Header Ads



அல் அக்ஸா பள்ளிவாசலில் யூத ஸியோனிஸ தீவிரவாதிகள் - கண்டிக்கிறது ஹமாஸ்



(Tn) புனித அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் யூதக்குடியிருப்பாளர் குழுவொன்று இஸ்ரேல் பொலிஸாரின் பாதுகாப்புடன் கடந்த செவ்வாய்க்கிழமை வலுக்கட்டாயமாக நுழைந்துள்ளனர்.

ஜெரூசலம் தினம் என இஸ்ரேல் கொண்டாடும் செவ்வாய்க்கிழமை இவர்கள் அல் அக்சா வளாகத்திற்குள் மொரொக்கோ நுழைவாயிலூடாக ஊடுருவியுள்ளனர். இஸ்ரேலின் வலதுசாரி லிகுட் பெய்ட்னு கட்சி தலைவர்கள் உட்பட 40க்கும் அதிகமான யூதக் குடியிருப்பாளர்களே அல் அக்சா வளாகத்தில் நுழைந்துள்ளனர்.

முன்னதாக அல் அக்ஸா பள்ளிவாசலை உடைத்து அங்கு கோயிலை அமைக்க வேண்டும் என பெய்ட்னு கட்சி அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே யூதக் குடியிருப்பாளரின் அத்துமீறலுக்கு பலஸ்தீனின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

“அல் அக்ஸா பள்ளிவாசல் சிகப்பு எல்லைக்கோடு புனித பள்ளிவாசல் மீது சியோனிஸ்ட்டுகள் அவமதிப்பு அல்லது துஷ்பிரயோக வேலையில் ஈடுபட்டால் அது முஸ்லிம் நம்பிக்கைக்கு எதிரான குற்றச்செயல் மற்றும் அத்துமீறலாக கருதப்படும்” என ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதில் பள்ளிவாசலுக்கு எதிரான ஸியோனிஸ தீவிரவாதிகளின் துஷ்பிரயோகங்களை தடுக்க முன்வருமாறும் ஹமாஸ் அமைப்பு பலஸ்தீனர்களுக்கு அழைப்பு விடுத்தது. மறுபுறத்தில் அல் அக்ஸா வளாகத்தில் இருந்த முஸ்லிம்கள் மீது இஸ்ரேல் படை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இரு இளைஞர் கைது செய்யப்பட்டதோடு மேலும் ஒருவர் காயமடைந்தார். 

பள்ளிவாசல் பிரதான வாயில்களில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு 50 வயதுக்கு குறைவானவர்கள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்ததாக பலஸ்தீன செய்திகள் குறிப்பிடுகின்றன. அல் அக்ஸா பள்ளிவாசல் இருக்கும் கிழக்கு ஜெரூசலம் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதி என சர்வதேச சமூகம் ஏற்றுள்ளது. முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமாக கருதப்படும் அல் அக்ஸா வளாகத்தில் முன்னர் யூத ஆலயம் இருந்ததாக யூதர்கள் கூறிவருகின்றனர்.

No comments

Powered by Blogger.