Header Ads



நவாஸ் ஷெரீப்புக்கு காத்திருக்கும் சவால்கள்


பாகிஸ்தானின் பிரதமராக மூன்றாவது தடவையாகப் பொறுப்பேற்க உள்ள நவாஸ் ஷெரீப்புக்கு ஊழல் முதல் தலிபான் வரை பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.

இரும்பு ஆலை அதிபராகவும், அரசியல் தலைவராகவும் விளங்கும், 63 வயது நவாஸ் ஷெரீப், லாகூரில் கடந்த 1949ஆம் ஆண்டு பிறந்தார். செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த அவர், ஆங்கிலப் மொழிப் பள்ளிகளில் கல்வி பயின்றார். 

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பாடத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர், தன் தந்தையின் இரும்பு ஆலை நிர்வாகப் பொறுப்புக்கு வந்தார். 1970களில் அப்போதைய பிரதமர் ஜுல்ஃபிகர் அலி புட்டோ தனியார் தொழிற்சாலைகளை நாட்டுடமை ஆக்கியதால் நவாஸ் ஷெரீப் குடும்பம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நவாஸ் அரசியலில் குதித்தார்.

முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஜியா உல் ஹக்கின் ஆதரவில் அரசியலில் வளர்ந்த அவர், பஞ்சாப் மாகாணத்தின் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர், அந்த மாகாணத்தின் முதல்வராக 5 ஆண்டுகள் பதவி வகித்தார். 1990இல் பாகிஸ்தான் பிரதமராகப் பொறுப்பேற்றார். மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்த பின், ஊழல் புகார்களின் அடிப்படையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது, அவரது அரசியல் எதிரியான பேநசீர் புட்டோ ஆட்சிக்கு வந்தார்.

பின்னர், 1997இல் நவாஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், இரண்டே ஆண்டுகள்தான் நீடிக்க முடிந்தது. 1999இல் முஷாரப் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டார். 

அதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட நவாஸ், விடுதலையானதும் சவூதியில் தஞ்சம் புகுந்தார். அங்கிருந்து 2007இல் பாகிஸ்தான் திரும்பினார். பாகிஸ்தான் மக்கள் கூட்சியுடன் கூட்டணி அமைத்து, முஷாரபை ஆட்சியில் இருந்து வெளியேறச் செய்தார். பேநசீர் புட்டோ கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அனுதாப அலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தது.

இந்நிலையில், இப்போது ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நவாஸ் ஷெரீபுக்கு பல்வேறு சவால்களும், பிரச்னைகளும் காத்திருக்கின்றன. மோசமான பொருளாதார நிலை, ஊழல், அச்சுறுத்தும் தலிபான் , நாடு முழுவதும் நிலவும் கடுமையான மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகளை அவர் சமாளிக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவுடன் பாகிஸ்தானுக்கு உள்ள உறவுகளும் அவ்வளவு சுமுகமாக இல்லை.

இதேபோல் இந்திய-பாகிஸ்தான் உறவுகளையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. 1999இல் தாம் ஆட்சியை விட்டு அகற்றப்பட்டபோது இந்தியாவுடன் இருந்த உறவுகளை மீண்டும் ஏற்படுத்த விரும்புவதாக நவாஸ் ஏற்கெனவே கூறியுள்ளார். 1998இல் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது இந்தியா அணுகுண்டுச் சோதனையை நடத்தியது. 

அதற்குப் பதிலடியாக பாகிஸ்தானும் அணுகுண்டுச் சோதனையை நடத்தியது. இதனால் பதற்றம் ஏற்பட்டபோதும், இரு நாட்டு உறவுகளை மேம்படுத்த வாஜ்பாயுடன் இணைந்து ஷெரீப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.