குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு 4 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கிய சரத் பொன்சேக்கா
இராணுவத் தலைமையகத்தில் வைத்து தன் மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சி ஒரு பெரியளவிலான சதி என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் நேற்றுப் பிற்பகல் 2.55 மணி தொடக்கம் சுமார் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
சரத் பொன்சேகாவின் பணியகத்துக்குச் சென்ற இரண்டு புலனாய்வு அதிகாரிகள் இந்த விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
சாதாரணமாக சில இளநிலையினர் அல்லது கையாள்பவர்களின் வேலையாக இது இருக்காது என்றே நினைக்கிறேன். இது அதைவிடப் பெரிய சதி என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
சரத் பொன்சேகா மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ள போதிலும், தனக்கு ஆபத்தை விளைவிக்க விரும்பிய பல்வேறு தரப்புகளும் கூட இதனைச் செய்திருக்கலாம் என்றும் சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதல் நடந்து ஏழு ஆண்டுகள் கழித்து இது தொடர்பான தன்னிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2005 அதிபர் தேர்தலில் தமிழ்மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்க விரும்பிய சக்திகளுக்கும் கூட தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்றிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
2006 ஏப்ரல் 25ம் நாள் கொழும்பில் இராணுவத் தலைமையகத்துக்குள், கர்ப்பிணிப் பெண் போன்று நுழைந்த பெண் சரத் பொன்சேகாவின் வாகனம் மீது தாக்குதல் நடத்தியிருந்தார்.
இதில் படுகாயமடைந்த சரத் பொன்சேகா, பல மாதங்கள் சிங்கப்பூரில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பின்னரே உயிர்தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment