மட்டக்களப்பில் இலங்கை மின்சார சபைக்கு 37 இலட்சம் ரூபா வருவாய்
(அனா)
சட்டவிரோதமாக மின் மாணிகளை உடைத்து மின்சாரம் பெற்ற குற்றத்தின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் மூலம் இலங்கை மின்சார சபைக்கு கடந்த ஒரு வாரத்தில் (07.05.2013 - 14.05.2013) முப்பத்தேழு லட்சம் ரூபா வருமானமாக கிடைத்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் புலன் விசாரனைக்குப் பொறுப்பான புலனாய்வு அதிகாரி எம்.ஆர்.எம்.பி.தஸனாயக்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளாவெலி பொலிஸ் பிரிவில் ஐம்பது (50) பேரும் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நாற்பத்தைந்து (45) பேருமாக கைது செய்யப்பட்ட தொன்நூற்றி ஐந்து (95) பேரிடமிருந்தே இலங்கை மின்சார சபைக்கு முப்பத்தேழு லட்சம் ரூபா வருமானமாக கிடைத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மின்சாரம் பெற்று வருபவர்களுக்கு இலங்கை மின்சார சபை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வீ.இந்திரன் அவர்களின் ஒத்துழைப்புடன்அந்தந்த பிரிவு பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின் மூலம் இரண்டு பொலிஸ் பிரிவுகளில் கைது செய்யப்பட்ட நபர்களை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தியதற்கினங்க முப்பத்தேழு லட்சம் ரூபா இலங்கை மின்சார சபைக்கு வருமானமாக கிடைத்ததாக புலனாய்வு அதிகாரி எம்.ஆர்.எம்.பி.தஸனாயக்க மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment