Header Ads



வரலாற்றுப் பதிவுகளில் முஸ்லிம்களுக்கெதிரான சதிகள்


(திருமதி எம். நாஸிர்)

அல்லாஹுத்தஆலா மனித குலத்தின் எதிரிகள் என ஷைத்தானையும் யூத நஸாராக்களையும்  குறிப்பிடுகிறான்.  அல்லாஹ்வின் உதவியைப் பெற்றுக் கொள்வதை விட்டும் முஸ்லிம் சமூகத்தை தூரமாக்கி விடுவதே இவ்எதிரிகளின் முயற்சிகளாகும்.  ஷைத்தான் மனித குலத்தை வழி கெடுக்கப் பாவிக்கும் சாதனங்களில் மிகச் சக்தி வாய்ந்த சாதனம் பெண்களாகும்.

அதேநேரம் அல்லாஹுத்தஆலாவுக்கு கட்டுப்பட்டு வாழும் பெண்கள் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு மிகப் பெரிய சவாலாகும். சுவர்க்கத்தில் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்த  ஆதம் ஹவ்வா அலைஹிமுஸ்ஸலாம் இருவரையும் சுவர்க்க வாழ்க்கையிலிருந்து வெளியேற்ற ஷைத்தான் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் ஊடாகவே முயற்சி செய்தான்.

இவ்வாறான முயற்சி உலகம் முடியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். இவ்வகையான சதிகள் வரலாற்றில் அனேகம் உள்ளன. 

அவ்வகையில், பெண்களின் இஸ்லாமியக் கலாச்சார அடையாளமும், அவர்களின் கண்ணியத்தின் பாதுகாப்புக் கோட்டையுமான முகத்திரையை (Face Veil) அகற்ற ஷைத்தானும் அவனது கூட்டாளிகளும் சேர்ந்து செய்த சதியும், அதில் முஸ்லிம்கள் வீழ்ந்து தம் கண்ணியத்தை இழந்து நிற்கும் நிலையின் வரலாற்றுப் பதிவை இக்கட்டுரையில் தருகிறேன்

(புரட்சிப் பெண்?) ஹுதா ஷஃராவி ( 1879-1947)- எகிப்து

பெண்கள் அந்நிய ஆண்களின் பார்வையிலிருந்து மறைந்து வாழ்வதன் மூலமே பெண்களுக்கு கண்ணியம் பாதுகாப்பு பரிசுத்தம் இருப்பதாகத் தனது அருள்மறை திருக் குர்ஆனில் அல்லாஹுத்தஆலா பறைசாற்றிக் கொண்டிருக்கிறான். சமூகத்தின் சீரான கட்டமைப்பு, ஒழுக்கம், பாவங்களிலிருந்து பாதுகாப்பு அனைத்தும் பெண்களின் மறைவான வாழ்க்கையிலேயே தங்கியுள்ளது. 

பெண்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியாகும்பொழுது ஷைத்தானுடைய முயற்சிகளை அது இலகுவாக்குகிறது. இக்கருத்தை வலியுறுத்தும் ஏராளமான ஹதீஸ்கள் காணப்படுகின்றன.  முஸ்லிம்களின் மிகப் பெரிய பாதுகாப்புக் கோட்டை முஸ்லிம் பெண்களின் மறைவான வாழ்க்கை. இக் கோட்டையைத் தகர்க்காத வரை முஸ்லிம்களை வெற்றி கொள்ள முடியாது என விளங்கிய இவர்கள் முஸ்லிம் பெண்களின் மறைவான வாழ்க்கையை சீர் குலைக்கும் பல் வகையான திட்டங்களை உலகம் முழுவதும் அரங்கேற்றினர்.

அந்தரப்புர வாழ்க்கையில் மிகவும் கண்ணியமாக ஒரு கௌரவ விருந்தினர் போன்று தகப்பனுடைய அல்லது சகோதரர்களுடைய அல்லது கணவனுடைய அல்லது மகனுடைய உபசரிப்பின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்த பெண்களை வீதிக்குக் கொண்டுவர வேண்டும். அவர்கள் மூலமாக அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து கட்டுக் கோப்பான குடும்பங்களுக்குள்  பிளவுகளையும் பிரச்சினைகளையும் உருவாக்கி தமது நோக்கங்களை அடைந்துகொள்ள வேண்டும் என்பதே அவர்களது திட்டம்.

அல்லாஹுத்தஆலா குர்ஆனிலே தங்களை அலங்கரித்து வெளிக் காட்டித் திரிபவர்களை ஜாஹிலியக் காலப் பெண்கள் என்று குறிப்பிடுவதோடு அறிவுள்ள பெண்களை அவ்வாறு திரிய வேண்டாம் எனவும் அறிவுரை கூறியுள்ளான். 

“பெண்கள் தங்கள் ரப்பாகிய அல்லாஹுத்தஆலாவின் ரஹ்மத்திற்கு மிக நெருக்கமாக இருப்பதெல்லாம் அவள் தங்கள் வீடுகளுக்குள் இருக்கும் வரையே” என்றும் பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியாகுவதை ஷைத்தான் வாசற்படியிலேயே காத்திருக்கிறான் எனவும் பல ஹதீஸ்களின் கருத்துக்கள் எம்மை எச்சரித்துக் கொண்டுமிருக்கின்றன. 

முஸ்லிம்களை வெற்றி கொள்ள அவர்களின் பெண்களை வெளியாக்குவது அவசியம் என உணர்ந்த போது இதற்காகப் பல வகையான திட்டங்கள் வரையப்பட்டன. இத்திட்டங்கள் முன்னூறு வருடங்களுக்கு முன்பே தீட்டப்பட்டது என்னும் தகவல் கண்டெடுக்கப்பட்ட பிரிட்டிஸ் உளவாளி ஒருவனின் நினைவேட்டிலிருந்தும் அறியக் கூடியதாக இருக்கிறது.

இந் நினைவேட்டில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“முஸ்லிம்களின் மிகப்பலமான கோட்டைகள் பல இருக்கின்றன. அவற்றைத் தகர்க்காத வரை நாம் முஸ்லிம்களை வெற்றி கொள்ள முடியாது. அதில் ஒன்றுதான் முஸ்லிம் பெண்களின் முகத்திரை. முஸ்லிம் பெண்களை அவர்களது பரம்பரை முகத்திரையிலிருந்து எடுத்து விடுமாறு தூண்டுதல் முகத் திரையானது உண்மையில் இஸ்லாமியக் கட்டளையல்ல. இது அப்பாஸிய காலத்தில் ஏற்பட்ட கலாச்சாரமே. நபியவர்களின் மனைவியரை பிற ஆண்கள் பார்ப்பார்கள். அவர்களும் எல்லாவகையான சமூக சேவைகளிலும் ஈடுபடுவார்கள் என்பன போன்ற பொய்யான கதைகளைக் கூறல்.

முஸ்லிம் பெண்களின் முகத்திரையைக் களைந்த பின்னர் இளைஞர்களை அவர்களை நோக்கி ஏவிவிட்டு அவர்களுக்கிடையில் அநாகரிகத்தை தோற்றுவித்தல். இஸ்லாத்தை அழித்து விடுவதற்கு இது மிகவும் சக்தி வாய்ந்த முறையாகும். முதலில் முஸ்லிமல்லாத பெண்களை இந்நோக்கத்திற்காகப் பயன்படுத்தல் காலப்போக்கில் முஸ்லிம் பெண்களும் தாமாகவே இவர்களைப் பின் பற்றுவர்””

முன்னூறு வருடங்களுக்கு முன் வரைந்த இத்திட்டத்தை சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவ் எதிரிகள் வென்றெடுத்தார்கள்,

