கோட்டா சிந்தனை மூலம் மகிந்த சிந்தனை மறைக்கப்படும் - பகுதி 2
கலாநிதி. தயான் ஜயதிலகாவுடன் சமிந்த குறுப்பு நடத்திய நேர்காணல்
பகுதி - 2
கேள்வி: ஜனாதிபதி பயங்கரவாதத்தை ஒழித்திருக்கலாம், ஆனால் இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தில் தீர்வு காண்பதில் அவர் வெற்றியடைந்துள்ளாரா?
பதில்: நிச்சயமாக இல்லை. இன்று ஆசியாவிலேயே உயிரோடிருக்கும் மிகவும் விவேகமுள்ள தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் லீ குவான் யூ. 2010ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு நேர்காணலில் ராஜபக்ஸ சிங்கள தீவிரவாதத்துடன் மிகவும் அதிகமாக பிணைந்துள்ளதால் பயங்கரவாதத்தை ஒழித்ததின் மூலம் கிடைத்த தனது சொந்த வெற்றியை முதலீடு செய்வதற்காக கிடைத்துள்ள வாய்ப்பை அதற்காக திறந்து விட்டுள்ளதையிட்டு தான் மிகவும் வருத்தப்படுவதாக லீ குவான் யூ சொல்லியிருக்கிறார்.
ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் புலிகளை தோற்கடித்ததின் காரணமாக தாங்கள் தமிழர்களை தோற்கடித்துவிட்டதாக நினைக்கிறார்கள் என்று லீ குவான் யூ சொன்னார். எல்.ரீ.ரீ.ஈ யை தோற்கடிக்க முடிந்தாலும் தமிழர்கள் தோற்கடிக்க முடியாத ஒரு சமுதாயத்தினர் என்று அவர் மேலும் சொன்னார். இதன் கருத்து லீ குவான் யூ தமிழீழத்தை எதிர்பார்க்கிறார் என்பதல்ல, ஆனால் ஸ்ரீலங்கா சமாதானத்தை வெல்வதில் தோல்வியடையும், ஏனெனில் அதிகாரத்தில் உள்ள உயர்வர்க்கத்தினர் சிங்கள தீவிரவாத சித்தாந்தத்துடன் அளவுக்குமீறி பின்னிப் பிணைந்துள்ளதுடன் உண்மையான பல்லின, பல் கலாச்சார ஸ்ரீலங்கா விடயங்களைப் பார்க்கத் தவறியுள்ளார்கள் என்பதை அவர் துல்லியமாக கணித்திருந்தார். லீ குவான் யூ மீண்டும் ஒருமுறை தான் சரி என்பதை நிரூபித்துள்ளார் என்று நான் நினைக்கிறேன். எவராவது லீ குவான் யூ வை தவறாக எடை போட்டுவிடக்கூடாது. ஸ்ரீலங்கா விடயத்தில் அவர் தொடர்ந்து சரியாகவே கணித்துள்ளார் மற்றும் வருந்தத் தக்கவிதத்தில் இன்றைய ஸ்ரீலங்காவை பற்றி அவர் சொல்லியிருப்பது மிகவும் சரி, ஏனெனில் ஸ்ரீலங்கா நிருவாகம் மற்றும் அரசாங்கம் என்பன, பிரச்சினைகளின் வேர்களை கண்டறிந்து தீர்த்து வைக்கும் விடயத்தில் தோற்று படுபாதாளத்தில் வீழ்ந்துள்ளது.
சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் ஆகிய இருபகுதியினரும் இந்த சிறிய நாட்டில் அரசியல் ரீதியாக ஒன்றாக இணைந்து கூடி வாழ்வதை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வழியை காணத் தவறியிருப்பதுதான் பிரச்சினை. அதற்கு சகல சமூகங்களின் பகுதியினரிடத்தும் உளவியல் மாற்றங்கள் அவசியம். அந்த உளவியல் மாற்றங்கள் தலைவர்களால் வழி நடத்தப்பட வேண்டும். ஆனால் தலைமைத்துவம் அதைச் செய்வதற்குத் தவறிவிட்டது. ஜனாதிபதி ராஜபக்ஸவிடம் அதற்கான சாத்தியம் இன்னமும் உள்ளது. ஆனால் அவர் தனது அதிகாரத்தை மிகவும் அளவுக்கு அதிகமாக தனக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த சக்திகளுக்கு மகிந்த ராஜபக்ஸவிடம் உள்ள அதேயளவு அரசியல் அனுபவம் கிடையாது ஆகவே அவர்களின் கண்ணோட்டம் மிகவும் குறுகியதாக உள்ளது.
கேள்வி: இந்த சக்திகள் யார்?
பதில்: மிகச் சிறந்த பாதுகாப்புச் செயலாளராகவுள்ள ஜனாதிபதி ராஜபக்ஸவின் சகோதரர் கோட்டபாய ராஜபக்ஸ. நான் நினைக்கிறேன், ஆயுதப்படைகளின் கிளைகளை மேலாண்மைப் படுத்துவது மற்றும் ஒருங்கிணைப்பது, யுத்த சமயத்தில் தளபாடங்கள் மற்றும் விநியோகங்களை உறுதிப்படுத்துவது ஆகிய பணிகளைச் செய்வதற்கு அவர் வகித்த பங்கு நிச்சயமாக ஸ்ரீலங்கா இராணுவத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய சக்தியாக இருந்தது என்று. ஆனால் அவரிடம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பணிகளுக்கு வெளியே உள்ள கொள்கை விடயங்களைப் பற்றிப் பேசும் ஒரு பழக்கம் இருக்கிறது. மற்றும் ஒரு கொள்கை இயக்கியாக அவர் காட்சியளிப்பது அதிகரித்து வருகிறது. எல்லா விடயங்களும் வடக்கிலுள்ள யுத்தத்துக்கு பின்னான ஏற்பாடுகள் முதல் தெற்கிலுள்ள விடயங்கள் வரை அனைத்தையும் பாதுகாப்பு தரப்பு என்கிற ஒரு நிறமாலையூடாக சரியாகவோ அல்லது தவறாகவோ விளக்கமளிக்கப்படுகிறது. ஸ்ரீலங்காவில் ஒரு உயர் பாதுகாப்பு அமைப்பு உள்ளது. தொழில் ரீதியாக கடமையாற்றும் ஸ்ரீலங்கா ஆயுதப் படைகள் இதில் செய்வதற்கு எதுவும் இல்லை.
ஜனாதிபதி ராஜபக்ஸ ஜப்பானில் இருந்து நாடு திரும்பியதும் தனது வாக்குறுதியை வலியுறுத்தி வட மாகாணசபைக்கான தேர்தலை இந்த வருடம் செப்ரம்பரில் நடத்தப்போவதாக அறிவித்தார், அதேவேளை ஒரு பத்திரிகைக்கு கோட்டபாய ராஜபக்ஸ அளித்த நேர்காணலில் தேர்தல் நடத்துவது ஒரு மோசமான யோசனை என்றும், மற்றும் மாகாணசபை முறையே ஒரு நல்ல யோசனை இல்லை என்று கூறியிருந்தார். ஜனாதிபதி ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்படும் கொள்கை நிலைப்பாடு வேறுபடுவதை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மகிந்த சிந்தனை ஆபத்தில் உள்ளது, கோட்டா சிந்தனை மூலம் அது நிழலடிப்புச் செய்யப்படுவது அல்லது பின் தள்ளப்படுவது அதிகரித்து வருகிறது. இது ஒரு பாரிய பிரச்சனை, ஏனெனில் இப்படியான விடயங்களுக்கு தேர்தல் ஆணை கிடையாது. ஸ்ரீலங்காவால் அதன் சிறுபான்மை இனத்தவருடன் சகஜமான உறவை வெற்றிகரமாக பராமரிக்க முடியாதுள்ளதுடன் அதன் அயலவர்களுடன் மற்றும் முழு உலகத்துடனும் உள்ள நல்லுறவுக்கு குழி பறிக்க நினைக்கும் மனப்பான்மை இது.
கேள்வி: ஜனாதிபதி ராஜபக்ஸவின் வெளியுறவு கொள்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: எந்த வெளியுறவு கொள்கை? ஏனென்றால் எந்த வெளியுறவு கொள்கையையும் என்னால் தீவிரமாக காணமுடியவில்லை. அரசாங்கத்தினுள்ளேயே இந்த விசித்திரமான எண்ணச் சேர்க்கை உள்ளது, வாரத்தின் சில நாட்களிலோ அல்லது சில மணித்தியாலங்களிலோ நாங்கள் ஆசியாமீது மையம் கொண்டிருக்கும் அமெரிக்காவின் புதிய உலகளாவிய அரசியல் மற்றும் மூலோபாய கூட்டாக இருக்க விரும்புகிறோம். மற்றைய வேளைகளில் அமெரிக்கா உட்பட வேறு எந்த விடயங்களைப்பற்றியும் நாம் கவலைப்படுவதில்லை, ஏனெனில் சீனா எங்கள் பக்கம் இருக்கிறது. கொள்கை சம்பந்தமான ஒரு மூளைக்கோளாறு எங்களிடம் உள்ளது. ஸ்ரீலங்காவிடம் ஒரு வெளியுறவு கொள்கை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு மூலோபாயக் கொள்கையும் கூட அதனிடம் இல்லை. உள்நாட்டு பாதுகாப்புக் கொள்கை மட்டுமே அதனிடம் உள்ளது. அரசாங்கத்திடம் எந்தவிதமான பகுப்பாய்வு சிந்தனைகளும் இருப்பதாக நான் கருதவில்லை.
கேள்வி: நீங்கள் பல அரசியல்வாதிகளின் கீழ் பணியாற்றியுள்ளீர்கள். நீங்கள் ஒரு அரசியல் விஞ்ஞானி மற்றும் ஒரு முன்னாள் தூதுவர். நாடு சரியான பாதையில் முன்னோக்கி செல்லவில்லை என்றால், உங்களைப்போன்றவர்களுக்கு ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை செய்து சரியாக வழி நடத்தவேண்டிய பொறுப்பு இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா?
பதில்: எனக்கு பிடித்த பாடகர்களில் ஒருவர் லேனார்ட் கோகென். அவருடைய முதலில் நாங்கள் மான்ஹட்டனை எடுத்துக்கொள்வோம் என்கிற பாடல் ஒன்று உள்ளது. அந்தப் பாடலின் ஆரம்ப வரிகள் ‘நடைமுறையை அதனுள் மாற்ற முயற்சித்ததுக்காக, எனக்கு அவர்கள் 20 வருட சலிப்பை தண்டனையாக வழங்கினார்கள்’ என்று தொடங்குகிறது. நானும் முயற்சித்தேன். இந்த நாட்டுக்காக எனது சிறிய பங்கினை நான் ஜெனிவாவிலும் அதேபோல பிரான்சிலும் வழங்கியுள்ளேன். இந்த விடயங்களை நடைமுறையில் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் இவை எல்லாவற்றையும் நான் ஜனாதிபதியிடம் சொல்லியிருக்கிறேன். அவர் கூர்மையான புத்திசாலி மனிதர். அவரது அந்த அம்சம் கொழும்பில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அனைவரையும் அரவணைத்து செல்லும் ஒரு மனிதராகவே அவரை நான் பார்க்கிறேன்.
ஜனாதிபதி ராஜபக்ஸவின் அரசியல் திட்டங்கள் செயற்பாடுகளாக தொடர்ச்சியாக மாற்றப்படவில்லை, ஏனெனில் அதிகார மையத்தில் அல்லது அரசின் தலைமை அதிகாரத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி ராஜபக்ஸ விரும்பியோ விரும்பாமலோ ஒரு மனிதக் கேடயமாக தன்னை பயன்படுத்தும் ஒரு பாத்திரத்தை ஏற்கவேண்டியுள்ளது. ஆட்சியை நகர்த்தும் சுக்கான்மீது யாருடைய பிடி தொடர்ந்தும் இருந்துவருகிறது என்பது எனக்குத் தெரியாது. உண்மையில் கொள்கையை இயக்குபவர் யார் என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. எனவே தொடர்ந்து ஒரே விடயங்களைச் சொல்லி நேரத்தை வீணாக்குவதில் எந்தப் பயனும் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது, இவைகளை ஜனாதிபதியிடமும் மற்றும் வெளியுறவு அமைச்சரிடமும் நான் ஏற்கனவே இந்த வருடங்களில் சொல்லியிருக்கிறேன். அவர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை என்பதல்ல அவர்களுக்கு அது விளங்கும். ஆனால் அங்கு வேறு சில சக்திவாய்ந்த மூலகங்கள், சக்திகள், மற்றும் காரணங்கள் அந்த கலவையில் இடம்பெற்றுள்ளன, அதற்குள் என்னால் எதுவும் செய்ய முடியாது. எனவே பொதுக்களத்தில் ஒரு பங்கை வகிக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது எனது கடமை என நான் எண்ணுகிறேன்.
கேள்வி: சக்திவாய்ந்த மூலகங்கள் என்று நீங்கள் குறிப்பிடும்போது, திரும்பவும் நீங்கள் பாதுகாப்புச் செயலாளரையா குறிப்பிடுகிறீர்கள்?
பதில்: 2006 மற்றும் 2007ல் பாதுகாப்புச் செயலாளர் ஒரு வித்தியாசமான மனிதராக இருந்தார். யுத்தத்தின் முதலாவது வருடத்தில் அவர் மிகவும் முக்கியமான உறுப்பாக இயங்கவில்லை, அப்பொழுது இராணுவ தளபதியாக இருந்த ஜெனரல் பொன்சேகாவே முக்கியத்துவம் பெற்றிருந்தார். ஆனால் போர் முடிவடையும் சமயம் கோட்டபாய ராஜபக்ஸவின் முன்னோக்குகளில் ஒரு மாற்றம் இருப்பதை நான் அவதானித்தேன். 1980 களில் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனா மற்றும் லலித் அத்துலத் முதலி ஆகியோரிடையே இதுபோன்றது நடந்ததுக்கு நான் சாட்சியாக இருந்துள்ளேன்.
கேள்வி: பாதுகாப்புச் செயலாளர் இந்த நாட்டின் தலைவராக வருவதற்கு ஆவல் கொண்டுள்ளார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்: எனக்குத் தெரியாது. நான் அப்படி நினைக்கவில்லை. அவரை அவ்வாறு செய்விப்பதற்கு விருப்பமுடைய பலர் இருக்கலாம். அப்படியான ஒரு சமிக்ஞை அவரிடமிருந்து வெளிப்படுவதாக நான் காணவில்லை. ஆனால் நான் நினைக்கிறேன் அவர் மிகவும் உறுதியான மற்றும் தீர்க்கமான கண்ணோட்டமுடைய குணாதிசயம் கொண்டவர், அது சித்தாந்த ரீதியாக இயக்கப்படுவது. சித்தாந்தம் என்று குறிப்பிடும்போது இடது மற்றும் வலது சாரிகளை நான் அர்த்தம் கொள்ளவில்லை, நவீன பழமைத்துவத்தையே இங்கு குறிப்பிடுகிறேன். பொது பல சேனா பலத்த சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் வேளையில் அவர்களது பிரபலமான அரசியல் அகாடமியை அவர் திறந்து வைத்தது விவேகமற்ற ஒரு செயல் என்றே நான் கருதுகிறேன். உலகின் எந்த பகுதியிலாவது அவரைப்போன்ற பதவியில் உள்ள ஒருவர், ஒரு அடிப்படைவாத மதச்சார்பு இயக்கத்துடன் தன்னை தொடர்புபடுத்திக் கொள்வதை காண இயலாது, அதுவும் விசேடமாக சிறுபான்மை இனத்தவர்கள்மீது வெளிப்படையாக கிளர்ச்சிகளையும், வெறுப்பான பேச்சுக்களையும், தூண்டும் ஒரு இயக்கத்துடன். அப்படிச் செய்வதன்மூலம் நீங்கள் தவறான சமிக்ஞைகளை அடிப்படைவாதிகளுக்கு மட்டுமன்றி சிறுபான்மை இனத்தவர்களிடமும் வழங்குகிறீர்கள், அத்தோடு அவர்களுக்கு இடையேயான கலவரங்கள் இடம்பெறுவதற்கான உயர்மட்டத்திலான சந்தர்ப்பத்தில் அரசாங்கமும் மற்றும் நாட்டையும் சிக்கவைக்க முயலுகிறீர்கள்.
அதைவிட ஸ்ரீலங்கா தேசத்தையும் மற்றும் அரசாங்கத்தையும் பற்றிய சிக்கலான சான்றுகளை தேடுபவர்கள் மேற்கில் இருக்கிறார்கள், அவர்கள் சேகரிக்கும் பொறுப்புக்கூறல் கட்டளைகளுக்கான சாட்சியங்கள் மூலம,; சர்வதேச விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முயற்சிப்பதுடன் நீதிமன்ற வழக்குகளை தொடுப்பதற்கும் தயாராகவும் உள்ளார்கள். ஜனாதிபதியின் சகோதரராக உள்ள ஒரு உயர் அதிகாரி ஒரு மத அடிப்படைவாத இயக்கத்தின் நிகழ்ச்சி ஒன்றில் அவர்களுடன் சேர்ந்து நிற்பது போன்ற சம்பவம் ஒரு அபாய எச்சரிக்கையை விடுப்பதுடன் உலகின் எந்தப் பகுதியில் உள்ள அரச அதிகாரியும் செய்ய விரும்பாத ஒன்று.
கேள்வி: மகிந்த ராஜபக்ஸவை ஒரு வெற்றிகரமான ஜனாதிபதியாக உங்களால் விபரிக்க இயலுமா?
பதில்: நிச்சயமாக அவர் ஒரு நல்ல அரசியல்வாதி. ஒட்டு மொத்த சமநிலையில் நான் நம்புவது அவர் ஒரு நல்ல மனிதர் என்பதையே. அவருள் இருக்கும் அந்த நல்ல மனிதரால் ஆபத்திலிருந்து கப்பலை கரைசேர்க்க முடியுமா என்பது எனக்குத் தெரியாது. இந்தக் கேள்வியை நான் இன்னமும் பொதுப்படையாக கையாள விரும்புகிறேன், தற்போதுள்ள மாற்றீடுகளின் அடிப்படையில் மகிந்த ராஜபக்ஸ அவர்களே இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இங்கு இரண்டு தெரிவுகள் மட்டுமே உள்ளன, மகிந்த ராஜபக்ஸ மற்றும் ரணில் விக்கிரமசிங்க. நான் மகிந்த ராஜபக்ஸவையே தெரிவு செய்கிறேன். பெரும்பான்மையான மக்களும் இவ்வாறே உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
கேள்வி: சரத் பொன்சேகா பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன?
பதில்: துரதிருஸ்டவசமாக அவர் தனது வாக்குரிமையை இன்னும் முற்றாகப் பெறவில்லை, எனவே தற்சமயம் அவர் இந்த ஓட்டத்தில் இல்லை. சரத் பொன்சேகாவை ஒருபோதும் குறைத்து மதிப்பிட்;டுவிட முடியாது, ஏனெனில் அவர் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மனிதர்களில் ஒருவர், வேறுயாராலும் செய்ய முடியாத சிலவற்றை அவர் செய்துள்ளார். புலிகளுக்கு எதிரான வெற்றியை பெற்றுத் தந்தவர்களின் வரிசையை நீங்கள் எடுத்துக்கொண்டால், மகிந்த ராஜபக்ஸவுக்கு அடுத்ததாக இரண்டாவது முக்கியத்துவம் பெறுபவர் அவரே. சரத் பொன்சேகாவுடனான பிரச்சினை என்னவென்றால் அது ராஜபக்ஸக்களுடனான பிரச்சினைகளின் பிரதிபலிப்பாக உருவானது. இந்த சரித்திரச் சமன்பாட்டிலிருந்து அவரை முற்றாக அழித்துவிட அவர்கள் விரும்பினார்கள், பொன்சேகா அவர்களையும் அவர்களின் பங்களிப்பையும் மறைத்துவிட முயற்சித்தார். இந்த பதிப்புகள் எதனையும் ஸ்ரீலங்கா மக்கள் உள்வாங்கிவிடவில்லை என நான் நினைக்கிறேன்.
ஜெனரல் சரத் பொன்சேகா தன்னை நன்கு நிரூபித்துள்ளார். வரலாற்று மற்றும் சர்வதேச தரங்களுக்கு ஈடான சிறப்பான சாதனையை அவர் புரிந்துள்ளார். மக்களும் அவரது கல்வி அறிவின் தரத்தை மிகவும் குறைத்து மதிப்பிட்டிருக்கிறார்கள். அவரை ஒரு படித்த மனிதராக மக்கள் ஒருபோதும் எண்ணியதில்லை. ஒரு இராணுவ தளபதியாவதற்கு அநேக வெளிநாட்டு இராணுவ அகாடமிகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அவர் அதை செய்துள்ளார். அதற்கு மேலாக வெகு சில இராணுவ அலுவலர்கள் மட்டுமே பட்டம் பெற்றுள்ள உலகின் மிகச் சிறந்த இராணுவ அகாடமியான ஐக்கிய இராச்சியத்திலுள்ள றோயல் கல்லூரியின் பாதுகாப்பு கற்கைகளுக்கான பிரிவில் படித்து பட்டம் வாங்கியுள்ளார். நிச்சயமாக அது ஒரு உயரடுக்கு அகாடமி.
என்னால் அவரை நிராகரித்துவிட முடியாது. ஆனால் ஒரு திறமையான இராணுவ தலைவர் என்பதிலிருந்து ஒரு வெற்றிகரமான அரசியல்வாதியாக தன்னை உருமாற்றிக்கொள்ள அவரால் இயலவில்லை. மற்ற அரசியல்வாதிகளைப் போலல்லாது சரத் பொன்சேகாவிடம் துணிச்சல் இருந்தது, போரின்போதும் அவரிடம் துணிச்சல் இருந்தது மற்றும் அரசியலிலும் தன்னிடம் துணிச்சல் இருக்கிறது என்பதை அவர் நிரூபித்தார். அதேபோல அல்லது ஆகக்குறைந்தது அந்த வழியிலாவது தான் அதை காண்பதாக அவர் சொல்கிறார். அப்படிச் சொல்வதற்காக அவர் அச்சப்படவில்லை. அவை அனைத்தும் அவருக்குள்ள சாதகமான விடயங்கள். ஆனால் ஜெனரல் பொன்சேகாவால் இதுவரை தன்னுடைய உருமாற்றத்தை நிரூபித்துக் கொள்ள முடியவில்லை. அவரால் முடியாது என்று நான் சொல்லவில்லை, ஏனெனில் அவர் சிறையிலிருந்த காலத்தில் அவர் சில வளர்ச்சிகளை பெற்றுள்ளார். அவரைப் போன்று சாதனைகளை செய்த ஒரு மனிதரை உங்களால் ஒதுக்கிவிட முடியாது. அவர் வெளிப்படையான தன்னம்பிக்கையை கொண்டுள்ளதுடன் அதை நன்கு நிலை நிறுத்தியும் உள்ளார். அது காலத்தையும் நாடு எதிர்நோக்கும் சவால்களின் சூழ்நிலைகளை பொறுத்துமே உள்ளது.
தமிழ்நாட்டில் எழுந்துள்ள எழுச்சியின் காரணமாக நாட்டை திரும்பவும் பாதுகாக்க கூடிய ஒருவரை மக்கள் தேடலாம், ஆனால் அதனை இன்று நாம் காணும் குலத்தை - குடும்ப மையத்தை - உறவினர்களுக்கு சலுகையளிக்கும் ஆட்சியமைப்பிலிருந்து படித்தறிந்து கொள்ளலாம், மற்றும் யாருக்குத் தெரியும் ஒருவேளை மக்கள் பொன்சேகாவின் திசையிலும் பார்வையை செலுத்தலாம் ஆனால் அது அவர் வாக்குரிமையை பெற்று ஒரு வேட்பாளராகும் போதுதான் நடக்கும். இதுவரை அவர் வளர்ச்சியடையாவிட்டால், மகிந்த ராஜபக்ஸ தொடர்ந்து பெற்றுவரும் வெகுஜன ஆதரவை பெறுமளவிற்கு பொருத்தப்படுத்தும்படியாக அவர் தன்னை வளர்த்துக் கொள்ளவேண்டும். சிலசமயங்களில் ஒருவருடைய தனித்தன்மையான ஆளுமையும் ஒரு கேள்வியாகலாம்.
கேள்வி: நாட்டுக்கு ஆட்சிமாற்றம் ஒன்று அவசியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்: ஏற்கனவே ஒரு ஆட்சிமாற்றம் நடைபெற்றுள்ளது. அதையிட்டுத்தான் நான் கவலை அடைகிறேன். உள்ளுக்குள் ஒரு ஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ளது. ஆட்சியின் புவியீhப்பு மையம் நடைமுறைக்கேற்ற ஜனரஞ்சகமான மகிந்த ராஜபக்ஸவிடமிருந்து கடினமும் கடுமையும் உள்ள நவீன பழமைத்துவத்திடம் மாறுகிறது, அது மிகவும் வெளிப்படையாக கோட்டபாய ராஜபக்ஸவை பிரதிநிதித்துவ படுத்துகிறது. எனவே ஒரு உள்ளக ஆட்சிமாற்றம் நடந்துள்ளது, ஆனால் அது ஒரு சாதகமான திசையில் இல்லை.
ஆனால் நான் நினைக்கிறேன், நீங்கள் கேட்பது ஒரு முற்றான அரசாங்க மாற்றம் இடம்பெற வேண்டுமா என்கிற கருத்தில் என்று. அது நாங்கள் பேசுவது எந்தவிதமான மாற்றம் என்பதில் தங்கியுள்ளது. ஒரு ஆட்சி மாற்றம் தேவை என்று நான் நினைக்கவில்லை அது நாங்கள் பெற்ற உன்னத இராணுவ வெற்றியை பண்டமாற்று செய்தவிடும். அல்லாமலும் பெரும்பான்மை எண்ணிக்கையின் பாதையில் தொடர்ந்து நடைபோடும் ஒரு ஆட்சி எங்களுக்கு அவசியமா.
இன்று வெளிநாடுகளில் நடக்கும் தேர்தல்கள் எதிலும் அரசாங்கம் வெல்ல முடியாத ஒரு நிலையும் மற்றும் உள்ளுரில் நடக்கும் எந்த தேர்தலிலும் எதிhகட்சிகள் வெல்ல முடியாததுமான ஒரு விசித்திரமான ஒரு நிலமை எங்களுக்கு உள்ளது.அ து ஒரு அரசாங்கத்தால் சமாதானத்தை வெல்ல முடியவில்லை என்பதையும் மற்றும் ஒரு எதிர்கட்சியால் போரை வெல்ல முடியவில்லை என்பதற்கும் இது ஒரு அடையாளம்.
எதிர்க்கட்சியின் தலைமையில் ஒரு மாற்றம் ஏற்படுமாயின் நான் இந்தக் கேள்விக்கு ஆம் என்று பதிலளித்திருப்பேன். நான் ஜனாதிபதி ராஜபக்ஸமீது பற்றும் மதிப்பும் கொண்டிருந்தாலும்கூட நாங்கள் சமாதானத்தை இழப்பதில் அதிகம் ஆபத்து உள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். இப்போது நாங்கள் செல்லும் பாதையிலேயே தொடர்ந்து சென்றால் படை வீரர்களும் மக்களும் யுத்தத்தில் பெற்றுத்தந்த வெற்றியையும் இழந்து விடுவோம். எதிர்கட்சி தலைமையில் ஒரு மாற்றம் ஏற்பட்டால் உண்மையில் அந்த மாற்றம் ஐதேக வின் மறுசீரமைப்பாளர்கள் ஒருவரினால் முன்னெடுக்கப்படுமாக இருந்தால், ஐதேகவில் அதிக பாதகாப்புடன் இருப்பதாக நான் உணர்வேன், அதுவும் அதன் தாராளவாத தேசிய வேர்களின் பக்கம் நகரும்.
நான் உள்ளபடியே சொல்வதானால் ஐதேக வின் தலைமைக்கு சஜித் - கரு சேர்க்கை வருவதை காண விரும்புகிறேன். ஆனால் இது நடக்காவிட்டாலும்கூட, ரணில் விக்கிரமசிங்காவை தவிர வேறு யாராவது முன்னணி எதிர்க்கட்சி வேட்பாளராக நிற்கலாம். இந்த நாட்டின் பொருளாதாரம் போகிற வழி, வாடிக்கையாளர் அடிப்படையிலான ஆட்சி பலப்படுத்தப்படும் வழி, என்பனவற்றை பார்க்கும்போது, அதிகாரத்திலுள்ளவர்களின் கொள்கை வகுப்பில் பொருளாதார வளங்களின் கூட்டணி இல்லை என்றே சொல்லவேண்டும். ஆட்சிமாற்றம் தேவையா என்று கேட்டால் தேவை என்றுதான் சொல்வேன். ஆனால் அந்த தெரிவு மகிந்த ராஜபக்ஸவா அல்லது ரணில் விக்கிரமசிங்காவா என்றால் நாங்கள் மகிந்த ராஜபக்ஸவையே வைத்துக்கொள்வோம் என்றுதான் என்னால் சொல்லமுடியும்.
கேள்வி: ஒரு உள்ளக ஆட்சிமாற்றம் நடப்பதாக நீங்கள் எச்சரிக்கை செய்தீர்கள். இது எங்கு செல்ல வழிவகுக்கும்?
பதில்: இது உள்நாட்டில் பிரபலமானதாக இருக்கலாம் ஏனெனில் தமிழ்நாடு மேலும் மேலும் ஸ்ரீலங்கா எதிர்ப்பை கடுமையாக்கும்போது, சிங்கள பௌத்தர்கள் மேலும் கடுமையான குணமுள்ள தலைவர் ஒருவரை விரும்புவது சாத்தியமே.அதை ஒதுக்கித்தள்ள முடியாது. ஆனால் நீங்கள் அதை ஒரு நாடு என்கிற ரீதியில் பார்த்தால் அது எங்கள் வாழ்நாளிலிலேயே வெளிச் சக்திகளால் தமிழ் ஈழம் துண்டாடப்படுவதை காண்பதற்கு வகை செய்துவிடும். அநேகமாக அதுதான் நாங்கள் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய துயரமாக இருக்கும். உலகின் மிக சக்திவாய்ந்த நாடு, ஜோர்ஜ் புஷ்ஷின் நவீன பழமைத்துவம் மற்றும் ஒருதலைப்பட்ச இராணுவவாத கொள்கைகளினால், அமெரிக்காவின் அந்தஸ்தையும் மற்றும் மூலோபாய நலன்களையும் சீர்குலைத்துவிட்டதை காணநேர்ந்தது. அதனால்தான் அமெரிக்கா வியட்னாம் போரிலிருந்து திரும்பிய நாயகனான ஜோண் மக்கெயினை தெரிவு செய்யாமல் ஆனால் பராக் ஒபாமாவை தேர்ந்தெடுத்து இழந்த கௌரவம், அந்தஸ்து மற்றும் பலம் என்பனவற்றை மீட்டுக் கொண்டது.
மூலோபாய பலத்துக்கு மென்மையான அதிகாரம் நிச்சயமாக முக்கியமானது. ஸ்ரீலங்கா அதன் மென்மையான அதிகார பலம் அனைத்தையும் குறைத்துவிட்டது. மென்மையான அதிகாரத்துக்கு பதிலாக மிகவும் போர்தொடுக்கும் தன்மையான கொள்கைகள் மற்றும் அத்தகைய குணத்தைக்கொண்ட தலைவர் ஆகியவை பின்பற்றப்பட்டால் இப்போதிருப்பதில் ஒரு துளியளவேனும் மென்மையான அதிகாரம் மிஞ்சாது. மூலோபாய ரீதியாக அது பலவீனமானதாகவும், உடையத்தக்கதாகவும் மாறிவிடும். அதன் காரணமாக நாங்கள் பலமுள்ளவர்களைப்போல காட்சியளிக்கலாம் ஆனால் நாங்கள் பலமற்றவர்களாகத்தான் இருப்போம். அது அமெரிக்காவிற்குகூட நடக்குமாயிருந்தால் இந்தியாவின் வாயிலில் அதுவும் மிகவும் விசேடமாக தென்னிந்தியாவின் வாயிலில் உள்ள சின்னத் தீவான ஸ்ரீலங்காவுக்கு என்ன நடக்கும் என்று கற்பனை செய்யுங்கள். அமெரிக்கா மற்றும் இந்தியா என்பனவற்றுக்கு இடையே உள்ள இந்த பாரிய குவிதலை நோக்கும்போது ஸ்ரீலங்கா உண்மையிலே அதிலிருந்து வேறபடுகிறது. அதிகம் போர்க்குணமுள்ள ஒரு தலைவர் அதை இன்னமும் அதிகம் தனிமையாக்கி, அதிகம் உடையத்தக்கதாக்கி விடுவார், மற்றும் நாங்களும் முன்னாள் யுகோசிலாவியா, சூடான், என்பன உடைந்ததைபோல உடைந்துபோவோம். அது ஒரு கனவுக்காட்சியை போலிருக்கும்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
சில கட்டுறைகள் கை வலிக்க வலிக்க சிலர் எழுதுகின்றனர். ஜப்னா முஸ்லிம் எழுத்தின் அளவை மிகச் சிறயதாக்கி பிரசுரிக்கின்றது. எனவே கட்டுறைகள் நீண்ட பட்டோலையாக இருந்தால் எழுத்தளவை சிறியதாக்காமல் 2-3 பகுதிகளாகப் பிரித்து பிரசுரித்தால் பலரும் வாசிப்பர் என்பது எனது கருத்து. இவ்வாறு பிரசுரிப்பதால் வாசிப்பதே ஒரு வெறுப்பு.
ReplyDelete