Header Ads



"ஸ்மார்ட் போன்' பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன - ஆய்வில் தகவல்

"ஸ்மார்ட் போன்' பயன்படுத்துவதால்,ஓராண்டில், 22 நாட்கள் சேமிக்கப்படுகிறது என, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வர்த்தக ஆராய்ச்சி நிறுவனமான, ஹாரிஸ் இன்டர்ஆக்டிவ், இது தொடர்பாக, 2,120 பேரிடம் ஆய்வு நடத்தியது. இதில், 97 சதவீதம் பேர் தங்களது முக்கிய பயன்பாட்டிற்கு ஸ்மார்ட் போனையை பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தனர். 

பெரும்பாலும், "இ மெயில்' பயன்பாட்டிற்காக அதிக அளவில், "ஸ்மார்ட்' போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்கள், விளையாட்டுக்கள், இணையதள தகவல்கள், வானிலை நிலவரம், வரைபடங்கள், ஜி.பி.எஸ்., காலண்டர் மற்றும் கடிகாரம் போன்றவற்றுக்கு, "ஸ்மார்ட்' போன்களே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. அதிக அளவில் இ மெயில் பயன்படுத்தப்படுவதால், தங்களுக்கு ஒரு நாளில், 88 நிமிடம் சேமிக்கப்படுவதாக பலர் தெரிவித்துள்ளனர். இதில், எழுத்து வடிவில் அனுப்பப்படும் இமெயில் மூலம் மட்டும் நாள் ஒன்றுக்கு, 53 நிமிடம் சேமிக்கப்படுகிறது. பணியாற்றுபவர்களில், 25 சதவீதம் பேர் தங்களது பணி நிமித்தம், இ மெயில் அனுப்ப, "ஸ்மார்ட்' போன்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால், ஆண்டு ஒன்றுக்கு, 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன என்பதே, இந்த ஆய்வின் முக்கிய அம்சம்.

இந்த ஆய்வை மேற்கொண்ட, கில் பவுன் நிக் கூறியதாவது:

மொபைல் போன்களில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், பணியிடம் மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு இவை அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், "ஸ்மார்ட் போன்' பயன்படுத்துபவர்களில், 82 சதவீதம் பேர், அதில் இடம் பெற்றுள்ள எல்லா விதமான அம்சங்களையும் பயன்படுத்துவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.