தமது உலகம் முழுவதையும் ஆளும் திட்டத்திற்குத் தடையாக உள்ள முட்டுக் கட்டைகளைத் தகர்ப்பதற்காக மிகத் திறமையும் விவேகமும் மிக்க ஆண்களையும் பெண்களையும் தெரிவு செய்து பலவகையான சிறந்த பயிற்சிகளை வழங்கி உளவாளிகளாகவும் நாடு பிடிப்பவர்களாகவும் வர்த்தகம் செய்பவர்களாகவும் உலகின் நாலா புறங்களுக்கும் அனுப்பி வைப்பது இவர்களின் வேலைத் திட்டங்களில் சிலவாகும்

இவர்கள் தங்களது ஏமாற்று வேலைகளாலும் தந்திரங்களாலும் அட்டூழியங்களினாலும் நாடுகளை அடிமைப் படுத்தி அந்நாட்டு வளங்களை சூறையாடியதோடு தங்களது மொழியையும் சீரழிந்த கலாச்சாரத்தையும் திணித்தார்கள். கட்டுக் கோப்பான சமுதாயங்களை சீரழிவுக்குக் கொண்டு வந்தார்கள்.

அத்திட்டங்களில் ஒன்று அரேபிய முஸ்லிம் பெண்களை வீதிக்குக் கொண்டு வரும் திட்டம் இத் திட்டத்திற்கும் வழக்கம் போல் உளவாளிகள் பயன்படுத்தப்பட்டார்கள். 
இவர்களது வலையில் விழுந்த ஒரு மீன்தான் எதிப்தைச் சேர்ந்த ஹுதா ஷஃராவி எனும் முஸ்லிம் பெண்.

 1890 இல்   பிரான்ஸைச் சேர்ந்த “யூஜின் லீப்ரூன்” என்னும் ஒரு பெண் உளவாளி மூலமாக ஹுதாசஃராவி என்னும் பெண் உருவாக்கப்பட்டாள்.

இப் பெண் எகிப்தியப் பெண்களை வெளியாக்க முதலில் பாவித்த வழி தனது வீட்டில் சிகையலங்கார நிலையமொன்றை ஆரம்பித்து நடாத்தியது. ஆர்வம் கொண்ட எகிப்தியப் பெண்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.

 இவ் வகுப்புகளில் சிகையலங்காரம், சமையல், தையல் போன்றவை கற்றுக் கொடுக்கப்பட்டன. இவ் வகுப்புகளுக்கு பெண்கள் தங்களை பூரணமாக மறைத்த நிலையிலேயே சென்று வந்தார்கள். திருமணமாகி சிறிது காலம் பிரிந்து வழ்ந்து வந்த ஹுதாசஃராவியும் இதில் கலந்து கொண்டாள். 
லீப்ரூன் இதில் கலந்து கொண்ட பெண்களுடன் எகிப்திய சமூகப் பழக்க வழக்கங்கள் கொள்கைகள் பற்றி பேச்சைத் தொடங்குவாள். இவ் உரையாடல்கள் அவர்களின் முகத் திரையையும் உள்ளடக்கும். இச் சந்தர்ப்பத்தில் முகத்திரை பற்றி ஊட்டிய வேண்டாத சிந்தனையே எதிர்காலத்தில் ஹுதாசஃராவி தனது முகத்திரையை பகிரங்கமாக கழட்டி வீசுவதற்கு வித்தாக அமைந்தது. 

பெரிய பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் எகிப்தும் அடிமைப்பட்டிருந்த காலம் அதன் ஆதிக்கம் எல்லாவற்றிலும் ஊடுருவி இருந்தது. இக் காலகட்டத்தில் ஹுதாசஃராவியின் குடும்பமும் மார்க்கக் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விட மேற்கத்தேயர்களினால் அறிமுகப்படுத்தப் பட்ட கல்விக்கே முக்கியத்துவமளித்திருந்தார்கள். 

ஹுதாசஃராவியும் குர்ஆனில் சிறுசிறு சூராக்களை மனனம் செய்திருந்தாலும் குர்ஆனுடைய விளக்கத்தை பெற்றவளாக இருக்கவில்லை.  ஹுதாசஃராவி பரம்பரையாக முஸ்லிம் பெண்களின் அந்தப்புர வாழ்க்கைக்குப் பழகியிருந்தாளே தவிர அதன் யதார்த்ததை  புரிந்திருக்கவில்லை.  எகிப்தியன் ஒருவரை மணமுடித்து முஸ்லிமாக வேடமிட்டிருந்த இவ் உளவாளி தெரிவு செய்யப்பட்ட ஹுதாசஃராவியின் உள்ளத்தில் தீய சிந்தனைகளை விதைத்தாள். 

எகிப்தியப் பெண்கள் அடக்கப்படுகிறார்கள் அடிமைகள் போல் நடாத்தப்படுகிறார்கள். சிறை வாழ்க்கை வாழ்கிறார்கள். திருமண சுதந்திரம் அவர்களுக்கு இல்லை. முகத்திரை அவர்களின் சுதந்திரத்திற்குத் தடை.. போன்ற கருத்துக்களினால் சஃராவி மூளைச் சலவைக்கு உள்ளானாள். 
லீப்ர்ரூனினால் ஹுதா சஃராவியினுள் நடப்பட்ட நச்சு விதை இன்னுமொரு பிரான்ஸ் பெண்ணான “மார்குரிட் கிளமன்றட்” என்னும் வேறொரு உளவாளிப் பெண் மூலம் வளர்க்கப்பட்டது.

மார்குரிட் கிளமன்ற் ஹுதாசஃராவியை ஒரு முன்னணிப் பெண்ணாக மாற்றுவதற்கு பல யுக்திகளுடன் முயற்சி செய்தாள். 

ஓர் ஆய்வுச் சுற்றுலா என்னும் பெயரில் எகிப்திற்கு விஜயம் செய்திருந்த இப்பெண் ஹுதாசஃராவியுடன் தொடர்பை ஏற்படுத்தி எகிப்தியப் பெண்களுக்கு ஒரு சொற்பொழிவுக்கு ஹுதா சஃராவியினதும்  அவளது கணவனினதும் ஒத்துழைப்புடன் ஒரு பல்கலைக் கழக விரிவுரை மண்டபத்தில் ஏற்பாடு செய்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி வாராந்த வெள்ளிக் கிழமை அந்தி நிகழ்ச்சியாக தொடர்ந்து இடம்பெறலாயிற்று. 

எகிப்திய சமூகக் கட்டமைப்பை உடைப்பதற்கான மிகப் பெரிய திருப்பு முனைக்கு இது உதவியது.
இந்நிகழ்ச்சிக்கே எகிப்தியப் பெண்கள் முதன் முதலில் பொது இடமொன்றில் ஒன்று கூடினார்கள்.
எதிரிகளின் சதிவலையில் விழுந்திருந்த ஹுதா சஃராவி 1914 இல் எகிப்தியப் பெண்களின் கல்வி ஒன்றியம் என்னும் இயக்கத்தை, புரட்சியை விரும்பிய மேலும் சில பெண்களை இணைத்துக் கொண்டு ஆரம்பித்தாள். இக் காலப்பகுதி பிரிட்டனின் ஆட்சியின் கீழ் எகிப்து அடிமைப்படிருந்த காலமாகும்.

இவளுக்கு உறுதுணையாக, அப்போது மேற்கத்தேயர்களின் வலைகளில் விழுந்திருந்த அலி மாஹிர், முஹம்மது அப்துஹ் போன்ற ஆண்களும் நின்றார்கள்.  ஹுதாசஃராவியும் அவளுக்குக் கிடைத்த மூளைச் சலவையின் காரணத்தால் பெண்கள் பலரையும் இணைத்துக் கொண்டு வீதியில் இறங்கி சுதந்திரப் போராட்டம் ஒன்றை நாடாத்தினாள். வீதியில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்ட அணிவகுப்பொன்று பெண்களினால் நடாத்தப்பட்டது. 

இதைப் பலவந்தமாகத் தடுப்பது போன்று பிரிட்டிஸ் ராணுவம் தடுத்து நாடகமாடினாலும் அரேபிய முஸ்லிம் பெண்களை வீதிக்குக் கொண்டு வந்த வெற்றியை அவர்கள் மறைமுகமாகக் கொண்டாடினார்கள்.

1920 இல் எகிப்திய வாfட் கட்சியின் பெண்கள் அணி உருவாக்கப்பட்டது. ஹுதாசஃராவி அதற்குத் தலைவியாக்கப்பட்டாள். 1923 இல் பிரிட்டிஸ் பல நிபந்தனைகளுடன் எகிப்திற்கு சுதந்திரம் வழங்கியது. இதன் படி பிரிட்டிசாரின் சட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டே நாடு இயங்க வேண்டியிருந்தது. 

பெண்களுக்கும் பல உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன என்று கூறி மீண்டும் சஃராவி தனது தலைமையின் கீழ் பெண்கள் அமைப்பொன்றை உருவாக்கி பெண்களின் அரசியல் சமூக சட்ட சமத்துவத்திற்காக போராட ஆயத்தமானாள். 

அதே 1923 ஆம் ஆண்டு மே மாதம் ரோமில் நடை பெற்ற பெண்ணிலை வாத மாநாடு ஒன்றிற்கு சஃராவி அழைக்கப்பட்டிருந்தாள். அம் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு நாடு திரும்பிய ஹுதாசஃராவி கைரோவின் புகையிரத நிலையத்தில் வைத்து அன்று யாருமே எதிர்பாராத செயலொன்றை செய்தாள். 

அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தினர் மத்தியில் தமது சுதந்திரத்திற்கு அடையாளம் எனக் கூறி, தனது முகத்திரையைக் களற்றி வீசினாள். அதிர்ச்சியினால் அக்கூட்டம்  ஒருகணம் உறைந்து போனது.  முஸ்லிம்களாக வேடமிட்டிருந்த சதிகாரர்களின் கையாட்களான சில பெண்களும் சஃராவியைத் தொடர்ந்து தமது முகத்திரையக் கழற்றி வீசினர்.

இச் சம்பவம் எகிப்தை மாத்திரமன்றி முழு அரேபியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  எகிப்தியப் பத்திரிகைகளில் முகத்திரை இல்லாமல் வெளி வந்த முதலாவது அரபுப் பெண்ணின் புகைப்படம் இந்த ஹுதா சஃராவியுடையதாகும். 

இதன் பின்னரே இவ்வெற்றியைக் கொண்டாடும் முகமாக இரகசியங்களை வெளியிடும் செயற்பாட்டுக்கு “முகத்திரையைக் கிழித்தல்” (Unveil) எனும் சொற்பதம் சதிகாரர்களால் பல மொழிகளிலும் பத்திரிகை எழுத்துக்கள் மூலம் படிப்படியாக உட்புகுத்தப் பட்டது. அதை நாமும் அதன் வரலாற்றுப் பொருள் புரியாமல் பாவித்துக் கொண்டிருக்கிறோம்.

அல்லாஹுத்தஆலா ஈமான் கொண்ட முஃமினான பெண்களை விழித்தே வீடுகளிலிருந்து வெளியாகும் போது தங்களை முழுமையாக மறைத்து வெளியாகுமாறு சூரா அஹ்சாப் 59ம் வசனத்திலும் இன்னும் பல ஆயத்துக்கள் மூலமாகவும் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறான். 

முஸ்லிம் பெண்கள் மறைந்து வாழ்ந்த காலம் எல்லாம் வெற்றிக்கு மேல் வெற்றி பெற்ற சமூகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் எப்பொழுது வீதிக்கு இறக்கப்பட்டார்களோ அன்று முதல் தோல்விகளையும் கேவலங்களையும் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

எனவே அல்லாஹுத்தஆலாவுடைய கட்டளைக்கு காலம் தாழ்த்தாது முற்றிலும் அடிபணிவோம். எதிரிகளின் சூழ்ச்சிகளின் வடிவங்களை இனம் காண்போம். அவற்றை முறியடிப்போம். 

No comments

Powered by Blogger.