Header Ads



இலங்கை பால்மாவில் இரசாயனப் பதார்த்தமா..? ஆய்வு தொடருகிறது - ரூமி மர்சூக்


நியூஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவில் இரசாயனப் பதார்த்தம் கலந்துள்ளதா என்பது தொடர்பில் அறிந்து கொள்வதற்காக சிங்கப்பூரிலிருந்து பெறப்பட்ட அறிக் கையில் திருப்தியின்மை காரணமாக அதன் மாதிரிகளை வேறொரு நாட்டுக்கு அனுப்பி வைக்க தீர்மானித்திருப்பதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் டொக்டர் ரூமி மர்சுக் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டுக் குழுவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். பால்மா மாதிரிகள் தொடர்பில் சிங்கப்பூரிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையினை, உணவுக் கட்டுப்பாட்டு குழுவிலுள்ள வைத்தியர்கள் ஆராய்ந்த போதிலும் அதிலுள்ள தகவல்கள் போதாமைக் காரணமாக இன்னுமொரு நாட்டிற்கு அதன் மாதிரிகளை அனுப்பி வைக்குமாறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதாகவும் தலைவர் டாக்டர் ரூமி மர்சூக் குறிப்பிட் டார்.

நியூசிலாந்திலிருந்த நேரடியாக பால்மா இறக்குமதியாளர்களிடம் சென்று அவர்கள் முன்னிலையிலேயே வெவ்வேறு மாதிரிகளை எடுத்து பொது செய்தி நுணுக்கமான ஆய்வுக்காக குறித்த நாடொன்றுக்கு இன்னும் ஒரு சில தினங்களில் அனுப்பி வைக்கப்பட விருப்பதாகவும் அவர் கூறினார். நுகர்வோர் அதிகார சபையின் சட்ட விதிமுறைகளுக்கமைய பால்மா மாதிரிகள் மீண்டும் ஆய்வுக்கு அனுப்பப்படவுள்ள நாட்டின் பெயரை அம்பலப்படுத்தாது இரகசியமாக இதனை கையாள்வதற்கான உரிமை தங்களுக்கு இருப்பதாக கூறிய தலைவர் ரூமி மர்சூக் அந்நாட்டின் பெயரைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

சிங்கப்பூரிலிருந்து கிடைக்கப் பெற்ற அறிக்கையுடன் நுணுக்கமாக தயாரிக்கப்படும் இரண்டாவது அறிக்கையினையும் கொண்டு மிகவும் துல்லியமான தீர்மானத்தினை வெளிப்படுத்தக் கூடியதாகவிருக்குமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இருப்பினும் பொது மக்கள் அநாவசியமாக பதற்றமடையத் தேவையில்லையெனவும் வெகுவிரைவில் மக்களின் ஐயம் தீரும் வகையில் உணவுக் கட்டுப்பாட்டுக் குழு துல்லியமான தீர்மானத்தினை மக்களுக்கு பெற்றுக் கொடுக்குமெனவும் கூறினார்.

நியூசிலாந்தில் கரவை மாடுகள் உண்ணும் புற்களுக்கு டி.சி.டி. என்னும் இரசாயனத் திரவியம் தெளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்கரவை மாடுகளிலிருந்து பெறப்பட்ட பாலில் இரசாயனப் பதார்த்தங்களின் தாக்கம் இருப்பதாக அதனை இறக்குமதி செய்யும் ஒரு சில நாடுகள் கண்டறிந்திருந்தன. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவிலும் டி.சி.டி. இரசாயனை திரவியத்தின் தாக்கம் இருக்கக் கூடுமோவென்ற சர்ச்சை எழத் தொடங்கியது.

சந்தேகத்தை தீர்த்து வைக்கும் வகையிலேயே அதன் மாதிரி ஏற்கனவே சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து கிடைக்கப் பெற்ற அறிக்கையில் போதிய தரவுகள் இன்மை காரணமாக வேறொரு நாட்டுக்கு அதன் மாதிரிகளை அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவில் எவ்வித அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய கதிரியக்கத் தாக்கமும் இது வரையில் இருந்ததில்லையென அணுசக்தி அதிகார சபையின் தலைவர் டாக்டர் ரஞ்சித் ஏற்கனவே தினகரனுக்குத் தெரிவித்திருந்தார்.

தேவையேற்படும் பட்சத்தில் டி.சி.டி. களைநாசினியினால் ஏற்படக் கூடிய கதிரியக்கத்தாக்கம் பற்றிய நுண்ணிய ஆய்வுகள் அவசியமேற்படும் பட்சத்தில் அவற்றை முன்னெடுக்க அணுசக்தி அதிகார சபை தயாராகவுள்ளதென தொழில்நுட்ப ஆராய்ச்சி, அணுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.