பது ஏன் என்று வினாத் தொடுத்தார்கள். அல்லாஹ் மனிதனைப் படைப்பதற்கான நியாயத்தைச் சொன்னபோது அக்கருத்தை மலக்குகள் ஏற்றுக் கொண்டு மண்ணினால் படைக்கப்பட்ட ஆதம் (அலை) அவர்களை கண்ணியப்படுத்தினர். அப்போது மலக்காக இப்லீஸ் அல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கணித்தான். அல்லாஹ்வுக்கு சவாலும் விடுத்தான். இறுதியில் அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்ற தூக்கி வீசப்பட்டான். அந்த இப்லீஸ்தான் இன்று மனிதர்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கின்றான்.
பிரபஞ்சம் எனும் நூலின் முகவுரையாகத் திகழும் இந்நிகழ்வு ஒன்றே கலந்தாலோசனையின், ஷுராவின் முக்கியத்துவத்தை உணர்த்த போதுமானது. அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து போஷிக்கும் வல்ல அல்லாஹ் மஷுரா செய்த பின்பே மனிதனைப் படைத்திருப்பதன் நோக்கங்களில் ஒன்று, மனிதர்கள் தான்தோன்றித்தனமாக, மனோ இச்சைப் பிரகாரம் நடக்க முடியாது என்பதை தெளிவுபடுத்துவதற்காகும்.
எனவே, முஸ்லிம்களின் பொது விவகாரங்களுக்கு மிகச் சரியான வழிகாட்டலையும் பிரச்சினைகளுக்கான தீர்வையும் வழங்குவதற்கு ஷுரா கவுன்சில் அவசியமானது, அவசரமானதும் கூட என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதனைச் சரியாக, முறையாக பல தரப்பினரையும் ஒன்றிணைத்த வகையில், நிதானமாக மேற்கொள்வதுதான் சவால்மிக்க பணி.
கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் முரண்பட்டு பிளவுபடாமல் அந்தப் பணியைச் செய்வதற்கான பொறிமுறை அமைக்கப்படுவது அவசியம். அப்போதுதான் ஷுரா கவுன்சில் நீண்ட காலம் நின்று பிடிக்கும்.
தற்போதைய உத்தேச ஷுரா கவுன்சிலின் இடைக்கால சபை இட்டிருக்கும் ஷுரா சபையின் அங்கத்தவர்களாக வருவோருக்கான வரையறைகள் வரவேற்கத்தக்கவை. அவை தவிரவும் சுயநலவாதிகள், புகழ் விரும்பிகள், பதவி மோகம் பிடித்தவர்கள், முழு ஷுராவையும் ஒரு பக்கம் இழுத்துச் செல்லும் பிடிவாதக்கார சர்வாதிகாரிகள், பண்பாடற்றவர்கள், தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்றவாறு நடந்து கொள்பவர்கள், பெயரை மட்டும் போட்டுக் கொள்பவர்கள் போன்றோரும் ஷுரா கவுன்சிலுக்குள் நுழைந்து விடாமல் பார்த்துக் கொள்வது முஸ்லிம் சமூகத்தின் கடமை.
ஷுரா கவுன்சிலில் ஆலிம்கள் உட்பட பல தரப்பு பிரதிநிதிகள், துறைசார்ந்தவர்கள், அனுபவசாலிகள், சாணக்கியமிக்கமும் துணிவுமுள்ள இளைஞர்கள், புத்திசாதுர்யமிக்க பெண்கள் முதலானோரும் உள்ளடக்கப்பட வேண்டும்.
எனவே, ஷுரா கவுன்சில் சாத்தியப்பட வேண்டும். இலங்கை முஸ்லிம் சமூகம் சாதிக்க வேண்டும் என்பதுதான் எமது அவா.
அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் (நளீமி)
அல்லாஹ்வின் அருளால் தேசிய சூராசபை என்ற நற்சிந்த ணையின்முன்னோடி நடவடிக்கையாக இடைக்கால சூரா சபை
ReplyDeleteஅமைந்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வா
கும்.இதணை சீர்குழைக்க யார் எத்தகைய முயற்சி களை,
மேற்கொண்டாலும்,அவற்றை முறியடித்துக் கொண்டே இலக்கை நோக்கி முன்னேறுவதுதான் சமூக சிற்பிகளின் தலையாய பணி.