இந்திய சிறையில் தாக்கப்பட்ட பாகிஸ்தான் கைதி மரணம்
இந்திய - ஜம்மு சிறையில் சக கைதியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கைதி சனாவுல்லா 09-15-2013 இன்று காலை இறந்தார். காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் பாதுகாப்பு நிறைந்த கோட் பன்வால் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தவர் சனாவுல்லா (59). பாகிஸ் தானின் சியல்கோட் நகரை சேர்ந்த இவர், 1999-ம் ஆண்டு தீவிரவாத தடுப்பு சட்டத்தில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். கடந்த 3-ம் தேதி சக கைதியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சனாவுல்லா கடுமையாக தாக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சண்டிகரில் உள்ள பிஜிமர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பாகிஸ்தானின் லாகூர் சிறையில் சக கைதிகள் 6 பேரால் தாக்கப்பட்ட இந்திய கைதி சரப்ஜித் சிங் மரணமடைந்த மறுநாள் இந்த சம்பவம் நடந்தது. எனவே, சரப்ஜித் மீதான தாக்குதலுக்கு பழிக்கு பழியாக சனாவுல்லா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சனாவுல்லாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வந்தது. அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்கின. இதையடுத்து, ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றார். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சல்மால் பஷீர், மருத்துவமனைக்கு சென்று சனாவுல்லாவை பார்த்தார். நேற்று முன்தினம் சனாவுல்லாவின் உறவினர்கள் 2 பேர் பாகிஸ்தானில் இருந்து வந்து அவரை பார்த்தனர்.
இந்நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை 5.30 மணியளவில் சனாவுல்லா இறந்தார். மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றும், பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என்றும் மருத்துவமனை செய்தி தொடர் பாளர் தெரிவித்தார். சனாவுல்லா உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுமா என கேட்டதற்கு, சண்டிகர் நிர்வாகமும் மத்திய உள்துறையும்தான் அதுகுறித்து முடிவு செய்யும் என அவர் தெரிவித்தார். மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சனாவுல்லா இறப்பு குறித்து பாகிஸ்தான் தூதரகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், ‘தாக்குதல் குறித்து பாரபட் சமற்ற, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். அவரது உடலை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். தண்டனை முடிந்தும் இந்திய சிறைகளில் உள்ள 47 பாகிஸ்தான் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
Post a Comment