நியூசிலாந்து பால்மாவும், இலங்கையும்
(தினகரன்)
நியூசிலாந்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் இரசாயனப் பதார்த்தங்கள் கலந்துள்ளதா என்பது தொடர்பிலான ஆய்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் டொக்டர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.
ஏற்கனவே, இது தொடர்பில் கண்டறிவதற்காக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பால் மா மாதிரியின் அறிக்கை இலங்கைக்கு கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டுக் குழுவுடன் நடைபெறவுள்ள சந்திப்பின்போது இந்த அறிக்கையினை சமர்ப்பிக்கவிருப்பதாகவும், அமைச்சின் மேற்படி குழு அறிக்கை தொடர்பிலான உண்மை நிலையினை ஆராய்ந்து விரைவில் தெரியப்படுத்துமெனவும் டொக்டர் ரூமி மர்சூக் குறிப்பிட்டார். அத்துடன் இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டுக் குழு விரைவில் இதன் உண்மை நிலையைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமெனவும் தெரிவித்தார்.
நியூசிலாந்தில் கறவைப் பசுக்கள் பயன்படுத்தும் புல் தரைக்கு டி. சி. டி. என்னும் இரசாயனம் தெளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை உட்கொண்ட கறவைப் பசுக்களிலிருந்து பெறப்பட்ட பாலில் தயாரிக்கப்பட்ட பால் மா இரசாயனப் பதார்த்தங்களின் தாக்கத்தினைக் கொண்டிருப்பதாக ஒரு சில நாடுகள் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளன. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மாவிலும் இவ்வாறான இரசாயனத் தாக்கம் இருக்கக்கூடுமா? என்ற சர்ச்சை எழத் தொடங்கியது. இதன் உண்மை நிலையினைக் கண்டறி வதற்காகவே இதன் மாதிரிகள் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
கதிரியக்க தாக்கம்
இதேவேளை, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பது போல் நியூசிலாந் திலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் எவ்வித கதிரியக்கத் தாக்கமும் இல்லையென இலங்கை அணுசக்தி அதிகார சபையின் தலைவர் டொக்டர் ரஞ்சித் லக்ஷ்மன் விஜேவர்தன தெரிவித்தார்.
நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் நுகர்வோருக்கு ஏற்புடையதல்லாத எந்தவொரு கதிரியக்கத் தாக்கமும் இதுவரையில் கண்டறியப்பட வில்லை எனவும் அவர் உறுதியாகக் கூறினார்.
அவ்வாறான கதிர் இயக்கத் தாக்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் நாம் அதனை ஒருபோதும் நாட்டுக்குள் அனுமதிக்க சுங்க அதிகாரிகளுக்கு இடமளித்திருக்கமாட்டோமெனவும் அவர் விளக்கமளித்தார்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு உணவுப் பொருளையும் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுக் குழு பரிசோதனை செய்து நுகர்வுக்கு ஏற்புடையவற்றை மாத்திரமே தெரிவு செய்யும். பின்னர் அவற்றின் மாதிரிகள் கதிர் இயக்க பரிசோதனைக்காக இலங்கை அணுசக்தி அதிகார சபையிடம் அனுப்பி வைக்கப்படும். எமது அதிகார சபை குறிப்பிட்ட உணவி னால் எவ்வித பாதிப்பும் இல்லையென துறைமுகத்தின் சுங்க அத்தியட்சகருக்கு அத்தாட்சிப் பத்திரமொன்றை அனுப்பி வைக்கும்.
அதனைத் தொடர்ந்தே இறக்குமதி செய்யப்பட்ட உணவு வகைகளை நாட்டிற்குள் வெளியிட சுங்கத் திணைக்களம் அனுமதிக்கும். இது நீண்ட செய்முறையாகவிருந்த போதிலும் 1985 ஆம் ஆண்டு முதல் இதுவே இலங்கையிலி ருக்கும் நடைமுறை என்றும் அவர் கூறினார். இந்த வகையில் இதுவரை காலமும் நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் இவ்வாறாக நுகர்வுக்கு ஏற்புடையதல்லாத எந்தவொரு கதிரியக்கத் தாக்கமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், எமது இந்த நீண்டச் செய்முறையினால் பால் மா இறக்குமதி யாளர்கள் அசெளகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும், தமது உற்பத்தியை இறக்குமதி செய்யத் தயங்குவதாகவும் கூறி, கதிரியக்கம் பற்றிய ஆய்வுகளை நிறுத்த வேண்டுமென அண்மையில் நியூசிலாந்திலிருந்து இலங்கை வந்திருந்த இரண்டு பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் தமது உற்பத்திப் பொருட்களில் எவ்வித கதிர் தாக்கச் செயற்பாடுகளும் இல்லாததால் இந்தச் சோதனை வீண் காலதாமதத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.
எது எப்படியானாலும் இலங்கையிலுள்ள நடைமுறை அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களில் நுகர்வுக்கு ஏற்புடையதல்லாத கதிரியக்கம் கலந்திருக்கிறதா என்பது தொடர்பில் அணுசக்தி அதிகார சபை நடத்திக் கொண்டிருக்கும் பகுப்பாய்வுகளை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லையெனவும் டொக்டர் ரஞ்சித் லக்ஷ்மன் அவர்களிடம் பதிலளித்திருந்தார்.
வெளிநாட்டவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து நாம் நம்முடைய கடமையைச் சரியாகச் செய்வதை தவிர்த்துக்கொள்ள மாட்டோம் என்றும் அவர் கூறினார். இலங்கைச் சட்ட விதிகளின்படி பால் மாவில் 20 சதவீத கதிரியக்கம் மாத்திரமே இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நியூசிலாந்து பால் மா தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
ANY WAY THEY LIKE TO MAKE DROP SALE OF NEWZEALAND MILK -TRY TO MAKE TENTION ON MARKET----------WIL COME NEW KIND OF CHINA PRODUCT TO KILL PEOPLE------BE CAREFUL CONSUMER EVERYTHINK BECOME GAME IN SRI LANKA
ReplyDeleteஅனத்துப்பால்மாவிலும் தற்போது அபயகரமான பதார்த்தங்கள் கலக்கப்படுவதனால் கூடியபாகம் பால் பவுடர்களை தவிர்த்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.
ReplyDelete