துருக்கியிலிருந்து குர்திஷ் இனப் போராளிகள் வெளியேறுகின்றனர்..!
கடந்த 29 வருடங்களாக கொரில்லாப் போர் முறையைக் கையாண்டு தனிநாடு கேட்டு துருக்கியுடன் போராடிக்கொண்டிருந்த குர்திஷ் இனப் போராளிகள் நாட்டை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் இறப்பதற்குக் காரணமாக இருந்த போரினைக் கைவிட்டு அவர்கள் தங்களுடைய இருப்பிடமான ஈராக்கின் வட பகுதிக்கு திரும்புவதை அவர்களின் ஆதரவாளர் உறுதி செய்தார். துருக்கி அரசிற்கும், குர்திஸ்தான் பணியாளர் கட்சிக்கும் இடையே நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையின் முதல் வெளிப்படையான அறிகுறி இது என்று கூறப்படுகின்றது.
2,000-க்கும் மேற்பட்ட குர்திஷ் போராளிகள், கால்நடையாக மலையோரப் பாதைகள் வழியே சென்று ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள அவர்களின் இருப்பிடமான காண்டில் மலையடிவாரத்தை அடைவார்கள். துருக்கி பாதுகாப்புப் படையை எதிர்த்த 5,000 போராளிகளும் அங்கே அவர்களுடன் சேர்ந்துகொள்வார்கள். துருக்கியின் தலைநகரில் இதுகுறித்த செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை.
ஆயினும், தான் இதனை கூர்ந்து கவனித்து வருவதாக துணைப் பிரதமர் பியுலென்ட் அரின்க் தெரிவித்துள்ளார். என்ன நடக்கும் என்பதை உறுதியாக இப்போது கூறமுடியாது. ஆனால், எதிர்பார்த்த முடிவினை நெருங்கிக்கொண்டிருப்பதாக அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். போராளிகள் அனைவரும் வெளியேற மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாகவே, அவர்கள் வெளியேறிக்கொண்டிருப்பதாக செய்தி தரும் ஊடகங்கள், மே 8-ம்தேதி என்பதை அவர்கள் வெளியேறுவதற்கான நாள் குறியீடாக வைத்துள்ளனர் என்றும் கூறுகின்றன. பகல்பொழுதுகளில் பிரச்சினைகள் ஏற்படா வண்ணம் மறைந்திருந்து இரவில் மட்டுமே அவர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ளுகின்றனர்.
ஒருகாலத்தில் தீவிரமாக துருக்கி அரசை எதிர்த்தவரும், தற்போது சிறையில் உள்ளவருமான தங்களின் கட்சித்தலைவர் அப்துல்லா ஒக்கலான் அறிவித்தபடி தாங்கள் பின்வாங்கிக்கொண்டிருப்பதாகவும், மீண்டும் எதிர்த்துப் போரிடமாட்டோம் என்றும் குர்திஷ் போராளிகள் நேற்று அன்று அறிவித்துள்ளனர்.
Post a Comment