'முஷரப் மீது தீவிரவாத தடுப்பு சட்டம் பயன்படுத்த முடியாது'
கடந்த 2007-ம் ஆண்டு பர்வேஸ் முஷரப் பாகிஸ்தான் அதிபராக இருந்த போது திடீரென அவசர நிலை பிரகடனம் செய்தார். பின்னர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இப்திகள் சவுத்ரி உள்ளிட்ட ஏராளமான நீதிபதிகளை கைது செய்தார். இந்த வழக்கில் முஷரப் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும், தீவிரவாத தடுப்பு சட்டத்தின் 7-வது பிரிவின் கீழ் ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்டும் வழங்கியது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில், முஷரப்பிடம் விசாரணை நடத்த ஒரு கூட்டு குழு அமைக்கப்பட்டது.
விசாரணையை முடித்ததும் அக்குழு இஸ்லாமாபாத் தலைமை போலீஸ் அதிகாரியிடம் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், இந்த வழக்கில் முஷரப் மீது தீவிரவாத தடுப்பு சட்டம் பயன்படுத்த முடியாது. பொதுவாக ஒருவர் மீது தீவிரவாத தடுப்பு சட்டம் பயன்படுத்த வேண்டுமானால் அவர் ஒருவரது மரணத்துக்கு காரணமாகவோ, கொலை மிரட்டல் விடுத்தவராகவோ இருக்க வேண்டும். உடலில் படுகாயம் ஏற்படுத்தி இருக்க வேண்டும். சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் முஷரப் இது போன்று எதுவும் செய்ய வில்லை.
மேலும், ஜாமீனில் வரமுடியாத படி கைது வாரண்டு பிறப்பித்த போது மோசமான சூழ்நிலை நிலவியதால் அங்கிருந்து ஓடி விடும்படி வக்கீல்கள் கூறிய அறிவுரையால் தான் வெளியேறினேன் என விசாரணையில் முஷரப் கூறியுள்ளார். தான் பதவியில் இருந்த போது நீதிபதிகளை கைது செய்யும்படி எழுத்து மூலமாகவோ, வாய்மொழி வாயிலாகவோ உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்றும் அவர் மறுத்துள்ளார் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment